
மனச்சோர்வு என்பது நீங்கள் நினைப்பது போல் சாதாரண ஒன்று கிடையாது. அதில் இருப்பவருக்கு மட்டுமே அதனுடைய உண்மைத்தன்மை தெரியும்.
உங்களை எந்த செயல்களும் செய்யவிடாமல் நடைபிணமாக மாற்றிவிடும். சாதாரணமாக துன்பத்தினை உணர்வது என்பது வேறு, மனச்சோர்வின் மூலம் ஏற்படும் அழுத்தம் வேறு. அது யாரிடமும் கூற முடியாத அளவுக்கு ஒரு உணர்வை ஏற்படுத்தும்.
இது பல காரணங்களுக்காக ஒருவருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. நெருங்கியவரின் இழப்பு, நம்பிக்கை துரோகம், இயலாமை, எதிர்பார்ப்பு போன்றவைகள் இதற்கு காரணமாக இருக்கலாம்.
மனச்சோர்வில் இருந்து வெளிவருவது அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் அல்ல. பிறருடைய அறிவுரைகள் ஒன்றும் எடுபடாது. நமக்கான தீர்வு நம்மிடத்திலேயே தான் பிறக்க வேண்டும். நான் இப்படி இருக்க கூடாது, இதிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் மட்டுமே அதிலிருந்து வெளிவர முடியும்.
முதலில் நீங்கள் உங்கள் மனச் சோர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதிலிருந்து வெளிவருவதற்கான வழிமுறைகளை நீங்கள் ஏற்படுத்த முடியும். நான் இப்படியே இருந்தால் எனது வாழ்வில் எதுவும் மாறாது என்ற எண்ணத்தை ஊக்குவித்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக உங்கள் மனச்சோர்வுக்கான காரணங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். காரணமின்றி நம் வாழ்வில் ஏதும் நடைபெறாது. அந்த காரணத்தை கண்டறிந்து அதற்கு உண்டான சூழல்களை நன்கு ஆராயுங்கள். அதிலிருந்து நாம் எப்படியெல்லாம் வெளிவர முடியும் என்பதைப்பற்றி நன்கு சிந்தியுங்கள்.
இறுதியாக அதிலிருந்து வெளிவருவதற்கான செயல்களில் நீங்கள் இறங்க வேண்டும். மாற்று சிந்தனை, மாற்று முயற்சி, மாற்று இலக்குகள் என்பது நிச்சயமாக இருத்தல் வேண்டும். அவ்வாறு உங்களுடைய கடினமான எண்ணங்களிலிருந்து மாற்று திசையை நோக்கி பயணிக்கும் பொழுது, அது உங்களுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை கண்முன் தோன்ற வைக்கும். பழைய நினைவுகளை சிறுக சிறுக மங்க வைக்கும்.
இவற்றை நான் எங்கோ படித்து கூறுகிறேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம். நானும் மனச்சோர்வில் இருந்திருக்கிறேன். இந்த பதில் முழுக்க முழுக்க எனது அனுபவங்களால் எழுதப்பட்டது.
எதுவாக இருந்தாலும் நிறுத்தி நிதானித்து செயல்படுங்கள். நிச்சயமாக அதிலிருந்து வெளிவருவதற்கான தீர்வுகளை நம்மால் காண முடியும்.