
சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்கள் சிலர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தத் தெரியாமல் அல்லது அதை அலட்சியப்படுத்தி தவற விடுபவர்களும் ஏராளம் பேர் உண்டு. வாய்ப்புகளை தவற விட்டுவிட்டு வருத்தப்படுவதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
வாய்ப்புகள் வரும்போது அவற்றை இறுகப்பற்றிக் கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில வாய்ப்புகள் மீண்டும் வராமலேயே போய்விடும். தவற விட்டுவிட்டு பின்னர் புலம்பியோ வருத்தப்பட்டோ எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை.
சரியான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்பவர்களே புத்திசாலிகள். ஒரு சமயம் தன் மக்களுக்கு திடீர் அதிர்ஷ்டப் பரிசுகள் தரவேண்டும் என்று நினைத்த மன்னர் ஒருவர், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் வீதி ஒன்றில் பொற்காசுகள் மற்றும் இன்ன பிற மதிப்புள்ள பொருட்களைப் புதைத்து, அதன் மேல் ஒரு நடுத்தர அளவில் உள்ள ஒரு கல்லை வைக்கச் சொல்லி ஆணையிட்டார்.
அந்த வழியாக சென்ற பலரும் அதை தாண்டி சென்றனர். ‘நடக்கின்ற இடத்தில் இப்படி கல்லை போட்டு வைத்தது யார்?’ என்று சிலர் திட்டிக் கொண்டும், ‘அடச்சே! கல்லு கிடக்கிறதே” என்று சலித்துக்கொண்டும், ‘யாரோ இங்கே கல்லைப்போட்டு இருக்காங்க; நமக்கு என்ன?’ என்று விட்டேத்தியான மனநிலையில் சிலரும் சென்றார்கள். ஒரே ஒருவர் மட்டும் கல்லை அகற்றி அதை ஓரமாக வைக்க எண்ணி, அதைத் தூக்கிய போது அதன் அடியில் பணமுடிப்பு இருந்ததை பார்த்தார். நிறையப் பணமும், பொற்காசுகளும், கூடவே ஒரு குறிப்பெழுதிய ஓலையும் இருந்தது. ‘இதை எடுத்துப் பார்ப்பவருக்கு இந்த நாட்டு மன்னனின் பரிசு’ என்று குறிப்பில் இருந்தது. சந்தோஷமாக அதை எடுத்துச் சென்றார் அந்த மனிதர்.
இப்படித்தான் பலருக்கும் நல்ல வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவற்றை தொந்தரவுகளாக சங்கடங்களாக சிக்கல்களாக நினைத்துக் கொள்பவர்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்வதில்லை. இந்த செயலில் இறங்கினால் பல ஆபத்துகளை சந்திக்க நேரிடுமோ என்ற தேவையற்ற பயத்தினாலும் சிலர் வாய்ப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள்.
செய்யப்போகும் செயலில் உடனடி நன்மையை எதிர்பார்ப்பவர்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்ய தயங்குவார்கள். எனவே சற்று சிரமமான ஆனால் நல்ல பலன்களை தரும் வாய்ப்புகளை நிராகரிக்கிறார்கள்.
இந்த வாய்ப்புப் போனால் என்ன? மீண்டும் வரும், என்கிற அலட்சிய மனப்பான்மையும் சிலருக்கு உண்டு. சிலர், மிக வற்புறுத்தி எடுத்துச் சொன்னால் மட்டுமே ஒரு செயலில் இறங்குவார்கள். இவர்களெல்லாம் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தத் தெரியாதவர்கள். அவற்றை பற்றிய சரியான புரிதலோ, தெளிவோ அற்றவர்கள். இவர்கள் தம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அல்லது நல்ல சிறப்பான மாற்றங்களைக் காண்பதற்கு மிக நீண்ட காலங்கள் பிடிக்கும்.
அதிபுத்திசாலியாக இருப்பவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதில்லை. தாமே அதை உருவாக்குவார்கள். ஆனால் வந்து வலியவந்த வாய்ப்புகளை தவறவிடுபவர்கள் வாழ்வில் நிறைய இழக்கிறார்கள்.
பாடங்களை சரியாக படிக்காமல், தேர்வுக்கு முறையாக தயார் செய்யாத மாணவர்கள் வெற்றி மற்றும் நல்ல மதிப்பெண்களைத் தவற விடுகிறார்கள். அவர்களுக்கு அதற்காக உதவித்தொகை கூட கிடைக்கக்கூடும். ஆனால் அதை தங்களது சோம்பேறித்தனத்தால் இழக்கிறார்கள்.
ரிஸ்க் எடுக்க பயந்த தொழில் முனைவோர், வந்த வாய்ப்புகளை தவறவிட்டு பெரும் லாபத்தை இழக்கிறார்கள். தயக்கம் அல்லது சரியான தயாரிப்பு இல்லாத காரணத்தால் தொழில் வல்லுநர்கள் முன்னேற்ற வாய்ப்புகளை தங்கள் தொழிலில் இழக்கிறார்கள்.
அதேபோல சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளாத வணிகர்கள் அல்லது நிறுவனங்கள் நல்ல வாய்ப்புகளை இழக்கிறார்கள். இதனால் அவர்களது தனிப்பட்ட மற்றும் தொழில் வளர்ச்சி மிகவும் பாதிக்கும். அதனால் வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வந்தால் ஒருவர் தம் வாழ்வில் ஏற்றத்தையும் வெற்றியையும் காண்பது உறுதி.