
தற்காலத்தில் வாழும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒருவித மன அழுத்தத்திலேயே வாழ்கிறார்கள். எதற்கெடுத்தாலும் கவலைப்படுபவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாகவே இளம் வயதிலேயே அறுபது வயதுக்கு மேல் வரக்கூடிய ஹார்ட் அட்டாக், சர்க்கரை வியாதி, இரத்தக்கொதிப்பு என பல வியாதிகள் வரத்தொடங்கி விடுகின்றன.
நூறு வயது வாழவேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குமே உள்ளது. கவலை வேண்டாம். நிச்சயம் வாழ்வோம். அதற்கு மிக மிக முக்கியமாக நாம் கடைபிடிக்க வேண்டிய ஒரு விஷயம் கவலையற்ற வாழ்க்கை. கவலை என்பது ஒரு கரையானைப்போல செயல்படும். கரையான் மரத்தை அரித்துத் தின்று தின்று அந்த மரத்தையே அழித்துவிடும். கவலை நம்மை சிறிது சிறிதாக அழித்துக் கொன்றுவிடும். பக்கவாதம், ஹார்ட்அட்டாக் போன்ற நோய்கள் கவலையின் காரணமாகவே ஏற்படுகிறது. கவலைப்படும் போது நமது மனம் மிகவும் பாதிப்படைகிறது. இதனால் நமது வழக்கமான செயல்கள் பாதிக்கப்படுகின்றன. முக்கியமாக தூக்கம் கெடுகிறது. துக்கம் நம் மனதைச் சூழ்ந்து கொள்ளுகிறது. மனஉளைச்சல் காரணமாக வியாதிகள் நம்மை சுலபமாக நெருங்குகின்றன.
உலகத்திலேயே நம்பர் ஒன் பணக்காரனாய் இருந்தாலும் சரி. நம்பர் ஒன் ஏழையாக இருந்தாலும் சரி. பூமியில் பிறக்கும் அனைவருமே கவலைக்கு உறவினர்களாகவே இருக்கிறார்கள். கவலை மனிதர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடுகிறது. கவலை மனிதர்களின் மனதை அரித்து விரைவில் மரணத்துடன் கை குலுக்க வைக்கிறது.
உலகத்தில் இரண்டுவிதமான கவலைகள் இருக்கின்றன. தீர்க்க முடிந்த கவலைகள். தீர்க்க முடியாத கவலைகள். நாம் கவலையே இல்லாமல் வாழவே விரும்புகிறோம். இதுவே நமது பிரச்னை. நமது கவலைகளில் பெரும்பாலும் தீர்க்க முடிந்த கவலைகளாகவே இருக்கின்றன. பிரச்னையை ஆராய்ந்து அதை எவ்வாறு தீர்க்கலாம் என்று யோசிக்கப் பழகவேண்டும். நமது பிரச்னையை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் பிரச்னை தீராது. கவலையை வளர விட்டால் அது நமது மனதை காயப்படுத்தி உடலின் இயக்கத்தை மாற்றி பல வியாதிகளை கொண்டு வந்து சேர்த்துவிடும். கடைசியில் திடீரென்று மரணம் ஏற்பட்டுவிடும்.
கவலைப்பட்டு ஏதாவது ஆகப்போகிறதா? நிச்சயம் இல்லை.ஒன்று கவலையைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். அல்லது உங்களைவிட அதிக பிரச்னை உடைய ஒருவரைப் பார்த்து நமது கவலை எவ்வளவோ மேல் என்று உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக் கொள்ளப் பழகுங்கள். கவலைகளை எதிர்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு வந்துவிடும்.
சிலர் எப்போது பார்த்தாலும் வயதாகி விட்டதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இத்தகைய கவலையின் காரணமாகவே சுறுசுறுப்பு குறைந்து வயதான தோற்றத்தை வெகுவிரைவிலேயே அடைந்தும் விடுகிறார்கள். ஒரு சமயம் காந்திஜியை பேட்டி காண அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு பத்திகையாளர் சபர்மதி ஆசிரமத்தில் அவருடன் சில நாட்கள் தங்கியிருந்தார். அந்த பத்திரிகையாளர் ஆசிரமத்தில் காந்திஜி சுறுசுறுப்பாக பணியாற்றுவதைக் கண்டு வியந்தார்.
“தங்களைப் பார்த்தால் 65 வயதானவரைப் போலத் தெரியவில்லையே. இந்த வயதிலும் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக தங்களால் பணியாற்ற முடிகிறது?”
பத்திரிகையாளர் காந்திஜியிடம் வியப்புடன் இப்படி ஒரு கேள்வியினைக் கேட்டார். அதற்கு காந்திஜி “நான் ஒரு இளைஞன் என்ற எண்ணமே எப்போதும் என் மனதில் மேலோங்கி இருக்கிறது. நான் வயதானவன் என்பதை எப்போதும் நினைத்துப் பார்ப்பதே இல்லை. இதுவே என் சுறுசுறுப்பின் இரகசியம்” என்றார்.
உங்கள் கவலைகள் எதுவாக இருப்பினும் அதை மனதிலிருந்து அகற்றுங்கள். பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதை சரியான விதத்தில் அணுகுங்கள். நிச்சயம் பிரச்னைகள் தீரும். கூடவே உங்கள் கவலையும் தீரும். ஆரோக்கியமும் பெருகும்.