Motivation Image
Motivation Imagepixabay.com

நிறைவு மட்டுமே அழகில்லை… குறைகளும் அழகே!

Published on

ம்முடைய வாழ்க்கையில் நாம் எல்லா விஷயங் களையுமே நிறைவாக செய்ய வேண்டும் என்று நினைப்போம். அதில் தவறேதுமில்லை. ஆனால் அப்படி நினைப்பதில் அதிகப்படியாகும் போது வாழ்வில் நிம்மதியின்றி தவிக்க வேண்டிய நிலை வரும்.

சில சமயங்களில் ஜோடியாக இருக்கும் செருப்பு மாறி கிடப்பதை பார்க்கும் போது சரி செய்வதில் இருந்து, டீ.வியில் சத்தம் வைக்கும் போது கூட ஈவென் நம்பரில் இருக்க வேண்டும் என்று நினைப்பது வரை பர்பெக்ஷன் தேவைப்படுகிறது.

அடுத்தவர்கள் அரைகுறையாக செய்யும் வேலைகளை பர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக நாம் இழுத்து போட்டுக்கொண்டு செய்வோம். உதாரணத்திற்கு துடைத்துவிட்டு கட்டிலின் மேல் போடப்பட்ட துண்டை எடுத்துக்கொண்டு சென்று வெளியே காயப்போடுவது போன்றது. அப்படி சில விஷயங்களை செய்யும் போது அது நமக்கு மன நிம்மதியை கொடுக்கும்.

இந்த பழக்கமே வேலை பார்க்கும் இடத்தில் கஷ்டமாக முடிந்து விடும். நம்முடன் வேலை செய்பவர்கள் அரைகுறையாக விட்டு செல்லும் வேலையை கூட நாம் இழுத்து போட்டுக்கொண்டு செய்து முடிப்போம். இது மற்றவர்களுக்கு தெரியவரும் போது வேண்டுமென்றே அரைகுறை வேலைகளை செய்து நம் தலையில் கட்டிவிடுவார்கள்.

எதையுமே அதிகமாக செய்வது ஆபத்தாகும். ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை பாருங்கள். அதில் எந்த கலங்கமுமில்லாமல் அழகாக காட்சித்தரும். நம் பிம்பத்தை அழகாக பிரதிப்பலிக்கும். இதுவே அது கைத்தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டால் அது போக வேண்டிய இடம் குப்பை தொட்டியாக இருக்க வேண்டும் என்றே பர்ஃபெக்ஷனிஸ்ட் மூளை யோசிக்கும்.

அதற்கு அவசியமில்லையே! அந்த உடைந்த துண்டுகளையும் கூட அழகுக்கு பயன்படுத்த முடியும். இது எவ்வளவு பெரிய வாழ்க்கை தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. எல்லாவற்றிலும் பர்ஃபெக்ஷன் வேண்டும் என்பதை விடுத்து குறைகளும் அழகே என்ற மன எண்ணம் வர வேண்டும். நம்மிடமோ நம்மை சுற்றி இருப்பவர்களிடமோ சிறு சிறு குறைகள் இருப்பினும் அதுவும் அழகானதே!

இதையும் படியுங்கள்:
World Cancer Day 2024: அச்சுறுத்தும் கர்பப்பை வாய் புற்றுநோய்.. தடுப்பது எப்படி?
Motivation Image

அடுத்தவர்களிடம் குறை கண்டுப்பிடிப்பதை விடுத்து அன்பு காட்ட பழகிக்கொண்டால் வாழ்க்கையில் நிம்மதியும் மனநிறைவும் தானாகவே வந்து சேரும்.

ஒரு கண்ணாடி தம்ளரில் தண்ணீர் நிரப்பி வைத்து இதில் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. சிலர் அதில் தண்ணீர் பாதி நிறைந்திருக்கிறது என்றும் இன்னும் சிலர் அதில் தண்ணீர் பாதி குறைந்திருக்கிறது என்றும் கூறினர். நம்பிக்கை உடையவர்கள் எப்போதுமே நல்ல எண்ணத்துடன் நல்லதை பற்றியே யோசிப்பதுண்டு அதனாலேயே பாதி நிறைந்திருக்கிறது என்று கூறினர். நாமும் குறைகளை விடுத்து வாழ்வில் நல்லதை பற்றியே யோசிப்போம். அடுத்தவர்களிடம் குறைகள் இருப்பின், அதை அன்பால் நிரப்புவோம்!

logo
Kalki Online
kalkionline.com