உன்னதமான வாழ்க்கைக்கு உகந்த 8 வழிமுறைகள்!
ஒரு சிறப்பான வாழ்க்கைக்காக நாம் சில வழிமுறைகளை வைத்து அதனை பின்பற்றுவோம். சில நேரங்களில் அந்த முறைகள் நம்மை மேலோங்க செய்யும். சில நேரங்களில் எந்த மாற்றமுமே இருக்காது. அப்போது நீங்கள் வழிமுறைகளை மாற்ற வேண்டியது அவசியம்.
ஆனால், வாழ்வில் அனைவரும் எப்போதும் பயன்படுத்த வேண்டிய சில வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.
1. புறக்கணியுங்கள்!
நாம் எப்போதும் மற்றொருவருடைய பேச்சைக் கேட்டு, அதனை மட்டுமே பின்பற்ற வேண்டியதில்லை. நமக்கு தேவையான வார்த்தைகளை மூளையில் போட்டுக்கொள்ள வேண்டும். அன்பான வார்த்தைகளை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நம்மை காயப்படுத்தும் வார்த்தைகளையும் அதனைப் பேசுபவர்களையும் புறக்கணிப்பதே நல்லது.
2. போனால் போகட்டுமே!
இந்த வரி மனிதர்களுக்கு மட்டும் அல்ல, காலத்திற்கும் வாய்ப்புகளுக்கும் பொருந்தும். ஆம்! ஒரு வாய்ப்பு கைநழுவியது என்றால் அதனை நினைத்துக்கொண்டே இருப்பது சரியல்ல. முதலில் ‘போகட்டும்’ என்று கூறினால்தானே அடுத்த முயற்சியில் தானாகவே இறங்குவோம்? அதேபோல் நேற்று என்ன நடந்தது என்று பேசிக்கொண்டு எண்ணிக்கொண்டு இருப்பதால் இன்றைக்கான நேரம்தான் வீணாகும் என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
3. நேரம் கொடுங்கள்:
ஒரு விஷயம் சரியாக செய்யவில்லை என்றால் அதைப் பற்றி யோசித்து முடிவெடுக்க சற்று நேரம் எடுக்கும்தான். எந்த முடிவு எடுத்தாலும் நேரம் கொடுத்து முடிவு செய்யுங்கள். ஒருவர் ஒரு திட்டம் தீட்டும்போது வேடிக்கைப் பார்ப்பது போல்தான் தெரியும். பார்ப்பவர் களுக்கு நேரம் வீணாவதுபோலத்தான் இருக்கும். ஆனால், அவருடைய மூளையில் யோசனைகள் ஓடிக் கொண்டேதான் இருக்கும். காலம் எடுத்து செய்யும் அனைத்து காரியமுமே வெற்றியில் முடியும்.
4. ஒப்பிடாதீர்கள்:
நீங்கள் உங்கள் திறமைகளையும் வளர்ச்சியையும் ஒப்பிட வேண்டும் என்றால், நேற்று நீங்கள் இருந்த நிலையையும் இன்று நீங்கள் இருக்கும் நிலையையும்தான் ஒப்பிட வேண்டும். மற்றவருடன் ஒப்பிட்டால் யோசித்து யோசித்து மூளைத்தான் கலங்கும்.
5. பொறுமையாக இருங்கள்:
பொறுமையின்மை என்பதுதான் இன்றைய இளைஞர்களின் பெரும் தலைவலி. நேர்காணல் சென்ற அடுத்த நாளே ‘ஏன் இன்னும் தகவல் வரவில்லை’, ‘இன்னும் ஏன் அழைக்கவில்லை’ என்று அவசரப்படுவது. ஒரு பெரிய வேலைக்கு செல்லவேண்டும் என்றால் பொறுமை நிச்சயம் தேவை. பொறுமை மட்டுமே ஒரு சூழ்நிலையைக் கையாளும் மாபெரும் திறனைத் தருகிறது. ஆகையால், அவசரப்படாமல் அனைத்தையும் யோசித்து செய்யுங்கள்.
6. திட்டங்களை மாற்றுங்கள்:
நல்ல திட்டம் என்று எதுவுமே இல்லை. உங்களுக்கு எது பலன் தருகிறதோ அதுதான் நல்ல திட்டம். எதை எப்படி செய்தால் சரிவரும் என்று உங்களுக்கு தோன்றுகிறதோ அதன்படி திட்டம் செய்யுங்கள். அது ஒருவேளை வேலை செய்யவில்லை என்றால், பரவாயில்லை. அடுத்த திட்டம் போடுங்கள். திட்டங்களை மட்டுமே மாற்றுங்கள் இலட்சியத்தையல்ல.
7. நீங்கள்தான் பொறுப்பு:
நீங்கள் துக்கமாகவோ தனிமையாகவோ இருக்கும்போது ஒன்றை மட்டும் நினைவில்கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம் என்னும் கதவின் சாவி உங்களிடம்தான் மறைந்துள்ளது. அதைக் கண்டுப்பிடித்துவிட்டால், உங்கள் பணியை சரியாக செய்யலாம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு பணிக்கும்நீங்கள்தான் பொறுப்பு என்பதை மறந்துவிடாதீர்கள்.
8. நன்றாக சிரியுங்கள்:
வாழ்வில் எதிர்பாராத சமயங்களில்கூட ஏதோ ஒரு பிரச்னை வரத்தான் செய்யும். அதற்காக எப்போதும் ஏதாவது யோசித்துக்கொண்டு, துயரத்துடனே இருப்பது நல்லதல்ல. உண்மையில் பிரச்னைகளில்தான் சுவாரசியமும் இருக்கும். அதனை கையாளும்போது நமக்குள் மறைந்திருந்த திறமைகளும் வெளிவரும். பிரச்னைகளில் மட்டும்தான் கடவுளை நினைப்போம், சில மனிதர்களை விட்டு பிரிவோம், சில மனிதர்களுடன் நெருக்கமாக இணைவோம். சில பாதிப்புகளைத் தரும் பிரச்னைகள் பல நன்மைகளும் தருகின்றன. ஆகையால் அந்த பிரச்னைகளைக் கண்டு இன்றே சிரியுங்கள்.

