தன்மீது மிகுந்த தன்னம்பிக்கை கொண்டு தான் எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி பெற்று விடுவதாகவே நினைத்துச் செயல்பட்டார் பாரதியார். வெற்றித் திருமாகனாகவே இன்றும் நம் எல்லோரின் நினைவில் வாழ்கிறார் மகாகவி பாரதியார்.
நினைத்தால், நினைத்ததை அடைய முடியும் என்பதற்கும் பாரதியின் வாழ்க்கை தமக்குச் சான்றாகத் திகழ்கிறது. நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்று நினைத்துத் தன் ஆழமான எழுத்துக்களால் சுதந்திர வேட்கையை ஊட்டினார். எதைக்கண்டும் அஞ்சாது வாழ வேண்டும் என்று அறிவுரை கூறினார். எதிர்ப்புகளைத் துச்சம் என மதித்தார் பாரதியார்.
1882ம் வருடம் எட்டயபுரத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதி பிறந்தார். சுதந்திரத் தாகத்தைத் தமிழ் மக்களிடையே விதைத்தவர்களில் பாதியார் மிக முக்கியமானவராகத் திகழ்கிறார். அவர் சிறந்த கதாசிரியராக, எழுத்தாளராக, கட்டுரையாளராக, பத்திரிக்கை யாளராக, கவிஞராக, இசை ஞானியாக, மொழிபெயர்ப்பாளராக தேசியவாதியாக பன்முகங்களில் பிரிசித்தி பெற்றவராகத் தம்முடைய 39 வருட வாழ்நாட்களில் திகழ்ந்த்தார். பெட்டிக்குள் அடங்கி ஒடுங்கிய அடையாளமாகப் பலர் இருந்த காலத்தில் தன் எண்ணங்களைக் கட்டுக்கள் இன்றி பறக்கவிட்டார். அவரின் எண்ண ஓட்டங்கள் இன்றும் உணர்ச்சியைத் தூண்டுவனவாக தேசபற்றைப் பறை சாற்றுபவையாக தமிழ் மனங்களை உயர்த்துவனவாகத் திகழ்கின்றன.
அவர் எண்ணத்தின் வல்லமையை அவரின் எழுத்து வரிகள் ஆழமாக எடுத்து இயம்புகின்றன. தமிழில் புதுக்கவிதை எழுத்தாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து சாமானியரும் தமிழில் புதுக்கவிதை எழுத வழிவகுத்தார். தம்முடைய உயர்ந்த எண்ணங்களால் தமிழ்ச் சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார் பாரதியார். அதில் பெரு வெற்றியும் கண்டார்.
எதிர்காலத்தில் நாட்டின் சுதந்திரம், பெண் உரிமை, கல்வி வளர்ச்சி தமிழ்ச் சமுதாயம் எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ அதையே நாம் இன்று கண்கூடாக காண்கிறோம் .
பாரதியாரின் வாழ்நாளில் தமிழ்ச் சமுதாயம் பின்தங்கி அடிமைப் பட்டு இருந்தது. இந்த நிலைமையிலிருந்து தமிழர்களை மாற்றி, தமிழ்ப் பற்று ஏற்பட வைத்து, ஊக்கத்துடன் எதிர்காலம் குறித்துக் கனவு காண வைத்தார். உணர்ச்சிப் பெருக்கு என்ற பெரு வெள்ளத்தில் தமிழர்களை நீந்த வைத்தார். நினைத்தது நடக்கும் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறார் மகாகவி பாரதியார்.
பலர் தாங்கள் வெல்லாததற்கு மற்றவர்களைக் காரணம் கூறுகின்றனர். சாதகமான சூழ்நிலை இல்லாததும், எதிர்பாராத எதிர்ப்புகளால் பாதிக்கப்பட்டதையும், வசதி வாய்ப்புகள் இல்லாததையும், நேரம் இல்லாததையும் காரணம் காட்டி வெற்றி பெறாததை ஏற்றுக் கொள்கின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும் இறுதி முடிவு வெற்றி பெறாததே என்பதை அவர்கள் நினைக்கத் தவறுகின்றனர்.
வெற்றி பெற்றாக வேண்டும் என்று உறுதியாக, இறுதிவரை உழைத்தால் கண்டிப்பாக நினைத்ததை வெல்ல முடியும். வெற்றி பெறும் நேரம் மாறக் கூடும். ஆனால் உறுதியான எண்ணத்துடன் உழைப்பவர்களின் வெற்றியை அவர்களிடமிருந்து பிரிக்க முடியாது. நினைத்ததை வெல்ல வயது ஒரு தடையல்ல. நினைத்தது ஒரு நாள் நடந்தே தீரும்.