வெற்றி பெற விரைந்து செயல்படுங்கள்!

May your life be prosperous
to succeedImage credit - pixabay
Published on

"இதய வங்கியில் சேகரித்து வைத்துள்ள கருத்துப் பொற்காசுகளை முன்னேற்றச் செயல்களில் இன்றே முதலீடு செய்யுங்கள்."

செயல்களே உங்களுக்கு வெற்றிமாலை சூட்டுகின்றன. உங்களுக்கு என்னென்ன தெரியும் என்பதைவிட அவற்றில் என்னென்னவற்றை எந்ததெந்த அளவிற்கு நீங்கள் செயல்படுத்துகின்றீர்கள் என்பதே முக்கியம். பயன்படுத்தப்படாத அறிவும், பயணப்படாத பாதையும் பயன்படுவதில்லை.

உங்களின் ஒவ்வொரு அறிவுத்துளியும் வெற்றியாக விளையவேண்டும் எனில், அதை உழைப்பு நிலத்தில் ஊன்ற, வியர்வை நீர் பாய்ச்சி, களைப்பு எனும் களையை நீக்கி முயற்சியெனும் உரமிட்டு வளர்க்கவேண்டும். அப்பொழுதுதான் உங்களின் வாழ்நாள் வளமுடையதாக அமையும்.

எல்லையில்லாத ஆற்றலை அடிமனதில் வைத்துக் கொண்டு வெற்றிக் கனியைச் சுவைக்காமல் நீங்கள் இருக்கின்றீர்கள் என்றால், அதற்கு வேறு யாரும் பொறுப்பல்ல; நீங்களே முழுப்பொறுப்பு, ஏனென்றால், உங்களது முயற்சிச் சிறகுகளை அசைக்காததால்தான், வெற்றி வானம் உங்களுக்கு அகப்படவில்லை.

ஆக்க ஆற்றலை வைத்துக் கொண்டு நீங்கள் செயல் எனும் தேரில் ஏறி வெற்றியூரை அடையவில்லை எனில், அதற்கு நீங்களே காரணம் அவ்வாறு ஆற்றலை வைத்துக் கொண்டு சோம்பல் சிறையில் அடைப்பட்டுக் கிடக்கின்றீர்கள் என்றால், உங்களுக்கு நீங்களே தீங்கு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

கொஞ்சம் கடுமையாகக் கூட இந்தக் கூற்று உங்கள் நெஞ்சைத் தொடலாம். அதற்காக வருத்தப்பட வேண்டாம். உங்களுடைய வெற்றிக்கும் தோல்விக்கும் நீங்கள் பொறுப்பு ஏற்கும் போதுதான் உங்களது வாழ்க்கைப் படகை உங்களின் இலக்கை நோக்கிச் செலுத்த முடியும்.

கொஞ்சம் சிந்தியுங்கள், உங்களுடைய எண்ணத்தைக் கொஞ்சம் மாற்றியமைத்தால் வெற்றிப்பாதையை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
மனவாசலைத் திறக்கும் 5 வழிகள்!
May your life be prosperous

எண்ணங்களே முன்னேற்றத்தின் ஏணிப்படிகள். ஆக்க எண்ணம் மேலே ஏறுகின்றது. அழிவு எண்ணம் கீழே இறங்குகின்றது.

தவறு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தை தவிர்த்து, சோர்வை அகற்றி, தள்ளிப் போடும் எண்ணத்தை கிள்ளி போட்டு, வென்றால் வெற்றி தோற்றால் அனுபவம் என்ற நோக்கில், வெற்றிக்கு புத்திசாலித்தனமான உழைப்பே மூலதனம் என முழுமையாக நம்பி வெற்றி பயணத்தில் இலக்கை அடையும்வரை ஓய்வில்லை, தோல்வி நேர்ந்தால் பிறரை குறை கூறும் மனநிலையை அகற்றி எதிலும் நன்மை உண்டு என்று நம்பி சுய பச்சாதாபம் இல்லாமல் முழுமையாக வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்க முயற்சி செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com