
எந்தச் செயலைச் செய்தாலும் நேர்த்தியாகச் செய்யவேண்டும் என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அலுவலக மேசையில் தேவையான பொருட்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்வது நியதி. ஆனால், அவற்றை அழகாக கலைநயத்துடன் ஆங்காங்கே வைப்பது நேர்த்தி. வரும் பார்வையாளர் உங்களது மேசையைப் பார்த்தவுடன் அதன் நேர்த்தியில் மயங்கிப் போவதுடன், உங்களைப் பற்றியும் உயர்வான அபிப்ராயத்தை உடனடியாக தனது உள்ளத்தில் ஏற்றிக்கொள்வார். இது உங்களின் செயல்பாடுகளை வெற்றிகரமாக்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
பிறரிடமிருந்து நாம் தனியாகத் தெரியவேண்டும். பலருடைய பாராட்டும் நமக்கும் கிடைக்க வேண்டும். இதைச் சாதிப்பதற்கு எதையும் நேர்த்தியாகச் செய்வது என்ற பழக்கம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
வெற்றி என்பது சிகரங்களை எட்டுவது மட்டுமல்ல. அதற்கான பாதையும் எழில் உள்ளதாக அமைந்தால், அதுதான் முழுமையான முன்னேற்றம்.
மனம் பொருந்தி செய்யும் எந்தச் செயலிலும் ஓர் எளிமையும் அழகும் நேர்த்தியும் தானாகவே வந்து அமைந்து விடும். இந்த நேர்த்தி நம்மிடம் இருக்கும் பல பண்புகளைப் பிறருக்குச் சொல்லாமல் சொல்லிவிடும். அந்தப் பண்புகள்:
1. செய்யும் வேலையில் அக்கறை.
2. செய்யும் பணியில் கவனம்.
3. எதையும் திறம்படச் செய்யும் ஆர்வம்.
4.கடமையுணர்வோடு கூடிய கலையுணர்வு.
5. செம்மையாகச் திட்டமிட்டுச் செயல்படும் திறன்.
6. செய்வன திருந்தச் செய் என்ற உணர்வு.
படிப்பது, பேசுவது, பழகுவது, உண்பது, உடுத்துவது, விளையாடுவது, வேலை செய்வது என எதில் ஈடுபட்டாலும் அதில் ஒரு நிறைவு ஏற்பட்டால்தான் அச்செயல் சரியாக அமைந்தது என்று கூற முடியும். இந்த நிறைவு என்ற உணர்வு, செய்பவர் அல்லது அதன் பலனைக் கொள்பவர் என்ற இருவரில் ஒருவருக்கு மட்டும் கிடைத்தால் போதாது. இருவருக்குமே கிடைக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையானதாக, மனநிறைவைத் தருவதாக அமையும். அப்படிப்பட்ட செயல்கள்தான் நேர்த்தியானவை.
வாழ்வில் காணும் மன அழுத்தங்கள், எதிர்வினைச் சிந்தனைகள் ஆகியவற்றை நேர்த்தியாகச் செய்யப்பட்ட செயல்கள் திசைமாற்றம் செய்து, மனதுக்கு அமைதியைத் தந்துவிடும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.
கலையுணர்வும் அதைத்தானே செய்கிறது. வாசலில் காணப்படும் அழகிய கோலமும் வாயிலில் வரவேற்கும் மாவிலைத் தோரணமும் நொடியில் நம் கண்களுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.
புத்தகங்களை அடுக்கி வைப்பது, ரெகார்ட் நோட்டில் படம் வரைவது, புத்தகங்களின் அட்டை, பள்ளிச் சீருடைகள், காலணிகள் பை ஆகியவற்றைத் தூய்மையாக வைத்துக் கொள்வது என்று மாண வப் பருவத்திலேயே அன்றாடப் பணிகள் பலவற்றை குழப்பமில்லா மல், சீராகவும், நேர்த்தியாகவும் செய்யக் கற்றுக் கொண்டவர்களுக்கு அப்பழக்கம் வளர்ந்து பெரிவர்களானபோதும் கூடவே வரும். வாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டியாக அமைந்து வெற்றியை ஈட்டித்தரும்.