
நாம் எந்த காரியம் செய்தாலும், அதில் எப்போதும் முழு நம்பிக்கை வைத்து செய்ய வேண்டியது அவசியம். தயங்கம், பயம் போன்ற எண்ணங்களை கைவிடும் போதே முழு வெற்றியை அடைய முடியும். இதைப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு நாட்டில் இருந்த மன்னன் தன் நாட்டு மக்களுக்கு ஒரு போட்டி ஒன்றை அறிவித்தார். அதாவது கோட்டை கதவை கைகளாலேயே தள்ளி திறக்க வேண்டும். அப்படி திறந்து வெற்றி பெற்றால், நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும் என்பதுதான் அந்த போட்டி. ஆனால், போட்டியில் தோற்றுப்போனால் ஒரு கை வெட்டப்படும் என்று அறிவித்தார்.
இதைக்கேட்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆசையிருந்தாலும், கை போய்விடுமோ என்று பயந்து யாரும் போட்டியில் கலந்துக் கொள்ளவில்லை. ஆனால், ஒரேயொரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்துக்கொள்ள முன்வந்தான். அங்கே கூடியிருந்த மக்கள் அவனிடம், ‘இந்த போட்டியில் நீ தோற்றுவிட்டால், உன் கை ஒன்றை வெட்டிவிடுவார்கள். உன் எதிர்காலம் என்னவாகும்?’ என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த இளைஞன் என்ன சொன்னான் தெரியுமா? ‘போட்டியில் ஜெயித்தால் நானும் ஒரு அரசன். போட்டியில் தோற்றால் கை ஒன்றுதானே போகும். உயிர் இல்லையே!’ என்று கூறிவிட்டு கோட்டை கதவை இளைஞன் தள்ள கதவு சட்டென்று திறந்துக் கொண்டது.
ஏனெனில், கோட்டை கதவை தாழ்பாள் போடவேயில்லை. இவ்வளவு நேரமும் கோட்டை கதவு திறந்துதான் இருந்தது. அந்நாட்டு மன்னர் தன் மக்களில் தைரியமும், தன்னம்பிக்கையும் உள்ள ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றே இவ்வாறு செய்தார்.
இந்தக் கதையில் வந்ததுபோல, ‘நம்மில் பலபேர் இப்படி தான் தோற்றுப்போய் விடுவோமோ? எதையாவது இழந்து விடுவோமோ?’ என்ற பயத்தினாலேயே முயற்சிக்காமல் அப்படியே இருந்து விடுகிறோம். ஒரு செயலை முயற்சித்து அடையும் தோல்வி உண்மையான தோல்வியல்ல. எதையுமே செய்யாமல் பயந்து முயசிக்காமல் விடுவதே உண்மையான தோல்வியாகும். இதைப் புரிந்துக் கொண்டு நடந்தால், வாழ்க்கையில் நிச்சயம் வெற்றிப் பெறலாம். முயற்சித்துப் பாருங்கள்.