நாம் வாழும் இந்த சமூகத்தில் பல்வேறு வகையான மனிதர்களை சந்திக்கிறோம். அவர்களில் சிலர் நம்முடன் நன்றாகப் பழகுவார்கள். சிலர் மோசமாக நடந்து கொள்வார்கள். பிரச்சனையை ஏற்படுத்தும் மனிதர்களை சமாளிப்பது என்பது பலருக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். அவர்களின் நடத்தை நம்மை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, நம் உறவுகளை பாதிக்கக்கூடும். ஆனால், அவர்களை சமாளிப்பதற்கான பல வழிகள் உள்ளன. அவை என்னன்ன என்பது பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பிரச்சனைக்குரிய மனிதர்களை சமாளிக்கும் வழிகள்:
சில சமயங்களில் பிரச்சனைக்குரிய மனிதர்களுடனான தொடர்பை முற்றிலுமாக குறைப்பது அல்லது நிறுத்திக்கொள்வது நல்லது. இது குறிப்பாக அவர்களின் நடத்தை, நம் மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இருக்கும்.
பிரச்சனைக்குரிய மனிதர்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும் என விரும்பாமல், அவர்களை அவர்களாகவே இருக்க அனுமதிப்பது நல்லது.
நம்முடைய எல்லைகளைத் தெளிவாக நிர்ணயித்து அவர்களை அவற்றை மீறி வர அனுமதிக்காமல் இருப்பது முக்கியம். நமக்குப் பிடிக்காத விஷயங்களை அவர்கள் செய்தால், அவர்களிடம் நம்முடைய உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்த வேண்டும்.
பிரச்சனைக்குரிய மனிதர்களிடம் நல்ல விஷயத்தை எடுத்துரைப்பது நல்லது. அவர்கள் சில நேரங்களில் நல்ல செயல்களை செய்யும்போது அதைப் பாராட்டி ஊக்குவிப்பது, அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள உதவியாக இருக்கும்.
மோசமான குணம் கொண்டவர்களை சமாளிக்க நாம் நம்முடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்முடைய திறமைகள் பலம் பற்றி நம்பிக்கையாக இருக்கும்போது எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தைரியம் நமக்குக் கிடைக்கும்.
சில சமயங்களில் பிரச்சனைக்குரிய மனிதர்களை சமாளிப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஒரு மனநல ஆலோசகர் அல்லது பிறரது உதவியை நாடுவது நல்லது. அவர்கள் நமக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் ஆதரவை வழங்கி நம்மை இந்த சூழ்நிலையில் இருந்து மீட்டுக் கொண்டுவர உதவுவார்கள்.
நமக்கு பிரச்சனையை அளிக்கும் நபர்களை சமாளிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால், மேற்கண்ட வழிகளைப் பின்பற்றி இந்த சூழ்நிலைகளை நாம் சிறப்பாக கையாள முடியும். இது உங்களுடைய மன அமைதியையும், உறவுகளையும் பாதுகாத்துக்கொள்ள உதவியாக இருக்கும். முக்கியமாக, நாம் எப்போதும் நம்மை நேசித்து நம்முடைய மகிழ்ச்சியை கவனித்துக்கொள்ள இது பெரிதளவில் உதவும்.