நாம் செய்யும் செயல் நல்லதோ அல்லது கெட்டதோ அதற்கான விளைவுகளை நாம்தான் அனுபவிக்க வேண்டும். நாம் கடமையை ஒழுங்காக செய்யாமல், எல்லாவற்றிற்கும் கடவுளை பொறுப்பேற்க சொல்ல முடியுமா? நம்முடைய பாரத்தையெல்லாம் கடவுள் மீது போட்டுவிட்டு நாம் விலகிக்கொள்வது சரியா? அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம் வாங்க.
ஒரு அடர்ந்த காட்டில் குருவும், சிஷ்யனும் யானையின் மீது பயணம் செய்து போய்க்கொண்டிருந்தனர். அன்று பொழுது போனதால் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்க முடிவு செய்கின்றனர். யானையை பத்திரமாக பார்த்துக் கொள்வது சிஷ்யனின் வேலையாகும். அந்த சிஷ்யனுக்கு மிகவும் சோர்வாக இருந்ததால், யானையை கட்டிப்போடாமல், ‘கடவுளே! இந்த யானையை பத்திரமாக பாத்துக்கொள்வது உங்களுடைய பொறுப்பு’ என்று கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு சிஷ்யன் தூங்கி விடுகிறான்.
அடுத்தநாள் காலை எழுந்து பார்த்தால் யானையை காணவில்லை. ‘யானையை கட்டிப்போடத்தானே சொன்னேன். நீ எதற்கு கட்டாமல் விட்டாய்’ என்று சிஷ்யனை பயங்கரமாக திட்டுகிறார் குரு.
அதற்கு சிஷ்யனோ, நீங்கள் திட்டுவதென்றால் என்னை திட்டாதீங்க. அதற்கு பதில் கடவுளை திட்டுங்கள். நீங்கள் தான் கடவுளை முழுதாக நம்ப வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தீர்கள். அதனால்தான் கடவுளிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நான் தூங்கினேன் என்று கூறினான்.
அதற்கு குருவோ, உன்னுடைய கடமையை செய்ய வேண்டியது உன்னுடைய பொறுப்பு. அதற்கு உதவ வேண்டியதே கடவுளின் பொறுப்பு. நீ பிரார்த்தனை செய்ததெல்லாம் சரிதான். ஆனால் யானையை கட்டிப்போட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் விட்டது உன்னுடைய தவறுதான் என்று குரு கூறினார்.
இதே மாதிரி தான் நம்முடைய 100% முயற்சியை, உழைப்பை போட்டுவிட்டு கடவுள் நமக்கு உதவுவார் என்று நினைத்தால், கண்டிப்பாக அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும். ஆனால் முயற்சி ஏதும் செய்யாமல் வெறுமனே கடவுள் நமக்கு உதவுவார் என்று நினைத்தால், கடவுளால் மட்டுமில்லை வேறு யாராலுமே உதவ முடியாது.
எனவே கண்மூடித்தனமாக கடவுள் நல்வழிக் காட்டுவார் என்று எந்த உழைப்பையும் போடாமல் நம்பிக் கொண்டு காலத்தை வீணாக்குவதை விடுத்து கடுமையாக முயற்சித்து பார்த்தால் நிச்சயமாக வெற்றிக் கிடைக்கும்.