இதென்னடா புதுசு புதுசா பேர வச்சி என்னென்னமோ சொல்றானே அப்படின்னு கேட்டீங்கன்னா, ஆமா இது புதுசு கண்ணா புதுசு.
நாம் நமது அறிவுத்திறனை எந்த அளவுக்கு வளர்த்து வைத்துள்ளோம். என்னென்ன விஷயங்களை அறிந்துள்ளோம் என்பதைத் தாண்டி, நம்மைப் பற்றி நாம் முதலில் அறிந்து கொள்வது நம்முடைய தலையாயக் கடமை.
முதலில் நம்மைப்பற்றி நாம் அறிந்தால் மட்டுமே, சிறப்பான திசையை நோக்கி நாம் சென்று கொண்டுள்ளோம் என்பதனை அறிய முடியும். இல்லையென்றால் எந்த ஒரு புரிதலும் இல்லாமல், திக்கற்று திசையற்றுதான் வாழ்ந்து கொண்டிருப்போம்.
இந்த பதிவில் உங்களைப் பற்றி நீங்கள் எப்படி அறிந்து கொள்ளலாம் என்பது சார்ந்த ஒரு முறையினை உங்களிடம் பகிர்கிறேன். அதன் பெயர்தான் Brain Dumping Strategy. இதன் மூலம் உங்களுக்கு தேவையானவற்றை உங்கள் மூளையில் திணித்து, உங்களைப் பற்றி அறிய முடியும்.
எளிமையாகக் கூற வேண்டும் என்றால், தினசரி நீங்கள் எம்மாதிரியான விஷயங்களை செய்கிறீர்கள், எம்மாதிரியான எண்ண ஓட்டங்களில் இருக்கிறீர்கள், எம்மாதிரியான ஏற்ற இறக்கமான மனநிலையில் இருக்கிறீர்கள், உங்களைப்பற்றிய நல்லது கெட்டது என, ஒரு குறிப்பேட்டில் குறித்து வைக்க வேண்டும்.
சரி இவ்வாறு நான் குறித்து வைப்பது மூலம் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது எனக் கேட்டால், நான் எதைப் பற்றியும் சிந்திக்காமல் தினசரி ஏதோ ஒன்றை நாம் செய்யும்போது, நாம் நமது வாழ்வில் எதை நோக்கி செல்கிறோம் என்பதனை நம்மால் உணர முடியாது.
தினசரி ஒரே மாதிரியான வாழ்க்கை சூழலில் சிக்கிக் கொண்டு நாமும் சுழன்று கொண்டிருப்போம். எதைப் பற்றியும் நம்முடைய மூளை நம்மை சிந்திக்கவிடாமல் நாம் செய்யும் செயல்களிலேயே முழுமையாக மூழ்கடித்துவிடும்.
நான் கூறியது போன்று தினசரி நீங்கள் எழுதி வைத்தால், அது உங்களைப் பற்றியும் உங்கள் எண்ண ஓட்டங்களை பற்றியும் சிந்திக்கச் செய்யும். அவற்றை நீங்கள் சிந்தித்தால் உங்களைப்பற்றிய பல விஷயங்களை நீங்களே அறிந்து கொள்ளலாம். நாம் இன்று எவ்வளவு நேரம் தேவையானதை செய்துள்ளோம், இவ்வளவு நேரத்தை வீணடித்துள்ளோம், இவ்வளவு நேரம் நம்முடைய மனநிலை இப்படி இருந்துள்ளது, இவ்வளவு நேரம் நல்லது செய்துள்ளோம் இவ்வளவு நேரம் கெட்டது செய்துள்ளோம் என்பது போல ஒரு தெளிவு பிறக்கும்.
இந்த ஒரு தெளிவு நமக்கு கிடைத்துவிட்டாலே, நாம் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதை நாம் எளிமையாக கண்டறிந்து, அதிலிருந்து விடுபட நமக்கே ஒரு சுய உந்துதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்களைப் பற்றியும் உங்கள் எண்ணங்கள் சார்ந்த விஷயங்கள் பற்றியும் உங்களின் மூளைக்குள் தினசரி திணியுங்கள்.
இந்த Brain Dumping Strategy கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் மாற்றத்தினை கண்கூடாகக் காணலாம்.