கடினமான உரையாடலை அணுகுவதற்கான 5 வழிகள்!

5 Ways to Face a Difficult Conversation.
5 Ways to Face a Difficult Conversation.

மோசமான மற்றும் கடினமான சூழ்நிலைகளில் ஒருவரிடம் உரையாடலை எப்படி அணுகுவது என உங்களுக்குத் தெரியவில்லையா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்காகத்தான். இதில் நான் சொல்லப்போகும் வழிமுறைகளைப் பின்பற்றி, உங்களுக்குப் பிடித்தவர் பிடிக்காதவர் யாராக இருந்தாலும், அவர்களிடம் எல்லா சூழ்நிலையிலும் எப்படி உரையாடலை சிறப்பாகக் கொண்டு செல்லலாம் என்பது பற்றி அறியலாம். 

நாம் பல சமயங்களில் தேவையில்லாத பிரச்சினை ஏதாவது வந்துவிடப் போகிறது என பிறரிடம் பேசுவதைத் தவிர்த்து விடுவோம். ஏன் இவர்களிடம் பேசி வீணாக சண்டையை வளர்க்க வேண்டும் என நினைத்து ஒதுங்கி செல்வோம். இத்தகைய கடினமான நிலையில் உரையாடலை எப்படி அணுக வேண்டும் என்றால், முதலில் ஒருவரிடம் சரியான முறையில் பேசும்போது எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அது காணாமல் போகும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பதன் காரணமாகவே இங்கே பல பிரச்சினைகள் இன்றளவும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. 

நீண்டகால நோக்கத்தில் கவனம் கொள்ளவும்: ஒரு நபரிடம் தேவையில்லாத பிரச்சினைக்கு பயந்து நீங்கள் விளக்கிச் சென்றாலோ, அல்லது நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கிச் சென்றாலோ, அத்தகைய நபரிடம் உங்களுடைய நீண்ட கால உறவு எப்படி இருக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். தற்போது அந்த நபரிடம் இருக்கும் பிரச்னை காரணமாக தவிர்ப்பது எளிதாக இருந்தாலும், நீண்டகால அடிப்படையில் அவர் உங்களுக்கு மிகவும் நெருங்கிய நபராக இருந்தால் அது உங்களை அதிகமாக காயப்படுத்தும். 

பிறர் சொல்வதை கவனமாகக் கேளுங்கள்: ஒருவரிடம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உடலளவில் மட்டும் அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் போதாது, மனதளவிலும் நீங்கள் அந்த நபரிடம் பேசுவதற்கான விருப்பத்தைக் காட்டவேண்டும். முதலில் உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ உங்கள் எதிரில் இருக்கும் நபர் என்ன பேசுகிறார் என்பதைக் காது கொடுத்துக் கேளுங்கள். அப்போதுதான் நீங்கள் அவருக்கு என்ன பதில் சிறப்பாக அளிக்கலாம் என்ற ஒரு முடிவுக்கு வர முடியும். 

குறை கூறாதீர்கள்: யாராக இருந்தாலும் ஒருவரிடம் பேசும் போது அவர்களைப் பற்றி வெளிப்படையாக குறை கூறுவது தவறானது. ஒருபோதும் அப்படி யாரிடமும் அவர்களின் குறையை பெரிதுபடுத்திப் பேசாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால் அந்த நபர் எதுவுமே பேசாமல் இருந்துவிட வாய்ப்புள்ளது. இதனால் பிரச்சனை பெரிதாகுமே தவிர அதற்கான சரியான தீர்வு கிடைக்காது. அவர்களைப் பற்றிய குறையை எடுத்துச் சொல்வதற்கும் ஓர் வழிமுறை உள்ளது. அந்த வகையில் உரையாடலை எடுத்துச் செல்லுங்கள். 

எதையும் சுற்றி வளைக்க வேண்டாம்: நீங்கள் ஒரு விஷயம் குறித்து ஒருவரிடம் பேச விரும்பினால், அதை சுற்றி வளைத்துப் பேசாமல், வெளிப்படையாகக் கூறுங்கள். நீங்கள் வெளிப்படையாக சொல்லாமல் போவதாலேயே பல குழப்பங்கள் உருவாகிறது. அப்போதுதான் உங்களுக்குள் இருக்கும் தீர்வை நோக்கி அது நகர்த்திச் செல்லும்.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்:  சில குறிப்பிட்ட பிரச்சினையைப் பற்றி பேசும்போது அதிக உணர்ச்சி வசப்பட்டாலும், முடிந்தவரை அமைதியாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் அதிகம் கோபப்படும் நபராக இருந்தால், பிறரை காயப்படுத்தும் தடித்த வார்த்தைகள் உங்களிடமிருந்து வெளிவர வாய்ப்புள்ளது. எனவே யாரிடம் பேசும்போதும் உங்கள் உணர்வுகளை சிறப்பாகப் பிரதிபலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். 

இந்த வழிமுறைகளைப் பின்பற்றினாலே, யாராக இருந்தாலும் உங்களால் ஒரு உரையாடலை சிறப்பாகக் கொண்டுபோக முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com