

நாம் ஒரு துணிக்கடைக்குச் சென்றால் நூறு சட்டைகளைப் பார்ப்போம் ஆனால் எதை எடுப்பது என்று தெரியாமல் குழம்பி நிற்போம். ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும்போது கூட எந்தக் கடையில் வாங்குவது என்று முடிவு செய்ய அரை மணி நேரம் ஆகிவிடும். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது முதல் செருப்பு வாங்குவது வரை எல்லாவற்றிலும் நமக்கு வரும் மிகப்பெரிய பிரச்னை இந்த ஓவர் திங்கிங் எனப்படும் அதிகப்படியான சிந்தனை.
சிறந்ததைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஆசையில் நாம் நேரத்தை வீணடித்துக்கொண்டே இருக்கிறோம். இந்தப் பதிவில், கணிதத்தின் உதவியோடு எப்படிச் சரியான முடிவை எடுப்பது என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
தேடுவதில் இருக்கும் சிக்கல்!
நமக்கு முன்னால் நூறு வாய்ப்புகள் இருந்தால், முதல் வாய்ப்பையே தேர்ந்தெடுத்தால் அது சிறந்ததாக இல்லாமலும் போகலாம். அதே சமயம் எல்லா நூறு வாய்ப்புகளையும் பார்த்துவிட்டுத்தான் முடிவு செய்வேன் என்று காத்திருந்தால், இடையில் வந்த சிறந்த வாய்ப்பை நாம் தவறவிட நேரிடும்.
இதுதான் முடிவெடுப்பதில் உள்ள மிகப்பெரிய சிக்கல். இதைச் சரிசெய்ய கணிதவியலாளர்கள் மற்றும் உளவியலாளர்கள் இணைந்து ஒரு சூத்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். அதுதான் '37 சதவீத விதி' என்று அழைக்கப்படுகிறது.
அது என்ன 37 சதவீத விதி?
இந்த விதியைக் கேட்பதற்குச் சற்று விசித்திரமாக இருக்கலாம் ஆனால் இதுதான் அதிகபட்ச வெற்றியைத் தரும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு ஆட்களைத் தேர்வு செய்ய 100 பேரை நேர்முகத் தேர்வு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த விதியின்படி முதல் 37 பேரை நீங்கள் வேலைக்கு எடுக்கவே கூடாது. அவர்களை வெறும் தரத்தைப் பரிசோதிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது அந்த முதல் 37 பேரில் யார் மிகச் சிறந்தவரோ அவரை மனதில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது உண்மையான ஆட்டம் தொடங்குகிறது. 38-வது ஆளிலிருந்து நேர்முகத் தேர்வைத் தொடர வேண்டும். அப்படித் தொடரும்போது, முதல் 37 பேரில் நீங்கள் பார்த்த அந்தச் சிறந்த நபரை விட, எப்போது ஒருத்தர் நன்றாகச் செயல்படுகிறாரோ, அவரை உடனேத் தேர்வு செய்துவிட வேண்டும். அவருக்குப் பின்னால் இன்னும் திறமையானவர்கள் இருந்தாலும் கவலைப்படக்கூடாது.
வாழ்க்கையில் இதை எப்படிப் பயன்படுத்துவது?
இதை நம் அன்றாட வாழ்க்கைக்கும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு நீங்கள் வீடு தேடுகிறீர்கள் என்றால், முதலில் ஒரு பத்து வீடுகளையாவது சும்மா போய் பார்க்க வேண்டும். அந்த வீடுகளை வாங்கும் எண்ணம் இல்லாவிட்டாலும், சந்தையில் என்ன விலை, என்ன வசதிகள் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ள இது உதவும். இதைத்தான் 'பெஞ்ச்மார்க்' என்று சொல்வார்கள். ஒரு தெளிவான புரிதல் வந்த பிறகு, நீங்கள் பார்த்த வீடுகளிலேயே சிறந்த வீட்டை விட அடுத்து எப்போது ஒரு நல்ல வீடு கிடைக்கிறதோ அதை உடனே புக் செய்துவிட வேண்டும்.
இதே முறையைத்தான் திருமணத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். நாம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பலரைச் சந்தித்துப் பேசி, நமக்கான எதிர்பார்ப்பு என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் நபர் கிடைத்தவுடன் அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகும் தேடிக்கொண்டே இருந்தால், கடைசி வரை தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
நூறு சதவீதம் சரியான முடிவை யாராலும் எடுக்க முடியாது. ஆனால் இந்த 37 சதவீத விதியைப் பயன்படுத்தும்போது, நாம் தவறான முடிவை எடுப்பதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைகிறது. ஓவர் திங்கிங் செய்து மனதை போட்டு வருத்திக்கொள்வதை விட, ஒரு கணக்கு போட்டுப் பார்த்து முடிவெடுப்பது எவ்வளவோ மேல்.
எனவே அடுத்த முறை நீங்கள் குழப்பத்தில் இருக்கும்போது, முதல் சில வாய்ப்புகளைக் கடந்து செல்லுங்கள், அனுபவத்தைப் பெறுங்கள், அதன்பின் வரும் சிறந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இதுதான் புத்திசாலித்தனமான மூளையின் செயல்பாடு.