.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
தொழில்நுட்பத் துறையில் பணி செய்யும் பெண் அவர். திருமணமாகி குழந்தையும் இருக்கிறார். அனுசரித்துப் போகும் கணவர் கூப்பிட்ட குரலுக்கெல்லாம் ஓடி வந்து உதவி செய்யும் உறவினர்கள் என்று அவரின் வாழ்க்கை உண்மையிலேயே எந்த வித அழுத்தங்களும் இல்லாத இனிய வாழ்க்கையாகத்தான் இருந்தது. திடீரென அவரின் போக்கில் மாற்றம்.
சிரித்த முகம் மாறி திடீரென்று கணவரிடம் எரிந்து விழுவதும் ஆக அவரது நடவடிக்கைகள் வேறு மாதிரி ஆகின. கணவருக்கு ஏதோ தவறாக நடக்கிறது என்று புரிந்தது.
அவருக்குத் தெரிந்த நல்லதொரு உளவியல் நிபுணரிடம் சென்றார். எந்த ஒளிவு மறைவும் இன்றி தங்கள் வாழ்வின் அத்தனை ரகசியங்களையும் அவரிடம் பகிர்ந்து கொண்டார். அந்த நிபுணர் கேட்ட ஒரே கேள்வி "உங்கள் மனைவிக்கு வேலை வீடு தவிர வேறு பொழுது போக்குகள் ஏதேனும் உண்டா?" கணவர் யோசித்தார்.
"அவருக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், என்னுடனும் குழந்தையுடனும் நேரங்களை செலவழிப்பதிலேயே நேரம் நிறைந்து விடுகிறது. அது மட்டும் இன்றி அதுவே எங்கள் இருவருக்குமே போதுமானது என்று நினைக்கிறேன்" என்று சொல்லிய கணவரிடம் சற்றே கடுமையான குரலில் "உங்களுக்கு வேண்டுமானால் போதுமானது என்று சொல்லுங்கள். ஆனால் பன்முகத் திறமை உள்ள உங்கள் மனைவிக்கு அவருக்கென்று ஒரு டைம் நிச்சயம் இருக்க வேண்டும். இத்தனை நாட்கள் அவருக்கு தெரியவில்லை . இப்பொழுது அவருக்குள் இருக்கும் திறமைகள் தங்களுக்கான நேரத்தை ஒதுக்க சொல்லி கெஞ்சுகின்றன. அது முடியவில்லை எனும்போது அவரின் நடத்தையில் மாற்றங்கள் உருவாகின்றன. அந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் அன்பாக இருந்தாலும் கூட உங்களிடம் அவர் எரிந்து விழுகிறார். முதலில் அவருக்கான நேரத்தை ஒதுக்க சொல்லுங்கள்."
ஆலோசனையை ஏற்று மனைவியை நல்லதொரு நடனப் பள்ளியில் சேர்த்தார். பணி முடிந்து வந்தாலும் அலுப்பில்லாமல் அந்த நடனத்துக்கான ஒத்திகைகளை பார்க்க ஆரம்பித்தார் மனைவி . அந்த நேரம் அந்த பெண்ணின் முகத்திலிருந்த மகிழ்ச்சி இத்தனை நாட்கள் எங்கே போனது?
இந்த இடத்தில்தான் மீ டைம் எனப்படும் "எனக்கான நேரம்" வருகிறது. நமது பரபரப்பான வாழ்க்கையில் நம் வாழ்க்கையைக் கண்காணிக்க "எனக்கான நேரத்தை" பெரும்பாலோர் வழங்குவதில்லை. இதனால் பலருடைய அன்றாட பணிகளில் சுணக்கமும் உறவுகளிடையே மனத்தாங்கலும் அதிகரித்து வருகிறது என்கின்றனர் மனவியல் நிபுணர்கள். அவரவர்க்கான நேரத்தை சரியான முறையில் நிர்வகிக்கத் தெரிந்தவர்களே வாழ்வில் முன்னேறுகிறார்கள்.
களைத்துப் போகும் மனதிற்கு எனர்ஜி தந்து அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்த உதவுகிறது. மன அழுத்தங்களில் இருந்து மனதைத் திசை திருப்ப உதவுகிறது. தனக்கென அர்ப்பணிக்கப்பட்ட நேரத்தை பிடித்த சில பொழுதுபோக்குகளை பயிலவும், உடற்பயிற்சி செய்வதற்கும் பயன்படுத்தலாம். இது மனதை பதட்டமின்றி ரிலாக்ஸ்டாகவும், மன அழுத்தமில்லாமல் வைத்திருக்கவும் பெரிதும் உதவுகிறது. தன்னம்பிக்கையை தூண்டுகிறது.
மீ டைம் என்பது, உங்களுக்காக ஒரு அரைமணி நேரம் ஒதுக்கிக் கொள்வது. இந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சிகள், தியானம், நடைப்பயிற்சி நமது சுயவிருப்பங்கள், திறமைகளை பட்டியலிடுவது. சொல்லப்போனால் இது சுய அலசலுக்கும் வழிவகுக்கும் ஒரு நேரமே. தினசரி வாழ்வில் ஒரு சிறிய நேரத்தை நமக்காக ஒதுக்குவதால் வாழ்வில் மிகப்பெரும் நன்மைகளுடன் வெற்றி தரும் என்பது மட்டும் உண்மை.