

வாழ்வில் உயர வேண்டுமெனில்… முதலில் தன்னம்பிகை வேண்டும். ஆம். நீங்கள் உங்களை நம்ப வேண்டும். ஒருவர் வெற்றியை அடைய வேண்டுமெனில், அவருடைய திறமை மீது அவருக்கு வலுவான, அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும். அவரது சொந்த திறமை அல்லது ஆற்றல் மீது அவருக்கே சந்தேகம் இருக்கக்கூடாது. இதை கடந்த நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க ஆங்கில எழுத்தாளர் நெப்போலியன் ஹில், அவருடைய 'திங்க் அண்ட் க்ரோ ரிச்' என்ற புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.
'ஒரு இலக்கின் மீது ஒருவருக்கு தீவிரமான ஆசை இருப்பது அதை அடைவதற்கான முதல் படியாகும். அந்த இலக்குகளை அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
இலக்கின் மீதான ஒருவருடைய நம்பிக்கையை அவர் வலுப்படுத்திக்கொள்ள, நேர்மறையான அவர் சுய பேச்சு மற்றும் உறுதிமொழிகளைப் பயன்படுத்துதல் அவசியமாகிறது' என்றும் திரு நெப்போலியன் ஹில் சொல்லியிருக்கிறார்.
'இஃப்' (If) என்ற ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய சொல்லை வைத்து, பலரும் பேசக்கூடிய வார்த்தைகளை கவனித்தாலே, அது அவர்களுடைய சுய முன்னேற்றத்தை எப்படி பாதிக்கிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள முடியும்.
‘ஒரு குறிப்பிட்ட செயல் நிகழ்ந்தால் அல்லது நடக்கவில்லை என்றால் என்ன செய்வது?!’ என்று சந்தேகமாக சொல்வதற்கு இந்த சொல் ஆங்கில மொழியில் உபயோகிக்கப்படுகிறது. இதன் பொருள் சூழலுக்கு ஏற்ப மாறும்.
எனக்கு சரியான நேரம் கிடைத்திருந்தால், மற்றவர்கள் என்னை புரிந்துக் கொண்டிருந்தால், நான் எதிர்பார்த்த மாதிரி என் வாழ்க்கை அமைந்திருந்தால், நான் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தால், எனக்கு உதவ யாராவது இருந்திருந்தால் இப்படி பலவிதமான எண்ணங்களை சொல்வதற்கு இந்த ‘இஃப்’ என்கிற சொல்லை பயன்படுத்துகிறார்கள்.
இவைகள் பெரும்பாலும் சூழ்நிலைகளை அல்லது மற்றவர்களைகுறை சொல்லும் விதமாக இருப்பதைப் பார்க்கலாம். மேலும் தன்னம்பிக்கை குறைபாடு இந்த வார்த்தைகளில் வெளிப்படுவதை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.
'வெற்றி பெறாதவர்களுக்குப் பொதுவான ஒரு குணம் உள்ளது. அவர்கள் தோல்வியை சமாளிப்பதற்கு, இப்படி சில காரணங்களை சொல்வது ஒரு தேசிய பொழுதுபோக்காகும்' என்று நெப்போலியன் ஹில் சொல்கிறார்.
சந்தேகம் என்பது நிச்சயமற்றத்தன்மை! அதாவது ஒரு கருத்தையோ அல்லது செயலையோ ஏற்றுக்கொள்வதில், ஒருவருக்கு ஏற்படும் தயக்கத்தையும், உறுதியற்றத் தன்மையையும் இது குறிப்பிடுகிறது. இந்த சந்தேகம் என்கிற சொல் தமிழில் 'ஐயம்' என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஐயம் வருவதற்கு காரணம் பயம் அல்லது அவநம்பிக்கை என்று சொல்லப்படுகிறது.
நல்ல சந்தேகம் என்பது ஒரு எச்சரிக்கை உணர்வோடு செயல்பட உதவுகிறது. ஒரு விஷயத்தில் உண்மையைத் தேடும் மனப்பான்மை அல்லது உண்மையை அறிய விரும்பி, அதற்கான வலுவான ஆதாரங்களைத் தேட வைக்கிறது.
அதே சமயத்தில் சந்தேகமானது , நமக்குள் எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கி, அதனால் நமக்கு கிடைக்கின்ற நல்ல வாய்ப்புக்களை இழந்து விட காரணமாகிறது. 'சந்தேகம் தீராத வியாதி. அது வந்தாலே தடுமாறும் அறிவென்னும்-ஜோதி!சிந்தித்துப் பார்க்க விடாது, யாரையும் நிந்தித்துப் பழிபேச அது தயங்காது' என்று காலஞ்சென்ற கவிஞர் மருதகாசி அவர்கள் பழைய திரைப்பட பாடலில் எழுதியிருக்கிறார்.
உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள், அவை வார்த்தைகளாகின்றன. உங்கள் வார்த்தைகளைப் பாருங்கள், அவை செயல்களாகின்றன. உங்கள் செயல்களைப் பாருங்கள், அவை பழக்கங்களாக மாறுகின்றன. உங்கள் பழக்கங்களைப் பாருங்கள், அவை உங்கள் குணாதிசயங்களாகின்றன.
உங்கள் குணத்தைப் பாருங்கள், அது உங்கள் விதியாகிறது என்று ஒரு வாழ்க்கைத் தத்துவம் இருக்கிறது. எனவே, நீங்கள் உங்களை உங்கள் திறமையை நம்பி, உங்களைத் தேடிவரும் வாய்ப்புக்களை பயன்படுத்தி, இப்போதே செயல்படுங்கள். உங்கள் வாழ்வில் முன்னேறுங்கள்.