"அவன் இப்போதெல்லாம் எவ்வளவோ மாறிவிட்டான்" என்று சொல்லுகிறோம். அதே சமயம் இன்னொருவனைப் பற்றிப் பேசுகின்றபொழுது"என்ன நடந்தாலும் அவன் மாறவேமாட்டான்" என்றும் கூறுகிறோம் அதாவது சில மனிதர்கள் மாறுகிறார்கள் இன்னும் சில மனிதர்கள் மாறுவதே இல்லை.
தோற்றத்தில் நாம் எல்லோருமே மாறிக் கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு மனிதனுடைய மனப்போக்கிலும் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் நிகழ்வதுண்டு. பொதுவாக ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்வது இல்லை. ஒவ்வொருவரையும் அவரவர் நடவடிக்கைகளை வைத்து மதிப்பீடு செய்கிறோம்.
இந்தக் குணங்கள் வாழ்க்கையில் நமக்கு சாதகமாக இருப்பதும் உண்டு. பாதகமாக இருப்பதும் உண்டு. நம்முடைய குணங்களை நாம் மாற்றிக் கொள்ள முடியாது என்பது தவறான ஒரு கருத்து. சில குணங்கள் நமக்குப் பாதகமானவை எனத் தெரிந்தும், அந்தக் குணங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறோம். அதன் காரணமாகவே பெரிய இழப்புக்களுக்கும் ஆளாகிறோம். வாழ்க்கையில் நாம் நினைத்தபடி முன்னேற முடியாமல் போவதற்கும் அதுவே காரணமாகி விடுகிறது.
மனவியல் நிபுணர்கள் நம்முடைய குணங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
ஒரு நிறுவனம் நம்முடைய வேலை திருப்தி இல்லை என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டால் அந்த நிர்வாகியை குறை சொல்வதோடு திருப்தி அடைந்து விடுகிறோம். அல்லது நமக்கும் மேலதிகாரிக்கும் ஒத்துக் கொள்ளவில்லை என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொண்டு விடுகிறோம். நமக்கு ஏற்பட்ட பாதகமான அந்தச் சம்பவத்துக்கு என்ன காரணம் என்று ஆராய மறுக்கிறோம்.
நாம் ஒத்துப்போக முடியாதவரிடம் இன்னொருவரால் எப்படி ஒத்துப்போக முடிகிறது என்று யோசிக்க வேண்டும். முயன்றால் வாழ்க்கையில் நமக்கு பாதகமாக அமைந்துவிட்ட குணங்களை நம்மால் மாற்றிக் கொண்டுவிட முடியும்.
ஆரோக்கியமான மனநிலையினை நாம் பெறுகின்றபோது, மற்றவர்களுடன் எப்படிப் பழகி வெற்றி பெறுவது என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ள முடியும். மனித உறவுகளை ஆரோக்கியமாக அமைத்துக் கொண்டால் வெற்றிப்பாதையில் நாம் நடை போடுவதை எவராலும் தடுக்க முடியாது.
நம்முடைய குணங்கள் நமக்கு எதிரியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. சில பயிற்சிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நம்முடைய தவறான மனப் போக்குகளை நாம் விலக்கிக் கொண்டு விடமுடியும்.
எத்தனையோ பேர் தங்களுடைய குணங்களை மாற்றிக்கொள்ள முடியாமல், மற்றவர்களைக் குறை கூறுவதிலேயே பொழுதைக் கழிக்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்கிறோம் என்பது உண்மை. அவ்வாறு நாம் நடந்து கொள்வதற்குக் காரணம் இருக்கிறது. இந்தக் காரணத்தைக் கண்டறிந்து விட்டால் நம்முடைய குணங்களை மாற்றிக்கொண்டு நாம் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்.
மாற்றத்தை மனதில் ஏற்று மகிழ்ச்சியான பாதையில் பயணிப்போம்.