
காலில் செருப்பு இல்லையே என்று கவலைப்பட்டேன், காலே இல்லாதவனைக் காணும்வரை' என்ற பொன்மொழி உண்டு.
அதனால் பரீட்சையில் முதல் ரேங்க எடுக்க வேண்டும்; வீடு கட்டி முடிக்க வேண்டும். கோடீஸ்வரராக வேண்டும் என்று ஆசைகள் நிர்ணயித்துக் கொள்வதெல்லாம் நியாயமானதுதான். அதற்காக ஆசைகள் நிறைவேறும்வரை சந்தோஷமாக, நிம்மதியாக இல்லாமல் அந்தக் குறிக்கோள் மீதே முழுமையாக உழன்று கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.
உங்களைச் சுற்றி எது நடந்தாலும் சந்தோஷப்படுங்கள். சின்னச்சின்ன விஷயங்களையும் பார்த்து ஆனந்தப்படுங்கள். ஒரு புகழ்பெற்ற சீனக்கவிதை ஒன்றை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும்
இந்த தட்டு நிறைய
பூக்களை அடுக்கி வைப்போம். உணவுதான் இல்லையே!
எப்பேர்ப்பட்ட அழகியல் சிந்தனை என்று பாருங்கள். வயிறுக்கு உணவு இல்லாத சூழலிலும், சாப்பிட வேண்டிய பாத்திரத்தில் பூக்களை வைத்து அழகு பார்க்கும் மனப்பான்மை வந்துவிட்டால். என்றென்றும் ஆனந்தமே!
சந்தோஷம் என்பது எங்கேயோ இருப்பதாக எத்தனையோ பேர் தேடி அலைந்து கொண்டிருக்கும் வேளையில், சிலரோ அவர்களிடம் என்ன இருக்கிறதோ அதையே சந்தோஷமாக எடுத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கிறார்கள்.
இன்றும் சாலையோரங்களில் படுத்துத் தூங்குபவர் களைக் கவனித்துப் பாருங்கள். தெருவில் போகும் வண்டிகளின் இரைச்சல். மனிதர்களின் குரல், கொசுக்கடி தொந்தரவுகள் என எதுவுமே அவர்களை பாதிப்பதில்லை. கரடுமுரடான இடத்தில் தலையை வைத்து, உடலை குறுக்கும் நெடுக்குமாக படுத்திருந்தாலும் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருப்பார்கள்.
ஆனால் பலருக்கு பஞ்சு மெத்தையில் படுத்தும். குளிர்சாதன வசதி இருந்தும், உறங்குவதற்காக மாத்திரை போட்டும் தூக்கம் வருவதில்லை. இதற்கு என்ன காரணம் என்றால், சாலையில் இருப்பவன் எந்த சிந்தனையும் இன்றி. இன்றைய பொழுதைக் கழித்த திருப்தியில் தூங்குகிறான். ஆனால். தூக்கம் வராதவர்களோ எதிர்காலத்துக்காக சிந்தித்துக் கொண்டு, இன்றைய வாழ்வை பயந்துகொண்டே வாழ்கிறார்கள்.
நாளை ஏதாவது தவறுகள் நடந்தால் இன்றைய சொகுசு போய்விடுமோ என்று பயம் கொள்கிறார்கள். ஆனால், சாலையோரவாசிகளிடமோ இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற சிந்தனையே பிரதானமாக இருக்கிறது. அதனால் சந்தோஷம் என்பது வெளியில் இருந்து வரவேண்டும் என்று காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணரவேண்டும். உங்களிடம் எது இருக்கிறதோ, அதையே மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாம் இன்பமயமாகத் தோன்றும்.