என்ன செய்தாலும் சரி வெற்றி கிடைப்பதில்லை என்று சிலர் புலம்புவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஒரு சின்ன சின்ன மாற்றங்களை செய்து கொண்டால் போதும் நிச்சயம் வெற்றி நம்மை தேடி வரும். அப்படி என்னென்ன மாற்றங்கள் இதோ இப்பதிவில் பாருங்கள்.
1- ஒருவர் சராசரி மனிதரா, திறமைசாலியா என்பதை முடிவு செய்வதில் அவரது தன்னம்பிக்கை முக்கியப் பங்கு வகிக்கிறது. தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் மனிதர்களுக்கே வாய்ப்புகள் வருகின்றன.
2- ஏதேதோ முதலீடுகள் செய்வதைப் போலவே, ஒவ்வொருவரும் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் முதலீடு செய்ய வேண்டும். படித்துப் புதிய பட்டங்கள் வாங்குவது, புதுமொழிகள் கற்பது, புதிய திறமைகளை அறிவது, தாங்கள் இருக்கும் துறை சார்ந்து நவீன தொழில்நுட்பங்களை அறிவது என எல்லாவற்றுக்கும் முதலீடு செய்யுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
3- வேலை, தொழில், வியாபாரம் என எதிலும் நீண்ட காலத் திட்டங்கள் வகுத்துக்கொள்ளுங்கள். அடுத்த ஓராண்டில் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்யுங்கள். அப்போதுதான் இடையில் தயக்கமும் தடுமாற்றமும் ஏற்படாது.
4- உங்களுக்குத் தரப்படும் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். அதில் தவறுகள் ஏதேனும் நிகழ்ந்தால், அதற்கும் பொறுப்பேற்கத் தயங்காதீர்கள். பொறுப்புகளை ஏற்கும்போதே வளர்ச்சி சாத்தியமாகிறது.
5- பணத்தை பட்ஜெட் போட்டுச் செலவு செய்யுங்கள். முக்கியமான செலவுக்குப் பணம் இல்லாமல் தவிப்பதும், தேவையற்ற விஷயத்தில் பணத்தை இழப்பதுமே நிறைய நேரங்களில் மன உளைச்சலுக்குக் காரணமாகிறது. இந்த மனநிலை உங்கள் வெற்றியைத் தடுக்கும். பணத்தை நிர்வகிக்கத் தெரிந்தால், மனம் கட்டுக்குள் வந்துவிடும்.
6- பணத்தைப் போலவே நேரமும் மதிப்புமிக்கது. அதை வீணடிக்காதீர்கள். எதற்கு எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் எனக் கணக்கிட்டுப் பார்த்துக் கவனமாக செலவு செய்யுங்கள். ஒவ்வொரு வேலைக்கான நேரத்தையும் கச்சிதமாகத் திட்டமிட்டால்தான், அவற்றை முழுமையாக முடிப்பீர்கள்.
7-திறமைசாலிகள், அதிர்ஷ்டக்காரர்கள் ஆகியோரைத் தாண்டி, விடாமுயற்சியுடன் தொடர்ந்து ஒரு வேலையைச் செய்பவர்கள் அதிக வெற்றி பெறுவார்கள். எந்த நேரமும் அவர்களின் சிந்தனையை அந்த வேலை ஆக்கிரமித்து இருப்பதே காரணம்.
8- உழைப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு உங்கள் உடலும் ஒத்துழைக்க வேண்டும். தேவையான அளவு உடற்பயிற்சி செய்வதும், நன்கு ஓய்வெடுப்பதும், ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதும் உடலை உறுதியாக வைத்திருக்கும். உடல் நன்றாக இருந்தால், மனமும் நன்கு சிந்திக்கும். வெற்றிகரமாக எதையும் திட்டமிட முடியும்.