
நதி என்பது எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் தெளிந்த நீரும், ஆற்றலும் இருக்கும். அதுபோலத்தான் நம் மனமும் ஒரே இடத்தில் தேங்கிவிடாமல் தேடத் தொடங்கினால்தான் தெளிவு பிறக்கும். மனம் என்பது மிகவும் வலிமையானது. ஒரு எண்ணம் மனதில் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தால் அது சக்திபெற ஆரம்பித்து விடுகிறது.
அந்த சக்தி அதனை செயல்படுத்த தூண்டுகிறது. நெருப்பிலிருந்து வெப்பம் பிரிவதுபோல் எண்ணங்கள் மனதில் இருந்து பிரிக்க முடியாதவை. நல்லது எது கெட்டது எது என்ற தெளிவு பிறக்க மனம் ஓயாது ஓடிக்கொண்டே இருக்கும். ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். மனதின் ஆற்றல் மிகவும் மகத்தானது.
ஓடாத நதியில் அழுக்கிருக்கும். தேடாத மனதில் குறை இருக்கும். நம்முடைய திறன்களை அறிய உதவும் மனத்தை தெளிவாக வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வையார் கூறியதுபோல் மனம் போன போக்கில் போகாமல், பாரதியார் கூறியது போல் எண்ணிய முடிதல் வேண்டும், நல்லனவே எண்ணல் வேண்டும் என்ற கூற்றுப்படி மனம் தெளிவுபெற தேடவேண்டும், தேடிக்கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுதுதான் மனம் தெளிவடையும்.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இயலுமா? குழம்பிய மனத்தில் தெளிவு பிறக்குமா? தேடாத மனத்தால் வளர்ச்சிதான் காணமுடியுமா? உயரிய சிந்தனையால் மட்டுமே குழம்பிய மனத்தை தெளிய வைக்க முடியும். தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் என்று கூறுவார்கள்.
மனம் தெளிவு பெற்றால்தான் நம்மால் எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். மனம் தெளிவு பெற தினம் சிறிது நேரமாவது நம் மனத்துடன் பேசுவது நல்லது. மனம் சொல்வதை கேட்கத் தொடங்கும் பொழுது அது தினம் தினம் நமக்கு புதிது புதிதாய் ஏதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே இருக்கும்.
தேடாத மனம் தெளிவு கொள்ளாது. மனதின் எண்ணங்களை எங்கெங்கோ அலைபாய விட்டால் அந்த மனது எடுக்கும் முடிவுகள் தெளிவாக இருக்காது. தேடித் தெளியாத மனத்தில் குழப்பம் தான் மிஞ்சும். மனம் தெளிவடைய தியானம் சிறந்தது.
எப்படி கலங்கிய குளத்தில் கல்லெறிய கூடாதோ அது போல்தான் குழப்பமான மனநிலையில் நாம் நமது சிந்தனை ஓட்டத்தை தடை செய்யக்கூடாது. அதற்கு பதில் அந்த சிந்தனை ஓட்டத்தை கவனித்துக்கொண்டே இருந்தால் மெல்ல மெல்ல அவை அதனுடைய வீரியத்தை இழந்து குழப்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தெளிவு பிறக்கும்.
மனதில் தெளிவு பிறக்க, குழப்பத்திற்கு காரணம் முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை என்பதை அறிந்து நம்மை மூன்றாம் நபராக நினைத்து முடிவை தேடத் தொடங்கினால் தானாகவே மனம் தெளிவு பெற்று தீர்வைக் காணும். குழப்பமான மனநிலைக்கு காரணம் என்ன என்பதைத்தேடி கண்டறிய வேண்டும். அதற்கு என்ன முடிவு என்பதையும் நாமே முடிவு செய்ய வேண்டும். தீர்வு நம்மிடம்தான் உள்ளது.