புத்திசாலிகள் மற்றவர்களுடன் எதைப் பகிர வேண்டும், எதைப் பகிரக்கூடாது என்பதை பகுத்தறியும் திறன் கொண்டிருப்பார்கள். நம்முடைய அறிவையும் அனுபவங்களையும் பிறருடன் பகிர்வது நல்ல விஷயம்தான் என சொல்லப்பட்டாலும், புத்திசாலிகள் தங்களைப் பற்றி சொல்ல விரும்பாத சில விஷயங்களும் உள்ளன. அவை என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. புத்திசாலிகள் தங்களது தனிப்பட்ட இலக்குகளை தனிப்பட்ட முறையிலேயே வைத்திருப்பார்கள். ஏனெனில் அவற்றை வெளிப்படுத்தினால், அந்த இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்படும் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே அவர்களின் இலக்கு, கனவு, இலட்சியங்கள் போன்றவற்றை பிறருடன் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.
2. ஒருவரின் வருமானம் முதலீடுகள் அல்லது சேமிப்புகள் போன்ற விரிவான நிதித் தகவல்களை பகிர்வது, உங்களைப் பிறர் தேவையில்லாமல் எதிர்ப்பதற்கு வழிவகுக்கலாம். புத்திசாலிகள் தங்களின் நிதி சார்ந்த தகவல்கள் என வரும்போது, தனியுரிமைக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அவர்கள் நம்பகமான ஆலோசகர்கள் அல்லது நிபுணர்களுடன் மட்டுமே அதைப்பற்றி விவாதிக்கிறார்கள்.
3. புத்திசாலிகள் தங்களின் புதுமையான யோசனை, கண்டுபிடிப்பு அல்லது ஆக்கபூர்வமான வேலை போன்றவற்றை பாதுகாப்பாக வைத்திருக்கவே விரும்புகிறார்கள். ஏனெனில் இவர்களது புதிய யோசனையை பிறருடன் பகிர்வதால் அது திருடப்படலாம், பிறரால் காப்பி அடிக்கப்படலாம் அல்லது தவறாக பயன்படுத்தப்படலாம்.
4. ஒருவரின் கஷ்ட காலத்தில் பிறரின் ஆதரவைத் தேடுவது முக்கியம் என்றாலும், புத்திசாலிகள் தங்களின் கடினமான காலத்தில் பெரும்பாலும் யாரையும் எதிர்பார்க்க மாட்டார்கள். நம்பிக்கைகுரியவர்களிடம் மட்டுமே இவற்றை பகிர்ந்துகொள்ளும் இவர்கள், தேவையில்லாமல் அனைவரிடமும் தங்களுடைய கஷ்டத்தை புலம்பிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
5. நம்பிக்கை மற்றும் ரகசியங்களை காப்பதில் புத்திசாலிகள் கைதேர்ந்தவர்கள். அனுமதியின்றி வேறொருவரின் ரகசியங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களை பிறருடன் பகிர மாட்டார்கள். இது நம்பிக்கை துரோகத்தின் அடையாளம் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.
6. புத்திசாலிகள் தங்களின் எதிர்காலத் திட்டங்கள், தொழில் மாற்றங்கள், வணிக முயற்சிகள் அல்லது முக்கிய வாழ்க்கை முடிவுகள் போன்றவற்றை, அவர்கள் செயல்படுத்தாதவரை பிறருடன் பகிர மாட்டார்கள். இவற்றை முன்கூட்டியே வெளிப்படுத்துவது தேவையில்லாத ஆலோசனை சந்தேகம் மற்றும் குறுக்கீடுகள் போன்றவற்றிற்கு வழிவகுக்கலாம்.
7. ஒருவர் தங்களின் சாதனைகளைப் பற்றி பிறரிடம் பெருமிதம் சொல்வது இயல்பானதுதான் என்றாலும், புத்திசாலிகள் பெரும்பாலும் பெருமை பேசுவதையோ அல்லது தொடர்ந்து பிறரிடம் தங்களின் சாதனையைப் பகிர்வதையோ விரும்ப மாட்டார்கள். பணிவு மற்றும் அடக்கம் ஆகியவை இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். புகழ்ச்சிக்காக ஒருபோதும் ஏங்க மாட்டார்கள்.
இப்படி தங்களது வாழ்க்கையில் பல விஷயங்களை புத்திசாலிகள் ரகசியமாகவே வைத்திருப்பார்கள். இதுதான் அவர்களை புத்திசாலியாக மாற்றுகிறது. நாம் நம்மைப் பற்றி அதிகமாக வெளிப்படுத்தும்போது, வெளிப்புறத்தில் இருந்து பல்வேறு விதமான பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். எனவே முடிந்தவரை உங்களை சார்ந்த முக்கியமான விஷயங்களை ரகசியமாகவே வைத்துக் கொள்ளுங்கள்.