motivation article
motivation articleImage credit - pixabay

படைப்புத் திறனே நம் குறைகளைக் தீர்க்கக் கூடிய சாத்தியக் கூறுகள்!

Published on

நாம் செய்யும் வேலையில் அலுப்பும் சலிப்பும் ஏற்படும் போது  உள்ளத்தில் சோகம் குடியேறுகிறது‌. எந்தப் பணியில் படைப்புத் திறனுக்காக வாய்ப்பு உள்ளதோ  அதைச் செய்பவர்கள் களைப்படைவதில்லை. நடுத்தர வயதில் கூட பணியை மாற்றிக் கொள்வது வெளிநாடுகளில் சகஜம். செய்யும் பணியில் படைப்பாக்கம் என்றால் சிற்பத்தைத் தீட்டுவது கவிதை காவியம் எழுதுவது என பொருளல்ல. எதையும் நேர்த்தியாகவும்  அழகுடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபாடுடன்  செய்தால் அதுவே சிற்பம். அதுவே காவியம்.

அன்று ஓடம் ஓட்டுபவர் ஏர் உழுபவர் நாற்று நடுபவர்களும் பாடிக் கொண்டே வேலை செய்வதற்குக் காரணம் அவர்கள் பணியை படைப்புப் பணியாக கருதியதுதான். நாற்று வளர்க்கும் செயலை மரகதம் கம்பளம் நெய்கிற ஆர்வத்துடன்  செய்வதால்  உடல் வலிமையும் மீறி பாட முடிகிறது. பெ‌ருக்கும்போது கூட  துடைப்பத்தையே தூரிகையாக்குபவர்கள், சோப்பையே உளியாக்கி துணியை வெளுக்கிறவரகளும், மஞ்சளையும் மிளகையும் ரங்கோலியாக்க  ரம்மியம் சேர்த்து சமைப்பவர்களுக்கு பணியினால் தளர்ச்சி அடைவதில்லை. வளர்ச்சியடைகிறார்கள். தமிழக மரபே படைப்புத் திறனுடன்  தொடர்புடையதாகவே பின்னப்பட்டு  இருக்கிறது. காலையில் கோலம் போடுவதில் இருந்து  ஒவ்வொரு திருவிழாவின் போதும்  செய்கின்ற பலகாரங்கள் வரை அனைத்திலும் படைப்புத்திறன் அடங்கியுள்ளது. 

நல்ல இசையை ரசிப்பது கூட நமக்குள் உற்சாக ஊற்று வெளியாகி  தேவையான உந்துதலை கண் கூட்டும். ஒரு புல்லாங்குழல் வியாபாரி  வித்தியாசமான புல்லாங்குழல் களை விற்க முயற்சி செய்தான். விலை அதிகமாக இருந்ததால் யாரும் வாங்கவில்லை. .அப்போது  ஒரே ஒரு இளைஞன் மாத்திரம் வாங்கினான். இவ்வளவு விலை கொடுத்து இதை வாங்குகிறானே  என எல்லோரும் வியந்தபோது அவன் நான் இந்த புல்லாங்ககுழலைக் கோட்டை  முன் வாசலில் வாசிக்கப்  போகிறேன் என அறிவித்தான். எல்லோரும் ஆவலுடன் கூடினார்கள். அவன் சுந்தர ராகத்துடன் வாசித்த பிறகு, நான் நிறையப் படித்திருக்கிறேன். இந்த ராகத்தை விட  நன்றாக பணியாற்ற முடியும். என் திறமை வெளிப்பட வாய்ப்பு தாருங்கள் என்றான்.

ஒரு பணக்காரர் அவனை வேலைக்கு அமர்த்தினார். அவனும் நல்ல செல்வாக்கைப் பெற்றான். சாமானிய உத்யோகத்தில்  இருப்பவர்களுக்கும்  படைப்புத் திறனே பதக்கம் அணிவித்து மகிழ்ச்சி மாலை அணிவிக்கிறது. தஞ்சை பெரிய கோவிலில் ஒரு ஓவியத்தில் திரிபுரம் எரித்த சிவனின் தோற்றம். முகத்தின் மேல் பகுதியை மட்டும் பார்த்தால் ருத்ரம் தெரிக்கும். மேல் பகுதியை மூடி  மூக்குக்குக் கீழ்  பகுதியை மட்டும் பார்த்தால் குமிழ் சிரிப்பு தெரியும். அதை ஃப்ரெஞ்சுக் கலையார்வாளர் இது 100 மோனாலிசா ஓவியங்களுக்கு சமம் என்றாராம்.

இன்று பல இளைஞர்கள்  வேலை கிடைத்ததும் இனி படிக்கவோ எழுதவோ தேவையில்லை என இருந்து விடுகிறார்கள். சம்பளமோ வசதிகளோ அவர்களைத் திருப்திபடுத்துவதில்லை. எல்லா பணிகளிலும் ஏற்ற இறக்கங்கள் வரும்போது  கிறக்கங்கள் ஏற்படாமல் இருக்க நம்  ரசிப்புத் தன்மையே  நம்மைக் காப்பாற்றுகிறது.

கற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத போது  வயோதிகம் நம்மை ஆட்கொள்ளும். நல்ல படைப்பு ஊற்றெடுக்கும் போது  நமக்கு ஏற்படும் இன்பத்தை எந்தச் சொற்களாலும் விவரிக்க முடியாது. அவரவர்கள் அளவில் அனைவரும்  படைப்பாளர்கள் ஆக பரிணமிக்க முடியும். இன்றும் உலகம் நம்பிக்கைக்குரியதாக இருப்பது  படைப்பாளிகள் இருப்பதால்தான். படைப்பவர்கள்  எல்லா இடங்களிலும் நீராக நிரம்புவார்கள் அவர்களின் மகிழ்ச்சியை யாரும் திருட முடியாது.

Indira gopalan

logo
Kalki Online
kalkionline.com