
பொய் பேசாமல் இந்த உலகத்தில் நம்மால் வாழ முடியுமா? நிச்சயம் முடியாது என்பதே நிஜம். சில சமயங்களில் சில சங்கடங்களைத் தவிர்க்க நாம் நம்மையறியாமல் பொய் பேசிவிடுகிறோம். நாம் செய்வது தவறு என்று தெரிந்தே செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று.
உதாரணமாக ஒரு நபர் உங்களை வழியில் சந்திக்கும் போதெல்லாம் நிறுத்தி தேவையில்லாத விஷயங்களைப் பேசுபவர் என்று வைத்துக் கொள்ளுவோம். அவரிடமிருந்து தப்பிக்க ஏதாவது ஒரு சிறிய பொய்யைச் சொல்லி அங்கிருந்து நாம் நகர்ந்துவிடுவோம். இத்தகைய பொய்யானது தவறில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் இதனால் யாருக்கும் எந்தவிதமாக பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இத்தகைய பொய்கள் உங்களுடைய பொன்னான நேரத்தை மிச்சமாக்கும். வீணான விவாதங்களைத் தவிர்க்கும்.
நாம் சொல்லும் ஒரு பொய்யானது பிறருக்கும் நமக்கும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். ஒரு பொய்யை மறைக்க நாம் தொடர்ந்து பல பொய்களை சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
இதனால் மனஉளைச்சல் ஏற்படும். தவறு செய்வது மனிதர்களின் இயல்புகளில் ஒன்று. தவறை செய்துவிட்டால் அதை பிறர் சுட்டிக்காட்டினால் அதை மறைக்க பொய் பேசாமல் உடனடியாக மனதார மன்னிப்பு கோரிவிடுங்கள். மாறாக நீங்கள் செய்த தவறை மறைக்க நினைத்தால் அதை மறைக்க தொடர்ந்து பலப்பல பொய்களை நீங்கள் சொல்லக் கூடும்.
எப்போதும் உண்மை பேசுபவர்கள் எதையும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். யாராவது எதையாவது கேட்டால் யோசிக்காமல் உடனடியாக பதில் சொல்பவர்களாக இருப்பார்கள். உண்மையானது மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். அதை நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை.
நாம் உண்மை பேசினால் எந்த ஒரு விஷயத்தை யாரிடமும் மறைக்க வேண்டிய சூழ்நிலை வராது. யாருக்கும் பயப்பட வேண்டிய தேவையும் இருக்காது. ஆனால் ஏதாவது ஒரு விஷயத்தை மறைக்க பொய்யைச் சொல்லிவிட்டால் அதை எந்நேரமும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை இயற்கையாகவே ஏற்படும். ஏனென்றால் செய்த விஷயத்தை மறைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
நீங்கள் பேசும் பொய்யானது என்றாவது ஒருநாள் ஒரு கட்டத்தில் நிச்சயமாக உங்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும். ஏனென்றால் பொய்யை நிலையாக நம்மால் காப்பாற்ற இயலாது. பொய் தற்காலிக வலிமை உடையது. ஆனால் உண்மை நிரந்தர வலிமை உடையது.
உண்மையே பேசினால் அந்த உண்மை ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் உங்களை தலை நிமிர்ந்து நடக்கச்செய்யும். உண்மைக்கு அழிவில்லை. சுருக்கமாகச் சொன்னால் பொய் உங்களை தொடர்ந்து துரத்தி தொந்தரவை விளைவிக்கும். மனநிம்மதியை இழக்கச்செய்யும். சமுதாயத்தில் தலைகுனிவை ஏற்படுத்தும். உண்மை உங்களை எந்நாளும் ஒரு கவசம் போலக் காக்கும். உண்மையுடன் கைகோர்த்து நடப்போம். அதனால் விளையும் உயர்வினை நினைத்து மகிழ்ந்து வாழ்வோம்.