
மேட்ரிக்ஸ் (Matrix) என்பது சமூகத்தாலும் பாரம்பரியத்தாலும் நிர்ணயிக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத எல்லைகளைக் குறிக்கிறது. பெரும்பான்மையான மக்கள் தங்கள் முழுத் திறமையையும் ஆற்றலையும் உணர்ந்து கொள்ளாமல் வாழ்க்கையில் எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்காமல், வளர்ச்சி அடையாமல் இருப்பார்கள். இதனால் தான் ஏழைகள் ஏழைகளாகவே தொடர்வதும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதும் நிகழ்கிறது. இதுதான் மேட்ரிக்ஸ் வாழ்க்கை முறை எனப்படுகிறது. இது எந்த மனிதனுக்கும் வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தராது. இதிலிருந்து வெளியேறுவதற்கான 10 முக்கியமான வழிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
முன்னேற்றத்தைத் தடுக்கும் காரணங்களும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளும்
1. தவறானவர்களிடமிருந்து ஆலோசனை பெறுதல்:
முன்னேற வேண்டும் என விரும்புபவர்கள், வாழ்க்கையில் வெற்றி பெறாத, கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களிடம் ஆலோசனை பெறுவது தான் 90% தோல்விக்கு காரணம். வெற்றி பெற்ற மனிதர்களிடம் அறிவுரை கேட்டால் தான் முன்னேற முடியும்.
2. ரிஸ்க் எடுக்க அஞ்சுவது:
பெரும்பான்மையான மக்கள் தங்கள் கம்ஃபோர்ட் சோனை விட்டு வெளியே வராமல் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். அதனால் தான் குறைந்த ஊதியம் தரும் அதே வேலையில் நீடிக்கிறார்கள். பணக்கஷ்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ரிஸ்க் எடுக்கத் துணிந்தவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.
3. சீக்கிரம் பணக்காரராக முயற்சிப்பது:
விரைவில் பணக்காரனாக வேண்டும் என்று ஆசைப்பட்டு குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது அல்லது அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசமான நிதி நிறுவனத்தை நம்புவது போன்றவை கூடாது. ஒரே இரவில் யாராலும் பணக்காரராக முடியாது. பல வருடங்கள் உழைத்து சரியான முறையில் முதலீடு செய்தால் மட்டுமே ஒருவரால் பணக்காரனாக முடியும்.
4. நேரவிரயம்:
மக்கள் பல வருடங்களாக சம்பளத்திற்காக உழைத்து நேரத்தை தியாகம் செய்கிறார்கள். அதே சமயம் செல்வந்தர்கள் குறைந்த அளவு வேலை செய்துவிட்டு அதிகமாக முதலீடு செய்து அதிகமாக சம்பாதிக்கிறார்கள். பல்வேறு வணிகங்களில் கவனம் செலுத்துகிறார்கள்.
5. பணத்தை தவறாக நிர்வகித்தல்:
சிலர் அதிகமாக பணத்தை சேர்த்து கஞ்சனாக வாழ்ந்து தமது செல்வத்தை அனுபவிக்க மாட்டார்கள். சிலர் அதிகமாக செலவு செய்து வறுமையில் சிக்கிக் கொள்வார்கள். புத்திசாலித்தனமாக முதலீடுகள் செய்து சொத்துக்களை சரியாக நிர்வகித்தால் மட்டுமே உண்மையான செல்வந்தராக இருக்க முடியும்
6. சிந்திக்காமல் இருத்தல்:
தன்னுடைய தற்போதைய நிலைமையை நன்றாக சிந்தித்துப் பார்த்து இதே வாழ்க்கையை இப்படியே தொடர வேண்டுமா என்று கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். சமூகக் கட்டமைப்புகளை விமர்சனம் ரீதியாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். பிறரை குருட்டுத்தனமாக பின்பற்றுவதை விட சொந்தக் கருத்துக்களை உருவாக்கி அதற்கு மதிப்புத் தர வேண்டும்.
7. உண்மையாக இருத்தல்:
வெளிப்புற எதிர்பார்ப்புகளையும் அல்லது கலாச்சார விதிமுறைகளை பூர்த்தி செய்ய முயற்சிப்பதை விட உண்மையான சுயத்திற்கு மதிப்பளித்து வாழ வேண்டும். வழக்கமான வாழ்க்கை அமைப்பிலிருந்து வெளியேறி சிரமங்களைத் தாண்டிச் செல்வதற்கான மனஉறுதியையும், விடாமுயற்சியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
8. புதியத் திறன்களை வளர்த்துக் கொள்ளுதல்
சவாலான புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் முன்பு அதற்குத் தேவையான புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்டேட்டாக இருந்தால் தான் முன்னேற்றம் காணமுடியும்.
9. நண்பர்கள் தேர்வு:
புதிய முயற்சிகளை எடுக்கும்போது அவற்றை தடுத்து தேவையில்லாத அச்சத்தையும் உருவாக்கும் நண்பர்களை விலக்க வேண்டும். நல்ல ஆலோசனைகள் வழங்கி சிறந்த முறையில் செயல்படுவதற்கு ஏற்றவாறு ஊக்கமளிக்கும் நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
10. மனநிலை:
‘நான் ஏழையாகவே இருப்பதற்காகவே பிறந்தவன். என்னால் முன்னேற முடியாது’ போன்ற எதிர்மறையான சிந்தனைகளை விலக்கி விட்டு, உயர்ந்த நிலையை அடைவது எப்படி என்ற நேர்மறையான மனநிலைக்கு மாற வேண்டும். உயர்ந்த வாழ்க்கையை வாழ்வதற்காக கனவு காண வேண்டும். அதை காட்சிப்படுத்த வேண்டும். அதை நோக்கி உழைக்கவும் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு மனிதனால் வாழ்வில் முனேற முடியும்.