12th Fail திரைப்படம் சொல்லித் தரும் 5 வாழ்க்கைப் பாடங்கள்!

12th Fail
12th Fail

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டில் வெளியான தலைசிறந்த திரைப்படங்களில் 12th Fail என்ற திரைப்படம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. பொதுவாகவே எனக்கு சராசரியாக இருந்து வாழ்வில் வெற்றி பெறுபவர்களின் கதை மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் 12th Fail. அதாவது எழ்மையான நிலையில் இருக்கும் மனோஜ் என்னும் இளைஞன் எப்படி வாழ்வில் கஷ்டப்பட்டு படித்து ஐபிஎஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதே இப்படத்தின் கதை. இத்திரைப்படத்தின் வாயிலாக நான் கற்றுக்கொண்ட 5 வாழ்க்கைப் பாடங்களை இன்று உங்களுடன் பகிரப்போகிறேன். 

  1. தோல்வியை வாய்ப்பாகப் பாருங்கள்: தோல்வி என்பது வாழ்க்கையின் இயல்பான பகுதியாகும். அதை நமது முயற்சியின் படிக்கட்டாக எடுத்துக்கொண்டு, மேலும் முயற்சி செய்ய வேண்டும் என்பதை இத்திரைப்படம் வலியுறுத்துகிறது. பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்த மனோஜ் என்னும் இளைஞர், அப்படியே தன் வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம் என நினைக்காமல், போலீஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்ற கனவை சுமந்துகொண்டு பயணிக்க நினைத்தது மிகப்பெரிய விஷயம்தான். 

  2. கடின உழைப்பின் முக்கியத்துவம்: திரைப்படத்தில் மனோஜின் கதை மூலமாக வெற்றியை அடைவதற்கு, காத்திருப்பு, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக, நாம் தோற்கும் போதெல்லாம் துவண்டுவிடாமல், மீண்டும் புதிதாக Restart செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.

  3. கல்வியின் பலம்: மனோஜிற்கு கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், கற்றலில் அவருக்கு இருந்த அர்ப்பணிப்பு, தொடர்ச்சியாக கற்க வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி மீதான நம்பிக்கை, முன்னேற்றத்தைக் கொடுத்தது. எனவே சமீபத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவில், கல்வி எல்லாம் வாழ்க்கைக்கு முக்கியமில்லை என சொல்லியதற்கு பலர் ஆதரவு தந்து பேசியதை நம்பாதீர்கள். கல்வியின் மூலமாக சில நேரங்களில் நேரடியான ஆதாயம் இல்லை என்றாலும், வாழ்க்கையை நல்ல புரிதலுடன் கொண்டு செல்ல மிகவும் பயன்படும். எனவே கற்றலின் ஆற்றலை குறைவாக மதிப்பிடாதீர்கள்.

  4. ஒழுக்கம்: படம் முழுவதும் மனோஜ் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து நடப்பது போலவே சித்தரிக்கப்பட்டிருக்கும். இதுதான் அவரது நிலையான வளர்ச்சிக்கும், சவால்களை சமாளிக்கவும் உதவியது எனலாம். ஒழுக்கத்திற்கு மதிப்பு கிடைக்கவில்லை என்றாலும், நாம் ஒழுக்கமாக இருக்கிறோம் என்ற மனநிலை, நம்மை எல்லா தருணங்களிலும் தைரியமாக இருக்க வைக்கும். எனவே முடிந்தவரை ஒழுக்கத்துடன் இருக்க முற்படுங்கள். 

  5. பொறுமை: மனோஜ் நினைத்திருந்தால், தன் பாட்டி கொடுத்த பணம் தொலைந்த உடனேயே ஊருக்கு திரும்பி சென்றிருக்கலாம்.டெல்லிக்கு சென்று யுபிஎஸ்சி தேர்வில் லட்சக்கணக்கான நபர்கள் பங்கேற்கிறார்கள் என்று தெரிந்தவுடன் திரும்பிச் சென்றிருக்கலாம். ஆனால் இதுபோன்ற இக்கட்டான தருணங்கள் எதுவும் மனோஜை நிறுத்தவில்லை. எல்லா கடினமான சூழல்களிலும் பொறுமையுடன், தன்னால் முடியும் என்ற நம்பிக்கையில் மனோஜ் பொறுமையுடன் முயற்சி செய்ததனாலேயே, இறுதியில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக அவரால் மாற முடிந்தது. எனவே நீங்களும் கொஞ்சம் பொறுமையாக அனைத்தையும் செய்ய முயலுங்கள்.

இதையும் படியுங்கள்:
Climate Change: காரணங்கள் மற்றும் விளைவுகளைப் புரிந்து கொள்ளலாம் வாங்க! 
12th Fail

வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அனைவருமே ஒருமுறையாவது இத்ரைப்படத்தைப் பார்க்க வேண்டும். குறிப்பாக அரசுத் தேர்வுக்கு முயற்சிப்பவர்களுக்கு இத்திரைப்படம் உந்துதல் அளிக்கும் விதமாக இருக்கும். மனோஜை போலவே 12th Fail ஆனாலும், நாம் முயற்சித்தால், வாழ்வில் நல்ல நிலையை அடையலாம் என்ற நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com