தோல்வி மனப்பான்மை கொண்டவர்களிடம் உள்ள பலவீனங்களில் ஒன்று முகதாட்சண்யம். நண்பர்கள், அறிமுகமானவர்கள், உயரதிகாரிகள் போன்றவர் களுடைய வேண்டுகோள்களை நிராகரிக்க முடியாமல் தடுமாறி விடுவார்கள்.
"இல்லை... முடியாது…" என்று சொல்ல இவர்களுக்கு வாய் வராது. அச்சம் பாதி; எதிராளியின் நல்லுறவு கெட்டு விடுமோ, அதன் பிறகு தன்னிடம் அன்பாக -நல்லவராக அவர்-பழக மாட்டாரோ, தன்னை வெறுக்க ஆரம்பித்து விடுவாரோ, அதன் பின் இவரை நாடி ஏதேனும் உதவிக்கு அணுகினால் உதவி செய்ய மாட்டாரோ... இப்படி பல சிந்தனை. இவரை பேசவிடாமல் தடுத்து விடுகின்றன.
இதனால் 'முடியாது' என்று அப்பட்டமாக சொல்ல தயங்குவார்கள். இப்படி தயங்குபவர்களை தடுமாறுபவர்களை மற்றவர்கள் சுலபமாக தங்கள் சொந்த லாபங்களுக்கு பயன்படுத்திக் கொண்டு விடுவார்கள்.
ஒரு வெற்றியாளர் சொன்னார்: "என் வெற்றிக்கு முதல் காரணம் 'முடியாது' என்பதை சொல்ல கற்றுக் கொண்டேன். ஆனால் மற்றவர்களைப்போல முகத்தில் அடித்தார்போல 'முடியாது' என்று சொல்லாமல் அதை நயம் பட எதிராளி மனம் புண்படாதவாறு சொல்ல கற்றுக் கொண்டேன்".
என்னிடத்தில் ஜவுளி துணிகளை சரக்கு கொள்முதல் செய்ய வருகிறவர்கள் அதற்குரிய பணத்தை ரொக்கமாக கொடுக்காமல் 'செக்'காக கொடுப்பார்கள். இவர்களில் பெரும்பாலும் தில்லுமுல்லு பேர்வழிகள். அவர்கள் கொடுக்கும் செக் பணமில்லையென்று வங்கியில் இருந்து திரும்பி வந்துவிடும். சில பேர் செக்கைக் கொடுத்துவிட்டு 'ஸ்டாப் பேமெண்ட்' போட்டு விடுவார்கள். பணம் வராது. இப்படி ஏமாற்றிப் பிழைப்பவர்கள் பல பேர். அதனால் சரக்கு வாங்கும் வியாபாரிகள் செக் கொடுத்தால் வாங்க மறுத்துவிட்டு "உன் வியாபாரமே வேண்டாம்" என்று பல வியாபாரிகள் அவர்களை திருப்பி அனுப்பி விடுவார்கள்.
நான் அப்படி சொல்ல மாட்டேன். அவர்கள் 'செக்'கை நீட்டியதும் "மன்னிக்கவும் இதுதான் நமக்குள் நடக்கும் முதல் வியாபார பரிவர்த்தனை. எனவே ரொக்கமாக கொடுங்கள் நானும் யாருக்காவது செக் கொடுத்தால் வாங்க மறுக்கிறார்கள். எல்லோரும் ரொக்கமாக கேட்கிறார்கள். அப்போதுதான் அன்றாடம் வரவு செலவு பிசினஸ் செய்ய முடியும்" என்பேன்.
எதிராளி பணமாக கொடுக்கும்படி செய்து விடுவேன். இல்லை 'செக்'தான் கொடுப்பதாக அடம்பிடித்தால் நாசுக்காக மறுத்துவிட்டு," இன்று வேறொரு வியாபாரிக்கு ரொக்கத்திற்கு கொடுப்பதாக இருந்த சரக்கைத்தான் உங்களுக்கு கொடுக்க துணிந்தேன். நீங்கள் அடுத்த மாத வாக்கில் வாருங்கள். ஆனால் 'போன்' செய்துவிட்டு வாருங்கள்" என்று கூறி அனுப்பி விடுவேன் என்றார்.
ஆக முடியாது என்பதை கூட எப்படி நாசுக்காக கூற கற்று வைத்திருக்கிறார் பாருங்கள். முடியாது என்று சொல்ல முடியாமல், முக தாட்சண்யத்திற்காக கஷ்டப்பட்டு நஷ்டம் அடைந்து ஏமாந்து, மன உளைச்சலுக்கு ஆளாவதற்கு பதிலாக முதலிலேயே 'முடியாது' என்ற வார்த்தையை நாசூக்காக சொல்லிவிட்டால் இத்தகைய வீணான பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.