
பல சுயமுன்னேற்றப் புத்தகங்கள் படித்து, வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தினால் பொருளாதாரம் முன்னேறும் என பல நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. அப்படியானால் புத்தகம் வாசிப்பவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாக அல்லவா இருக்க வேண்டும்?
முதலில் பொருளாதார முன்னேற்றம் என்பது நாம் நம் கடின உழைப்பை போட்டால்தான் நமக்குக் கிடைக்கும் என்பதல்ல. ஒருவருடைய பொருளாதார முன்னேற்றம் என்பது அவருடைய சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொருத்தே அமையும்.
நமக்கு கிடைக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை, சரிவர பயன்படுத்திக் கொள்ளவே புத்தகங்களைப் படித்து, நம்மை மெருகேற்றி வைத்துக்கொள்ளவேண்டும். அந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் நமக்கு அமையும் வரை அதற்காக உழைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இதில் 100% கடுமையாய் உழைப்பவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று எந்தவித உத்திரவாதமும் கொடுக்க இயலாது. அவரவர்களுக்கு கிடைத்த வாய்ப்பினை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், இல்லையேல் வாய்ப்பினை தேடி எந்த அளவுக்கு அலைந்து அந்த வெற்றியைப் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.
எனவே நமக்கு சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டி, அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தும் வகையில் அந்த உழைப்பானது இருக்கவேண்டும்.
பெரும்பாலும் உங்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும் என நம்புகிறேன். இவர்தான் ஒரே காணொளியில் ஒபாமாவான பிஜிலி ரமேஷ். இவர் இவருடைய வாழ்க்கையில், இம்மாதிரியான அதிசயம் நடக்குமென்று கனவில் கூட நினைத்திருக்கமாட்டார். ஜாலியாக சரக்கடித்துவிட்டு ரோட்டோரமாக நடந்து சென்றவர் கொஞ்ச காலம் திரைப்படங்களில் நடிகராக வலம் வந்தார். இவர் இதற்காக எந்த ஒரு கடின உழைப்பும் போடவில்லை. ஒரே ஒரு youtube காணொளி இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இவ்வுலகில் பலர் அவர்களுடைய கடின உழைப்பினைப் போட்டு, சரியான பிரதிபலன் கிடைக்கவில்லை என்றெண்ணி வாழ்க்கையை வெறுத்து விடுகின்றனர்.
முதலில் அவர்கள், " நான் இவ்வாறு உழைத்தால் நிச்சயம் எனக்கான வெற்றி கிடைத்தே ஆகவேண்டும்" எனும் எண்ணத்தைக் மாற்றிக்கொள்ள வேண்டும்.
மேலும், எனக்கான தகுந்த நேரம் வரும், அந்த நேரத்தில் அந்த வாய்ப்பினை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்னும் எண்ணத்தை ஊக்குவித்துக்கொண்டு, தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கவேண்டும்.
அந்த ஒரு முயற்சியானது ஏதோ ஒரு வகையில் அவருடைய வாழ்க்கையை சீர்படுத்தும். ஆனால் அதற்கு கால வரையறைகள் எல்லாம் கூற முடியாது.
Forrest gump என்னும் திரைப்படத்தில் வாழ்க்கையின் தத்துவத்தை மிக அழகாக கூறியிருப்பார்கள்.
“Life was like a box of chocolates. You never know what you're gonna get.”
வெறும் சுயமுன்னேற்றப் புத்தகங்களை மட்டுமே படித்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் எதுவும் மாறாது. அவற்றை செயல்படுத்தி, சில அனுபவங்களை பெற்று, கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துபவர்கள் மட்டுமே வாழ்வில் முன்னேறுகிறார்கள்.