நம்முடைய வாழ்க்கையில் வெற்றியை நோக்கி செல்லும் பொழுது ஏற்கனவே வெற்றியடைந்த சிலரை நம்முடைய Inspiration ஆக வைத்திருப்போம். அவர்கள் வெற்றியடைந்ததை பார்த்து இதுபோலவே நாமும் ஒருநாள் வாழ்வில் ஜெயித்துக் காட்டவேண்டும் என்ற வைராக்கியத்துடன் போராடிக் கொண்டிருப்போம். அவர்களின் வெற்றி நமக்கு ஒரு Motivation ஆக இருந்து ஒரு ஊக்கத்தைக் கொடுக்கும். அப்படி உங்கள் வாழ்க்கையிலும் உங்களை ஊக்குவிக்கக் கூடிய வெற்றியாளர்கள் இருக்கிறார்களா? அப்போ இந்த கதையை முழுமையாக படியுங்கள்.
ஒரு ஊரிலே இளைஞன் ஒருவன் தன் ஊரிலே இருக்கும் ஒரு பெரிய பங்களாவை தினமும் பத்து நிமிடம் வியந்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தான். ஒருநாள் அந்த வீட்டினுடைய சொந்தக்காரர் இதை கவனித்துவிட்டு அவனிடம் வந்து, ‘உனக்கு என்ன வேண்டும்? ஏன் தினமும் வீட்டிற்கு வெளியே வந்து நிற்கிறாய்?’ என்று அந்த இளைஞனிடம் நேரடியாகவே கேட்கிறார்.
அதற்கு அந்த இளைஞன் கூறுகிறான், ‘என்னுடைய வாழ்க்கையில் இதுபோல பெரிய பங்களாவை ஒருநாள் கட்டிமுடிக்க வேண்டும் என்பதுதான் பெரிய ஆசை. அதனால்தான் தினமும் வந்து பார்க்கிறேன்’ என்று சொன்னான்.
அதைக்கேட்ட வீட்டின் சொந்தக்காரர், அப்போ வீட்டுக்குள்ளே வந்து பார் என்று அந்த இளைஞனை வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். வீட்டிற்குள் இருந்த உயரமான சீலிங், விலையுயர்ந்த பொருட்கள், ஆடம்பரமான இன்டீரியரை பார்த்து வியந்து போகிறான் அந்த இளைஞன்.
இப்போது வீட்டின் சொந்தக்காரர், என்னுடைய அறையை உனக்கு காட்டுகிறேன் என்று கூறி படிகட்டுகள் வழியாக அவனை மேலே அழைத்து செல்கிறார். அந்த இளைஞன் அந்த அறையைப் பார்த்து வாயடைத்து போகிறான். அவன் வாழ்நாளில் அப்படிப்பட்ட பிரம்மாண்டமான வீட்டை அவன் பார்த்ததேயில்லை. இதையெல்லாம் எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது என்று அந்த வீட்டின் சொந்தக்காரரிடம் கேட்கிறான்.
அதற்கு அவர் கூறியது, 'நீ படிகட்டுகளில் ஏறிவரும்போது ஒருமுறையாவது குனிந்து பார்த்திருந்தால் இந்த கேள்வியை என்னிடம் கேட்டிருக்க மாட்டாய்' என்று கூறுகிறார். இதைக்கேட்டதும் அந்த இளைஞன் ஓடிப்போய் படிக்கட்டை கவனிக்கிறான். அங்கே அவர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளும், மோட்டிவேஷன் தத்துவங்களும் அந்த படிகட்டுகளில் எழுதப்பட்டிருந்தது.
இவ்வளவு நாளும் அவருடைய பெரிய வீட்டையும், ஆடம்பரமான வாழ்க்கையையும் மட்டுமே பார்த்துவிட்டு அவர் கடந்து வந்த கடினமான பாதையைப் பற்றி தெரிந்துக்கொள்ள மறந்துவிட்டோமே! என்று நினைத்து அந்த இளைஞன் வருத்தப்படுகிறான்.
இதுபோலதான் நாமும் அடுத்தவர்களின் வெற்றியை மட்டுமே வியந்து பார்கிறோமே தவிர அவர்கள் அதை அடைய கடந்து வந்த கடினமானப் பாதையை பார்க்காமல் விட்டுவிடுகிறோம். 'கஷ்டப்பட்டால் தான் உயரத்தை அடைய முடியும்' என்பதை மறக்க வேண்டாம். முயற்சித்துப் பார்க்கலாமே!