
படக்குழுவினர், ரசிகர்கள், தீயணைப்பு வீரர்கள், அனைவருமே பரபரப்போடு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பதினைந்தாவது மாடியின் விளிம்பில் நின்று கொண்டு இயக்குனரின் கட்டளைக்காக காத்துக் கொண்டிருக்கிறார், ஜாக்கி சான்.
கேமரா இயங்க தயாராக இருக்கிறது.
இன்னும் சில நொடிகளில் அந்த உயரத்திலிருந்து ஜாக்கி சான் குதித்தாக வேண்டும்.
யாரும் பார்த்திராத சண்டைக் காட்சியாக இது அமைய வேண்டும் என்கிற ஆவல் மனதில் நிரம்பிவழிகிறது. இந்தச் சண்டைக் காட்சி பரபரப்பாக பேசப்பட வேண்டும். விறுவிறுப்பாக, பிரமிப்பாக அமைய வேண்டும். அதிரடியாக மெய்சிலிர்க்கும் படியாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு காட்சியையும் காணும் படக்குழுவினரும் ரசிகர்களும் மிரள வேண்டும். அப்போது தான் திரை அரங்குகளில் காண்போரின் ஆரவாரம் விண்ணைப் பிளக்கும்.
சைனா டிராமா அகாதெமியில் பயிற்சி அளித்த மாஸ்டர் சொன்னது, ஜாக்கி சானின் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. “ஆபத்தான சண்டைக் காட்சிக்கும் எவன் ஒருவன் தயாராக இருக்கிறானோ அவனே...டிராகன் டைகர்!“