
நீங்கள் ஏன் மற்றவர்களைப் பார்த்து கூச்சமடைகிறீர்கள். நீங்கள் உங்களைப்பற்றி உயர்வாக எண்ணாமல் இருப்பதும், உங்கள் செயல்கள் உங்களுக்குப் பெருமை தராமல் இருப்பதுமே இதற்குக் காரணங்கள். மற்றவர்கள் வெற்றியைக் குறித்து நீங்கள் பிரமிப்பு அடைகிறீர்கள். அவர்கள் வெற்றி உங்களுக்கு எட்டாக் கனியாக தோன்றுகிறது. வாழ்வில் நீங்கள் வெற்றிகள் குவிக்க வேண்டும் என்றால், உங்கள் கூச்ச சுபாவத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
சுயமதிப்பை உயர்த்தக் தேவையான முயற்சிகள் எடுத்தாக வேண்டும். சிறு சிறு வெற்றிகளை இலக்காக வைத்து வெற்றி காணுங்கள். தேவையற்ற சிந்தனைகளை மனதைவிட்டு அகற்றுங்கள். கடந்த கால தோல்விகளை குறித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். கடந்த காலம் செல்லாத நோட்டு. அதை யாரும் பயன்படுத்துவதில்லை. நீங்கள் மட்டும் ஏன் அது மதிப்பு மிக்கதாக எண்ணுகிறீர்கள். மற்றவர்கள் சவாரி செய்யும் படகில் உங்களுக்கு இடம் வேண்டும் என்று எண்ணாதீர்கள். உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள்எண்ணங்கள்,செயல்கள், திறமைகள், முடிவெடுக்கும் தன்மைகள் குறித்து உயர்வாகக் கருத்துங்கள். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மற்றவர்களின் வெளிப்படையான வெற்றிகளுக்குப் பின்னால் பல தோல்விகளும் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள். மற்றவர்களுடன் உங்களை நீங்களே ஒப்பிடுகையில், நீங்கள் சிறியவர் போல் காட்சி தருவது தவிர்க்க முடியாததாகும். நீங்கள் இப்போது இருக்கும் நிலையைக் கடந்துதான் மற்றவர்களும் முன்னேறியுள்ளனர். எனவே நீங்கள் இருக்கும் நிலை ஏளனத்திற்கு உரியதன்று என்று மனதில் பதிய வையுங்கள்.
வெற்றி பெற்றவர்களும் ஒரு காலத்தில் பல விஷயங்களில் கூச்ச சுபாவத்தை பெற்றவர்கள்தான். அவர்கள் கூச்சத்தை வென்ற தால்தான் வெற்றி பெற்ற நிலையை அடைந்துள்ளனர். எனவே வெற்றிகள் குவிக்க இந்த நிமிடத்திலிருந்து கூச்ச சுபாவத்திற்கு முடிவு கட்டுங்கள். வெற்றிகளை அள்ளிக்குவியுங்கள்.