சிலந்தி கற்றுத் தந்த பாடம்!

A lesson taught by the spider!
A lesson taught by the spider!

ராபர்ட் ப்ரூஸ் பிரபலமான ஸ்காட்லாந்து நாட்டின் அரசன். சிலந்தியிடமிருந்து கற்ற பாடத்தை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். 

ராபர்ட் ப்ரூஸ் 1806 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அரசனாக பதவியேற்றுக் கொண்டான். பதவியேற்ற காலம் முதல் இங்கிலாந்து படைகளால் பல்வேறு தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்தான். 1306 ஆம் ஆண்டு மூன்று முறை தொடர் தோல்விகளைச் சந்தித்தான். அவனது மனைவி மற்றும் அவனது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவனது மூன்று சகோதரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.‌ ராபர்ட் தனது சொந்த நாட்டிலேயே அகதி ஆகிவிட்டான். வடக்கு அயர்லாந்தின் கடலோரத்தில் இருந்த ராத்லின் தீவில் பதுங்கி இருந்தான். அங்கு அவனுக்கு ஒரு சிலந்தி வாயிலாக வாழ்க்கைப் பாடம் கிடைத்தது.

ராபர்ட் ப்ரூஸ்
ராபர்ட் ப்ரூஸ்

ராபர்ட் ஒரு குகையில் பதுங்கி இருந்தான். இத்தகைய கடின சூழ்நிலையில் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான். மனம் உடைந்து அமர்ந்திருந்தான். அப்போது அவனுக்கு எதிராக ஒரு சிலந்தி வலை பின்னிக் கொண்டிருந்தது. அந்தச் சிலந்தி தனது வலையைப் பின்ன முயற்சிக்க மறுபடியும் மறுபடியும் கீழே விழுந்து கொண்டிருந்தது. ஆனால் அந்தச் சிலந்தி தளரவில்லை. தொடர்ந்து தொடர்ந்து முயற்சித்து இறுதியில் அது தனது வலையை வெற்றிகரமாக பின்னியது.

இதனைக் கண்ட ராபர்ட் தானும் தளரக்கூடாது. தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி அடைய வேண்டும் என்று முடிவெடுத்தான். மறுபடியும் படைகளைத் திரட்டி இங்கிலாந்து நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தான். சில வெற்றிகளுக்குப் பின் 1314 ஜூன் மாதத்தில் நடைபெற்ற பன்னோக்பர்ன் போரில் மிகப்பெரிய இங்கிலாந்து படைகளுக்கு எதிராக குறைந்த படை பலத்தைக் கொண்ட ஸ்காட்லாந்து படைகளைத் தலைமையேற்று நடத்தி மிகப் பெரிய வெற்றி அடைந்தான்.

தொடர்ந்து ஸ்காட்லாந்து இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி அடைந்து, 1328 ஆம் ஆண்டு, நார்த்தாம்டன் உடன்படிக்கை மூலமாக, ஸ்காட்லாந்து சுதந்திரம் உறுதி செய்யப்பட்டது. ராபர்ட் ஸ்காட்லாந்தின் அரசனாக இங்கிலாந்தால் அங்கீகரிக்கப்பட்டான்.

ஒரு சிலந்தியிடமிருந்து கற்ற பாடம் ராபர்ட்டை ஸ்காட்லாந்தின் சுதந்திரம் வரை கொண்டு சென்றது. நாமும் அந்தச் சிலந்தியிடமிருந்து பாடத்தைக் கற்றுக் கொள்வோம். தோல்விகளால் துவண்டு விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சித்து வெற்றி அடைவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com