
வெற்றியை நோக்கியே அனைவரும் பயணிக்கிறோம். ஆனால் ஒரு சிலருக்கே வெற்றி வசப்படுகிறது. காரணம் என்ன? எந்த விஷயங்கள் அவர்களுக்கும் பிறருக்கும் வேறுபாட்டைத் தருகிறது. நன்றாக கவனித்துப் பார்த்தால் தன்னம்பிக்கை தரும் இந்த 5 விஷயங்களை அவர்கள் கடைப்பிடிப்பது தெரியும். நம் மீது வைக்கும் தன்னம்பிக்கை எளிதில் வெற்றியை தரும். சரி அந்த 5 வழிகள் என்ன?
1. தோற்றம்
வெளியில் தெரியும் நமது தோற்றம் வெற்றிக்கு முக்கியக் காரணமாகிறது. ஆள் பாதி ஆடை பாதி என்பது உண்மை. நேர்த்தியாக உடை அணிபவர்கள் மற்றவர் கவனத்தை வெகு எளிதில் ஈர்க்கிறார்கள். விலை குறைந்தது, அதிகமானது எனும் கவலை இன்றி நம்மிடம் என்ன இருக்கிறதோ அவற்றை சூழலுக்குத் தகுந்தாற்போல் நேர்த்தியாக அணியுங்கள். மேலும் தலை நிமிர்ந்து நிற்கவும், கம்பீரமாக நடக்கவும், தெளிவுடன் அமரவும் பழகுங்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
2. புன்னகை
நமக்குள் ஆயிரம் பிரச்சினைகள் கவலைகள் இருக்கலாம். மனிதனாகப் பிறந்தால் கவலைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவற்றுடன் வெற்றியைத் தேடி நீங்கள் போனால் கவலையுடன் வெற்றியும் விலகி போகும். கவலைகளை மறந்து மனிதனுக்கு மட்டுமே உரித்தான புன்னகை கவசத்தை அணிந்து பாருங்கள். வெற்றியும் மலர்ந்த முகத்துடன் உங்களைப் பின் தொடரும்.
3. இலக்குகள்
இலக்குகள் என்பது வெற்றிக்கு வெகு முக்கியம். அனைத்திலும் சிறந்து கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தனக்கென்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து தனிப் பாதையை வகுத்தவர்களே வெற்றியாளர்கள் ஆகிறார்கள். முதலில் உங்கள் திறமையை நிரூபிக்க சின்ன சின்ன இலக்குகளை தீர்மானியுங்கள். அவை நிறைவேறியதும் அடுத்த இலக்கை முடிவெடுங்கள். போகும் பாதை தெளிவாக இருந்தால் பயணமும் சுகமாகும். தெளிவான இலக்கு விரைவில் வெற்றி தரும் .
4. வலிமை
வாழ்க்கை என்பதே சவால்கள் நிறைந்தது. அதிலும் வெற்றிக்காக உழைப்பவர்கள் மற்றவர்களை விட அதிகப்படியான சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இந்த சவால்களே நம் வலிமையைப் பெருக்கி சாதிக்கத் தூண்டுகிறது. எனவே (முன் வைத்த காலை பின் எடுக்காமல்) குறிக்கோள்களை அடைய தடையாக இருக்கும் சவால்களைக் கண்டு அஞ்சாமல் அவற்றுக்குத் தீர்வு தேடும் வலிமையும் தெளிவும் வெற்றிக்கு மிக அவசியம். வாழ்க்கையும் ஒரு விளையாட்டு. ஆடித்தான் பார்ப்போம் வலிமையுடன்.
5. நேர்மறை எண்ணங்கள்
நேர்மறை எண்ணங்களின் சக்தி இந்த பிரபஞ்சத்தை தூண்டி நாம் நினைக்கும் எண்ணங்களை நிறைவேற்றுகிறது. நமக்குள் இருக்கும் ஆற்றலை பெருக்க நேர்மறை எண்ணங்கள் அவசியம் தேவை . தேவையற்ற அச்சங்களை விலக்கி நேர்மறையாக சிந்திக்கப் பழகுங்கள். “நீ சாதிக்க பிறந்தவ(ள்)ன்” எனஉங்களிடம் நீங்கள் தனிமையில் பேசி மனதில் பதிய வையுங்கள். பிறகென்ன வெற்றி உங்கள் வசம்தான்.