எந்த வேலை செய்தாலும் அதில் முழுமையாக ஈடுபாடு காட்ட வேண்டும்!

Motivation Image
Motivation Imagewww.facebook.com

காட்டுக்குள் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் ஒரு துறவி.

அடிவானத்தில்  ஒருவர் பரபரப்பாக காட்டுக்குள் அந்த மரத்தை ஒட்டிய பாதையில் ஓடி வந்தார். காய்ந்த சருகுகளின் மேல் அவர் வேகமாக ஓடியதால் எழுந்த சத்தமும், அவரது குரலும் துறவியின் தியானத்தை கலைத்தது.

கோபத்தோடு எழுந்தார் துறவி. ஓடிய மனிதர் துறவியை கவனிக்காமல், அவரை தாண்டி போய்விட்டார்.

துறவிக்கு கோபம் பொங்கியது. மறுபடியும் இந்த வழியாகத்தானே வருவான்... வரட்டும் பார்ப்போம் என காத்திருந்தார். சிறிது நேரம் கழித்து ஒரு சிறுவனை தன் தோளில் சுமந்து கொண்டு அந்த மனிதர் வந்தார்.

அவரை வழி மறித்த துறவி, "உனக்கு பொறுமை இல்லையா? நான் தியானத்தில் இருந்ததை கவனிக்கலையா? சத்தம் போட்டு என் தியானத்தை  கலைத்து விட்டாயே? என கோபத்துடன் கேட்டார் துறவி.

அந்த மனிதர் பயந்து பணிவுடன் துறவியைக் கும்பிட்டு, 'என்னை மன்னித்து விடுங்கள் தாங்கள் அமர்ந்து இருந்ததை கவனிக்கவில்லை" என்றார்.

துறவி சமாதானம் ஆகவில்லை. 'என்ன? உனக்கு கண் தெரியாதா?" என்று மீண்டும் கத்தினார்.

அந்த மனிதர் நிதானமாக" இல்லை சுவாமி என் மகன் மாலையில் தன்  நண்பர்களுடன் விளையாட இந்த காட்டுப் பக்கம் வந்தான்.

மற்றவர்கள் எல்லோரும் திரும்பி விட்டனர். என் மகன் மட்டும் வரவில்லை. ஏதாவது கொடிய விலங்குகளிடம் மாட்டியிருப்பானோ என்ற பயத்தில் அவனைத்தேடி ஓடினேன். மகன் நினைப்பில் இருந்ததால் உங்களை கவனிக்கவில்லை என்றார்.

துறவி விடவில்லை' என்ன காரணம் சொன்னாலும் என்னால் ஏற்க முடியாது. இறைவனை நினைத்து தியானம் செய்து கொண்டு இருந்த எனக்கு நீ பெரிய தொல்லை கொடுத்தது தவறு" என்றார்.

அந்த மனிதர் துறவியிடம் ஒரு கேள்வி கேட்டார்.

"தியானத்தில் மூழ்கியிருந்த  உங்களுக்கு நான் ஓடியது கத்தியது தெரிந்தது. அதனால் உங்கள் தியானமும் கலைந்தது.

ஆனால் மகனைத்தேடி ஓடிய நான் என் கண்முன்னே இருந்த உங்களை கவனிக்கலையே? என் நினைப் பெல்லாம் மகன் மீது மட்டுமே இருந்ததால் வேறு எதுவுமே தெரியலை.

இதையும் படியுங்கள்:
முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் கூச்ச சுபாவம்! எப்படி மாற்றுவது?
Motivation Image

சாதாரண சத்தங்களே உங்கள் தியானத்தை கலைத்து விட்டது என்றால் உங்கள் நினைப்பு இறைவன் மீது இல்லையே...

இது என்ன தியானம்? ஈடுபாடு இல்லாத இந்த தியானத்தால் என்ன பலன்?"

துறவிக்கு தன் தவறு உறைத்தது. அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டார்.

நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழுமையான ஈடுபாடு காட்ட வேண்டும். அப்படி மூழ்குபவர்கள்தான் ஜெயிக்கிறார்கள். இறைபக்தியிலும் அப்படித்தான் மனதை ஒருமுகப்படுத்தி பக்தியில் மூழ்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com