
நமது வாழ்க்கையை நமது விருப்பப்படி வாழவேண்டும் என்பதே நம்மில் பலருடைய விருப்பமாக உள்ளது. ஆனால் எல்லா கட்டங்களிலும் நம்மால் நமது விருப்பப்படி வாழமுடியாது. வாழ்வியல் சூழ்நிலை நம்மை அப்படி வாழ விடாமல் செய்யும். நம் வாழ்வில் அவ்வப்போது சமரசம் அதாவது காம்ப்ரமைஸ் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஒவ்வொருவரும் ஆளாக்கப்படுகிறோம்.
சிலர் இதைப் புரிந்து கொண்டு ஒரு விஷயத்தில் தமக்கு விருப்பமில்லாவிட்டாலும் கூட சமரசம் செய்துகொண்டு வாழ்க்கையை நகர்த்துகின்றனர். முன்னேறவும் செய்கின்றனர்.
நீங்கள் ஒரு இளைஞர். கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படித்திருக்கிறீர்கள். மிகச்சிறந்த ஆற்றல் உடையவர். ஒரு நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பிக்கிறீர்கள். உங்கள் விருப்பப்படியே உங்கள் படிப்பு தொடர்பான வேலையும் கிடைக்கிறது. பணியில் சேர்ந்த சில மாதங்களுக்கு அந்த நிறுவனத்தில் உங்கள் படிப்பு தொடர்புடைய பணிகள் மட்டுமே தரப்படுகின்றன. நீங்களும் அதை ஆர்வமாகச் செய்யத் தொடங்குகிறீர்கள்.
சில மாதங்களிலேயே உங்கள் நிறுவன மேலதிகாரிகள் உங்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத பணிகளைத் தருகிறார்கள். இந்த கட்டத்தில் உங்களுக்கு நீங்கள் படித்த படிப்பு தொடர்பான பணிகளை மட்டுமே செய்யவேண்டும் என்ற பிடிவாதம் உங்கள் மனதில் உண்டாகிறது.
இந்த விஷயத்தில் நீங்கள் சமரசம் அதாவது காம்ப்ரமைஸ் செய்து கொள்ள விரும்பவில்லை. உங்கள் நிறுவன மேலதிகாரிகளிடம் என் படிப்பு தொடர்பான பணிகளை மட்டுமே செய்வேன் என்று கூறினால் என்ன நடக்கும். உடனே உங்களுடைய வேலை பறி போகும் சூழ்நிலை உருவாகும். இதன் பின்னர் நீங்கள் வேறொரு பணியைத்தேட வேண்டியிருக்கும்.
உங்களைப் போலவே உங்களுடன் வேறொரு இளைஞர் பணியில் சேருகிறார் என வைத்துக் கொள்ளுவோம். அவருக்கும் உங்களுக்கு தரப்பட்டது போலவே படித்த படிப்பு தொடர்பான வேலை மட்டுமே தரப்படுகிறது. சில மாதங்களுக்குப் பிறகு அவருடைய படிப்பிற்குத் தொடர்பில்லாத பணி தரப்படுகிறது. ஆனால் அவர் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் காம்ப்ரமைஸ் அதாவது சமரசம் செய்து கொண்டு தனக்குத் தொடர்பில்லாத அந்த வேலைகளையும் செய்யத் தன் மனதைத் தயார்படுத்திக் கொள்ளுகிறார்.
சமரசம் செய்துகொள்ளும் கொடுத்த பணிகளைத் தயங்காமல் செய்யும் அந்த இளைஞருக்கு சம்பளம் உயர்த்தப்படுகிறது. அவர் மளமளவென அந்த நிறுவனத்தில் பதவி உயர்வுகளையும் பெற்று முன்னேறிச்செல்கிறார்.
இரண்டு இளைஞர்கள். ஒரே விதமான படிப்பு. ஒரே நிறுவனத்தில் ஒன்றாகவே பணிக்குச் சேருகிறார்கள். ஒருவர் வெகு குறுகிய காலத்திலேயே அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். மற்றொருவரோ அதே நிறுவனத்தில் அதிக சம்பளத்தைப் பெற்று முன்னேறிச் செல்லுகிறார்.
சற்று பிடிவாத குணம் உடையவர்கள் அவ்வளவு சுலபத்தில் எந்த ஒரு விஷயத்திலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். விட்டுக் கொடுக்கும் குணம் உடையவர்கள் வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு தன் கொள்கைகளை சிறிது தளர்த்தி சமரசம் செய்து கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அவசியம் என்பதைப் புரிந்துகொண்டு முன்னேறுவர்.
இந்த இரண்டில் எது சரி எது தவறு என்பதை நாம் எவரும் தீர்மானிக்க முடியாது. இப்படி இருங்கள் அப்படி இருங்கள் என்று பிறரை நாம் வற்புறுத்தவும் கூடாது. அது ஒவ்வொருவருடைய மனநிலையைப் பொறுத்து எடுக்கப்படும் தனிப்பட்ட முடிவாகும். இத்தகைய முடிவால் ஏற்படும் நல்லது கெட்டது இரண்டிற்கும் முடிவெடுப்பவரே பொறுப்பாவர்.
ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். இன்றைய போட்டிகள் நிறைந்த உலகத்தில் சிறிது விட்டுக் கொடுத்துச் செல்லுவது என்பது பலராலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.