motivation Image
motivation Imagepixabay.com

எப்போதும் நமக்கே முதலிடம்!

Published on

ப்போதாவது யோசித்ததுண்டா? நமக்கு நாமே முதலிடத்தை கொடுத்து கொள்வதில் உள்ள தயக்கத்தை பற்றி?

அப்படி நமக்கு முதலிடம் கொடுத்து கொண்டால், அதை இந்த சமூகம் சுயநலமென்று கூறும்.

· நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?

· உங்களுக்கு இது தேவைப்படுகிறதா?

· உங்களுக்கு ஏதாவது பிரச்சனையிருந்தால் கூறுங்கள் நான் உதவுகிறேன்?

இப்படி எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களுக்காகவும், அடுத்தவர்களுக்கு கொடுத்துமே பழகியிருப்போம்.

அடுத்தவர்களைப் பற்றி அதிகமாகவும் நம்மை பற்றி குறைவாகவும் சிந்தித்திருப்போம்.

கணவனாக, மனைவியாக, தாயாக, தந்தையாக, அண்ணணாக, தங்கையாக நாம் மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு “தியாகம்” என்ற பெயரும் வைத்திருக்கிறோம்.

தியாகம் செய்வதால் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்று நம்புகிறோம். குடும்பத்திற்காக தியாகம் என்று சொல்லி சொல்லி ஒரு கட்டத்தில் எல்லாவற்றிற்கும் தியாகம் என்ற நிலை ஏற்பட்டு விடும்.

“தியாகம் செய்வது அவருக்கு புதிதில்லை, அவர் அதை தாங்கி கொள்வார், அவர் அதை ஏற்று கொள்வார்” என்று ஒரு கட்டத்தில் நம் விருப்பு வெறுப்பு பற்றி கேட்க கூட ஆளில்லாமல் போய் விடலாம்.

நமக்கான கனவு, நமக்கான லட்சியம், நமக்கான சுயசம்பாதிப்பு, நமக்கென்று செலவிட நேரம், நம்மை முதன்மையாக கருதுவது, நம்மை அழகுபடுத்தி கொள்வது என்று நமக்கு நாமே செய்து கொள்ளும் சலுகைகளுக்கு சுயநலம் என்று மற்றவர்கள் பேர் வைத்தால் வைத்து விட்டுப் போகட்டும்.

சில நேரங்களில் சுயநலமாக வாழ்வதில் தவறில்லை. நமக்கு தேவையானதை முதலில் செய்து கொள்வது முதல், நம்முடைய மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள, தேவையில்லாத விஷயங்களை ஒதுக்குவது வரை, சுயநலம் நல்லதே!

நம்முடைய மனதையும் உடலையும் பாதுகாப்பதுதான் நம்முடைய முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

நம்முடைய முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளவில்லையென்றால், நமக்கு நாமே முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்றால், நம்முடைய வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் ஏற்றுகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட வேண்டி வரும்.

இதையும் படியுங்கள்:
ட்ரஃபிள் (Truffle) எனப்படும் பூஞ்சை கிழங்கு தரும் போஷாக்கு!
motivation Image

· உங்களை காதலிக்க நேரம் எடுத்து கொள்ளுங்கள்.

· சுயபாதுகாப்பும் ஓய்வு எடுப்பதும் நேர விரயமில்லை என்பது புரிந்து கொள்ளுங்கள்.

· உங்கள் மனம் மகிழ்ச்சியடையக் கூடிய விஷயங்களை செய்யுங்கள்.

· சில சமயங்களில் “ நோ” சொல்வதில் தவறில்லை. யாரிடம் “நோ” சொல்ல வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.

· உங்களுடைய மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது தவறில்லை.

· “ரீ ஸ்டார்ட்” செய்ய கற்றுக் கொள்ளுங்கள். நாள் முழுக்க உழைத்தாலும் தூக்கம் மிக முக்கியமான ஒன்று. அதனால் தூங்கி எழுந்து புத்துணர்ச்சியுடன் செயல்படுவது மிக முக்கியம். தூங்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு உழைக்காதீர்கள்.

நம்முடைய தகுதியை மதிப்பிடுவது எப்படியென்றால், நாம் நம்மை எப்படி பார்த்து கொள்கிறோம் என்பதிலேயே இருக்கிறது. அதை பொருத்தே மற்றவர்களாலும் நாம் மதிக்கப்படுவோம் என்பது புரிந்து செயலாற்றுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com