நம் இந்தியாவைச் சேர்ந்த படேல் என்பவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் அவர் நியூயார்க் நகரம் சென்று அங்குள்ள வங்கியில் தனக்குக் கடனாக ஐந்தாயிரம் டாலர் தேவைப்படுவதாகவும் தான் இரண்டு வாரம் ஐரோப்பா செல்வதாகவும் கூறினார். உடனே வங்கி அதிகாரி இவ்வளவு பெரிய தொகைக்கு நீங்கள் செக்யூரிட்டி தரவேண்டும். அது பொருளாக கூட இருக்கலாம் என்றார்.
வங்கியின் வாசலில் நிறுத்தியிருந்த தன் விலையுயர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் காருக்கான சாவியும், அது தொடர்பான பேப்பர்களையும் அதிகாரியிடம் ஒப்படைத்தார். அவர் கார் செக்யூரிட்டியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. வங்கியின் ஊழியர் ஒருவர் காரை வங்கியின் பாதாள அறைக்குச் சென்று மிக்க பாதுகாப்புடன் நிறுத்தினார். படேலுக்கு அவர் விரும்பிய தொகை தரப்பட்டது இரண்டு வாரங்கள் ஓடின. சொன்னபடியே படேல் தன் ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பினார்.
வங்கி அதிகாரியைப் சந்தித்து 5000 டாலர் கடனைத் திருப்பித் தந்தார். அதற்கு வட்டியாக 15 டாலரும் கட்டினார். அதிகாரி அவரிடம் "உங்களிடம் நாங்கள் வர்த்தக ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டதில் மகிழ்கிறோம். என்றாலும் ஒரு சிறிய சந்தேகத்தை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.
என்ன விஷயம் என கேட்க "நீங்கள் வெளிநாடு சென்ற பிறகு உங்களைப்பற்றி வங்கி விசாரித்தது. அப்போது திடுக்கிடும் தகவல் கிடைத்தது. நீங்கள் அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க ஒரு கோடீஸ்வரர் என்று. அப்படியிருக்க எங்களிடம் ஏன் கடன் வாங்க வேண்டும்?" என்று அதிகாரி கேட்டார்.
படேல் புன்முறுவலுடன் பதில் சொன்னார். "என்னுடைய விலை உயர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் காரை தொடர்ந்து 15 நாட்கள் வரை பதினேந்து டாலர் வாடகையில் இந்த நியூயார்க் நகரில் பாதுகாப்பாக வேறு எங்காவது நிறுத்த முடியுமா? என்று பதில் கூற... வங்கி அதிகாரி அதிர்ச்சியில் ஊமையானார். முன்னேறியவர்களின் மூளை மற்றவர்களிடமிருந்து மாறுபட்டே இருக்கும்.