
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். சாதிக்க வேண்டும். அனைவரும் நம்மைப் புகழ வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இதில் சிலருக்கு வெற்றி கிடைக்கிறது. பலருக்கு தோல்வியே பரிசாகக் கிடைக்கிறது.
சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள். விடாமுயற்சி. எதிலும் நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும் என்ற எண்ணம். தினந்தோறும் திறமையை வளர்த்துக் கொள்ளுதல். தேடிவரும் வாய்ப்பை முடியாது என்று தெரிந்தாலும் அதை துணிச்சலோடு ஏற்றுக் கொள்ளும் தைரியம், இவையே வெற்றிக்கான சூத்திரங்கள். இந்த வெற்றிக்கான சூத்திரங்களை சிறுவயது முதலே பின்பற்றி நடந்த ஒரு மாணவன் பிற்காலத்தில் உலகின் நம்பர் ஒன் பணக்காரராய்த் திகழ்ந்தான். சாஃப்ட்வேர் துறையிலும் பெரும் புகழ் பெற்றான்.
அந்த சிறுவன் பள்ளியில் சேர்க்கப்பட்டான். அவனுக்கு வயதுக்கு மீறிய அறிவு வளர்ச்சி இருந்தது. ஒரு வருடம் படிக்க வேண்டிய பாடங்களை ஆறே மாதங்களில் படித்து முடிக்கும் அபார திறமை இருந்தது. கணிதபாடத்தில் அவனுக்கு நிகராய் அவனே விளங்கினான். இந்த சிறுவனுக்கு அபார அறிவு இருந்ததே தவிர தேர்வுகளில் அவனுக்கு ஆர்வம் இருக்கவில்லை. இதனால் அவன் தேர்வுகளில் குறைவான மதிப்பெண்களே வாங்கினான்.
சியாட்டல் நகரத்தில் 1962 ஆம் ஆண்டில் ஒரு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. அந்த கண்காட்சிக்குச் சென்ற அந்த சிறுவன் அவற்றில் இருந்த மாதிரிகளைக் கண்டு பிரமித்துப் போனான். அக்கணமே அவனுக்கு அறிவியலில் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. தானும் எதையாவது கண்டுபிடித்து இந்த உலகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று மனதுள் தீர்மானித்துக் கொண்டான். அந்த அறிவியல் கண்காட்சிக்கு மீண்டும் மீண்டும் சென்று தன் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டான்.
பள்ளியை மாற்றினால் நன்மை ஏற்படும் என்று தீர்மானித்த பெற்றோர் அச்சிறுவனை லேக்சைட் என்ற மிகப்பிரபலமான ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். அப்பள்ளி சிறுவனுக்கு மிகவும் பிடித்துப் போனது. காரணம் அப்பள்ளியில் கம்ப்யூட்டர் இருந்தது. மேலும் பள்ளி நிர்வாகத்தினர் அந்த கம்ப்யூட்டரை மாணவர்கள் பயன்படுத்த அனுமதித்தார்கள்.
அவன் பள்ளிப்பருவத்திலேயே ஒரு விளையாட்டை தன் நண்பர்களோடு மிகவும் ஆர்வத்தோடு விளையாடினான். அது பிஸினஸ் விளையாட்டு. இவ்விளையாட்டே பின்னாட்களில் அவனை உலகின் நம்பர் ஒன் பிஸினஸ்மேனாக்கியது.
நண்பர்கள் ஒவ்வொருவரும் கற்பனையில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும். கற்பனையிலேயே அந்நிறுவனத்திற்கு ஒரு சின்னத்தை வடிவமைக்க வேண்டும். கற்பனையிலேயே ஒரு வியாபாரத்தைச் செய்ய வேண்டும். இப்படி அனைத்தையும் அவனும் நண்பர்களும் கற்பனையிலேயே செய்தார்கள். பிஸினஸ் விளையாட்டை சிறப்பாக விளையாட அவன் தினமும் ஏராளமான பிஸினஸ் பத்திரிகைகளை படித்தான். இத்தகைய பத்திரிகைகளை படித்ததன் விளைவாக அவன் மனதில் தானும் பிஸினஸ் துறையில் ஈடுபட்டு சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. இந்த கற்பனை ஒரு நாள் நிஜமானது.
இருபதே வயதில் மைக்ரோசாஃப்ட் எனும் நிறுவனத்தைத் தொடங்கி அந்நிறுவனத்தை இருபது வருடங்களில் உலகின் நம்பர் ஒன் சாஃப்ட்வேர் நிறுவனமாக உயர்த்திக் காட்டிய உலகின் நம்பர் ஒன் கோடீசுவரர் வேறு யாருமல்ல. நம் அனைவருக்கும் தெரிந்த சாஃப்ட்வேர் சக்கரவர்த்தி பில்கேட்ஸ். பில்கேட்ஸின் இயற்பெயர் வில்லியம் ஹென்றி கேட்ஸ். பில்கேட்ஸ் என்பது செல்லப்பெயர்.
பில் கேட்ஸ் 1990 உலகம் அறிந்த பிரபலமான மனிதராகிவிட்டார். ஃபோர்ப்ஸ் என்ற உலகப்புகழ் பெற்ற பத்திரிகை 1995 ஆண்டு பில் கேட்ஸை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்று அறிவித்தது. தொடர்ந்து பல வருடங்கள் உலகின் நம்பர் ஒன் பணக்காரராய்த் திகழ்ந்தார்.
சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள். விடாமுயற்சி. எதிலும் நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும் என்ற எண்ணம். தினந்தோறும் திறமையை வளர்த்துக் கொள்ளுதல். தேடிவரும் வாய்ப்பை முடியாது என்று தெரிந்தாலும் அதை துணிச்சலோடு ஏற்றுக் கொள்ளும் தைரியம். இவையே பில்கேட்ஸை உலகின் நம்பர் ஒன் பிஸினஸ்மேனாக்கியது. நீங்களும் இதுபோல முயன்றுதான் பாருங்களேன்.