

அமைதியை விரும்பாதவர்கள் இந்த உலகில் உண்டோ? மகாத்மா காந்தி முதல் இன்றைய பெரும் உலக தலைவர்கள் அனைவரும் அமைதியை விரும்புகிறார்கள்.
புத்தர் இறைஞானம் அடைந்தது எப்படி?
அமைதியாக போதி மரத்தடியில் அமர்ந்து, தனக்குள்ளேயே ஆழ்ந்து ஞான நிலை அடைந்தார். அதுபோலவே அமைதியான மனிதர்களின் பழக்க வழக்கங்களைப் பார்க்கலாமே!
அமைதியாக இருப்பது நமது வாழ்வில் மிகவும் சக்திவாய்ந்த வாழ்க்கை கட்டமைப்புகளில் ஒன்றாக இருக்கிறது. இது மக்களுடன் நம்மை ஒருங்கிணைத்து ஆக்கப்பூர்வமான வழிகளில் நம்மை வழிநடத்தி வளமாக வைத்திருக்க உதவுகிறது. உங்களின் செயலாற்றலை உயர்த்துகிறது.
ஒரு அறிஞர் அமைதியாக உள்ள மக்களின் பழக்க வழக்கங்களை ஆய்வு செய்ததில் சில பொதுவான நல்ல பழக்க வழக்கங்கள் இருப்பதைக் கண்டுபிடித்து கூறியுள்ளார். அவற்றை என்னவென பார்க்கலாமே!
அமைதியானவர்கள் இன்றைய பிரேக்கிங் செய்திகளையும், வாட்ஸப்பில் உலவும் வதந்தி செய்திகளையும் பொருட்படுத்தாமல்,எதிர்மறைத் தாக்குதல்களிலிருநது தம்மைக்காத்து கொள்கிறார்கள்.
அமைதியானவர்கள் உடனுக்குடன் உணர்ச்சிப்படுதலைத் தவிர்த்து எந்த ஒரு செயலுக்கும் உடனே எதிர்வினை ஆற்றாமல் அமைதி காத்து, அவற்றின் நன்மை தீமைகளை மனதிற்குள் அலசி ஆராய்ந்து அதன்படி நடக்கிறார்கள்.
அமைதியானவர்கள் உடலை மேம்படுத்த யோகாவும், மனதை மேம்படுத்த தியானமும் மேற்கொள்கிறார்கள்.
கடினமான சூழலிலும், இணக்கமான எளிதில் நிறைவேறக்கூடிய நல்ல செயல்களையே ஆதரிக்கிறார்கள். அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்தி கொள்கிறார்கள்.
அமைதியானவர்கள் தம்மை முன்னிலைப் படுத்துவதைக் காட்டிலும், மற்றவர்களை முன்னிலைப் படுத்துகிறார்கள். விட்டுக் கொடுத்து மனநிறைவோடு வாழ்கிறார்கள். அமைதியானவர்கள், உடனுக்குடன் எதிர்வினையாற்றுவதை ஒரு விநாடி தள்ளிப் போடுகிறார்கள். ஆதலால் எந்தவொரு பிரச்னைகளும் அவர்களை நெருங்குவதில்லை.
அமைதியானர்கள் தங்கள் கவனத்தைக் கவிதைகளில், இசை கற்பதில், ஓவியம் வரைவதில் நாட்டம் செலுத்துகிறார்கள்.
அமைதியானவர்கள் தங்களின் சுவாசத்தை மெல்லியதாக இழையோட செய்கிறார்கள். அதுவே அவர்களின் பேரானந்த அமைதிக்கு வழிவகுக்கிறது.
அமைதியானவர்கள் எந்த செயலுக்கும் அவசரப்படவோ, பதட்டப்படவோ செய்யமாட்டார்கள் ”பதறிய காரியம் சிதறும்” என்ற பொன்மொழியை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப நிதானமாக செயல்படுவார்கள்.
அவர்கள், தங்களின் உணவினை உட்கொள்ளும்போது, சாத்வீக உணவையே உட்கொள்கிறார்கள். சில வகை உணவுகள் நம் உணர்ச்சிகளைத் தூண்டி விடும் அந்த வகையான உணவுகளைத் தவிர்க்கிறார்கள்.
மனஅழுத்தம் தரும் காட்சிகளையோ, இசையையோ அவர்கள் ஒருநாளும் பார்ப்பதில்லை கேட்பதில்லை. அவர்களின் இலக்கு அமைதி… அமைதி-தான் இதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும், அழகாகவும் வைத்திருக்கிறார்கள். நேர்மறை ஆற்றல் உள்ள மனிதர்களோடு பழகுகிறார்கள். நேர்மறை ஆற்றல் உள்ள ஆற்றல் உள்ள புண்ணியத் தலங்கள், இயற்கை எழில்கொஞ்சும் இடங்களில் தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள். எதிர்மறையான எண்ணங்கள் உடையவரைத் தவிர்க்கிறார்கள்.