நாம் தொடர்ந்து நல்ல செயல்களைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு செய்யச் செய்ய நமது வாழ்க்கை நல்லபடியாக அமைந்துவிடும்.
இதைத்தான் பின்வருமாறு வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்:
நல்ல எண்ணங்கள், நல்ல சொற்கள், நல்ல செயல்கள் செய்யச் செய்ய நல்ல வாழ்க்கை தானாக அமைந்து விடும் - வேதாத்திரி மகரிஷி
இதைத்தான் வள்ளலார் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:
நல்லதே நினைப்போம்
நல்லதே சொல்லுவோம்
நல்லதே செய்வோம்
நல்லதே நடக்கும்
இவ்வாறு நாம் தொடர்ந்து தர்மமான செயல்களைச் செய்யச் செய்ய அவை நம்மை நல்லதொரு அமைதியான, மகிழ்ச்சியான, மனநிறைவான வாழ்க்கை அமைத்து தருகின்றன.
தர்மம் தலைகாக்கும்; தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்ற பழமொழி மிகவும் பிரபலமானது. இதனைக் குறித்து அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம்.
ஒரு பெரியவர் இயற்கையின் மீது காதல் கொண்டவர். எனவே இயற்கையான இடங்களை நோக்கி அவ்வப்போது நடந்து சென்று கொண்டிருப்பார். வெகு தூரம் நடப்பார். அவ்வாறு அவர் ஒருமுறை வடக்கு பென்சில்வேனியாவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு மிகுந்த தாகம் எடுத்தது. ஒரு பண்ணை வீட்டின் கதவைத் தட்டினார். ஒரு சிறிய பெண் கதவை திறந்தாள். அவர் தனக்கு கடும் தாகம் என்று கூறி நீர் கேட்டார். அந்தப் பெண் ஒரு கண்ணாடி டம்ளரில் பாலை முழுவதும் நிரப்பி அவருக்குக் கொடுத்தார். அந்தப் பெரியவரும் அந்தப் பெண்ணுக்கு நன்றி கூறிவிட்டு கிளம்பி விட்டார்.
அந்தப் பெண்ணிற்கு எதிர்காலத்தில் ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. அதற்கு அவள் ஒரு பெரிய மருத்துவரிடம் பரிந்துரைக்கப்பட்டாள். அவளது அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அந்தப் பெண்ணிற்கு ஆஸ்பத்திரியின் செலவுத்தொகை வந்த போது, செலவு எவ்வளவு இருக்குமோ என்று அந்தப் பெண் நடுங்கிக் கொண்டே தனக்கு வந்த ரசீதைப் பிரித்துப் பார்த்தாள். அதில் கொட்டை எழுத்தில் "முழு கண்ணாடி டம்ளர் பாலினால் அவளது அறுவைச் சிகிச்சைக்கான கட்டணம் கட்டப்பட்டு விட்டது" என்று எழுதியிருந்தது. ஒரு நாள் தான் கண்ணாடி டம்ளரில் பாலை கொடுத்த பெரியவர்தான் அந்தப் பெரிய மருத்துவர் என்று அந்தப் பெண் அறிந்து கொண்டாள். அந்த சிறிய பெண் செய்த தர்மமானது அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றி உள்ளது.
அந்தப் பெரிய மருத்துவர் டாக்டர் ஹோவார்டு கெல்லி (1858- 1943). அவர் அமெரிக்காவின் தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கிய நான்கு மருத்துவர்களில் ஒருவர். அது உலகின் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிபி 1895 இல் பெண்களுக்கான மகப்பேறு மருத்துவத்திற்கு தனியாக ஒரு துறை அங்கு தொடங்கினார். பெண்களின் மகப்பேறு துறைக்கு மிகப்பெரிய பங்களிப்பினை அவர் செய்துள்ளார்.
தொடர்ந்து தர்ம காரியங்கள் நாம் செய்து கொண்டிருப்போம். வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வோம். தர்மம் தலைகாக்கும்; தக்க சமயத்தில் உயிர் காக்கும்.