என்னதான் நாம் நம்மைப் பற்றி பிறரிடம் பல விஷயங்களை கூறினாலும், நாம் செய்யும் செயல்களின் மூலமாகவே நம்மை பிறர் எடை போடுவார்கள். நாம் பிறரிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் செய்யும் செயல்களில் ஒருபோதும் ஏமாற்ற முடியாது. இந்த பதிவு மூலமாக உங்களைப் பற்றி பிறருக்கு அதிகம் தெரியப்படுத்தும் 5 விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
சமூக அழுத்தத்தை கையாளும் திறன்: சமூக அழுத்தம் என்பது பொது இடங்களுக்கு நீங்கள் செல்லும்போது அங்கு தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேச முடிகிறதா என்பதைக் குறிப்பதாகும். ஏனெனில் நமக்கு என்ன தேவை என சில இடங்களில் கேட்டால் மட்டுமே அதைப் பெற முடியும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு உணவகம் செல்கிறீர்கள் என்றால், அங்கு உங்களுக்கு எதுபோன்ற உணவுகள் தேவை, அந்த உணவில் என்னென்ன இருக்க வேண்டும் போன்றவற்றை தெளிவாகக் கூறினால் மட்டுமே நீங்கள் விரும்பும் படியான உணவை பெற முடியும். அந்த இடத்தில் சமூக அழுத்தத்தை சமாளிக்க முடியாத நபராக இருந்தால், எதுபோன்ற உணவு வேண்டும் என்பதை கேட்க கூச்சப்பட்டுக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். அப்படி இருக்கும் நபர்களுக்கு ஏதோ ஒரு உணவு சாப்பிட கிடைக்குமே தவிர, விரும்பும் படியான உணவு கிடைக்க வாய்ப்பில்லை.
சொல்வதை செய்கிறீர்களா?: நம்முடைய நட்பு வட்டத்திலேயே பல நபர்களை பார்த்திருப்போம். நான் இதை செய்யப் போகிறேன், அதை செய்யப் போகிறேன் என வாய் உதார் விடுவார்கள். ஆனால் அதற்கான செயலில் ஈடுபட மாட்டார்கள். இத்தகைய நபர்கள் மீது எந்த நேரத்திலும் நமக்கு நம்பிக்கை இருக்காது. எனவே நீங்கள் ஒரு விஷயத்தை செய்யப் போகிறீர்கள் என சொல்லிவிட்டால், செய்து காட்டுங்கள். இப்படி நேர்மையாக இருக்கும் நபர்களை மக்களுக்கு என்றுமே பிடிக்கும்.
உங்களைப் பற்றி தவறாக சொல்லாதீர்கள்: பெரும்பாலான நபர்களுக்கு தங்களைப் பற்றிய மோசமான விஷயங்களை பகிர்ந்து கொள்வது ஆர்வமாக இருக்கும். உதாரணத்திற்கு எப்படி இருக்கிறீர்கள் எனக் கேட்டால், உடனே “என் வாழ்க்கையே சரியில்லை. செய்யும் வேலை சரியில்லை. குடும்பம் சரியில்லை. மனைவி சரியில்லை” என தங்களைப் பற்றியும் தங்களுடைய வாழ்க்கை பற்றியும் பிறரிடம் மோசமாகக் கூறுவார்கள். இப்படி உங்களை நீங்களே பிறரிடம் தாழ்த்திக் கூறாதீர்கள். நம்முடைய வாழ்க்கை, நாம் நம்மைப் பற்றி பிறரிடம் எப்படி பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது.
பேசும் தொனி: நாம் பிறரிடம் எப்படி பேசுகிறோம் என்பது நம்முடைய மொத்த குணநலங்களையும் எடுத்துரைக்கும் விஷயமாகும். ஒருவர் பேசுவதை வைத்தே அவர் எத்தகைய திறமைசாலி, எத்தகைய சிந்தனையாளர் என்பதை நாம் கணிக்க முடியும். எனவே நீங்கள் பேசும்போது உங்களுடைய தொனியில் ஒரு தைரியத்தை வைத்துக்கொண்டு பேசுங்கள். இது உங்களை பிறரிடம் தன்னம்பிக்கை உடையவராக காட்டும்.
உடல் மொழியில் கவனம் செலுத்துங்கள்: நாம் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் எதுபோன்ற உடல் மொழியை வெளிப்படுத்த வேண்டும் என்ற வழிமுறை உள்ளது. அலுவலகம் சென்றால் அங்கே எப்படி இருக்க வேண்டும். வங்கிக்கு சென்றால் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நன்கு அறிந்து, அதற்கேற்றவாறு நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய உடல் மொழியும் உங்களைப் பற்றி நிறைய விஷயங்களை பிறருக்கு எடுத்துரைக்கும். குறிப்பாக உடல் மொழியை அழகு படுத்திக் காட்டுவது நீங்கள் அணியும் உடைதான். எனவே நல்ல உடைகளை அணிந்து கம்பீரமான தோற்றத்தை பிறருக்கு வெளிப்படுத்துங்கள்.
இந்த ஐந்து விஷயங்களும் உங்களைப் பற்றி பிறருக்கு நீங்கள் கூறாமலேயே நிறைய விஷயங்களை வெளிப்படுத்தும். எனவே இவற்றை கடைப்பிடித்து சிறப்பான நபராக மாறுங்கள்.