
மனிதராகப் பிறந்த அனைவருக்கும் தனித்தனி திறமைகள் இருக்கும். திறமைக்கேற்ற வேலைகளில் ஈடுபடும் போது யாராக இருந்தாலும் வெற்றி அடையலாம். அதற்கு நாம் செய்யும் தொழிலை முழுமனதோடு செய்ய வேண்டும். இன்று பல துறைகளில் சாதனை படைத்திருக்கும் பலரது வெற்றிக்கும் முக்கிய காரணமே இதுதான். இவ்வரிசையில் இசைத்துறையில் சாதித்தவர் தான் தேனிசைத் தென்றல் தேவா. ஒவ்வொருவரும் தமக்கான வேலையை எப்படி செய்ய வேண்டும் என்றும் அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் கானா பாடல்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் தேனிசைத் தென்றல் தேவா. இவரது பாடல்கள் அனைத்தும் காலம் கடந்தும் ரசிக்கும் படியாக இருக்கும். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்பட சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். திரைத்துறையில் புதிதாக ஒருவர் வரும்போது சிலர் உடனே பிரபலமாகி விடுவர். ஒருசிலருக்கு சிறிது காலம் தேவைப்படலாம். தேவா இசையமைத்த முதல் படம் பெரிய அளவில் பிரபலமடையவில்லை என்றாலும், இரண்டாவது படமான ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் தேவாவின் பெயரை தமிழ் சினிமா முழுக்க பிரபலமாக்கியது. இவரது இசைத் திறமையைக் கண்டு புகழ்பெற்ற எம்.எஸ்.விஸ்வநாதன்தான், முதலில் தேவாவை ‘தேனிசைத் தென்றல்’ என்று அழைத்தார்.
இசைத்துறையில் 35 ஆண்டுகளைக் கடந்துள்ள தேவாவின் பாடல்களை இப்போது கேட்டால் கூட, அனைத்து வயதினரையும் ஆட வைக்கும் அளவிற்கு சிறப்பாக இருக்கும். சிறுவயதில் இருந்தே இசை மீது கொண்ட ஆர்வமும், அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அளப்பரியது. நமக்கு எதில் திறமை இருக்கிறதோ அதில் நம் கவனத்தை செலுத்தினால் நிச்சயமாக சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக தேவா திகழ்கிறார்.
சமீபத்தில் பிடித்தத் தொழில் குறித்து தேவா பேசுகையில், “நான் சிறு வயதாக இருக்கும் போது ஆர்மோனியம் நன்றாக வாசிப்பேன். அந்த காலகட்டத்தில் ஆர்மோனியம் வாசிக்க ஆள் பற்றாக்குறை இருக்கும். யாராவது நம்மை கூப்பிட மாட்டார்களா என்று ஏங்குவேன். ஆனால் படிக்கும் வயதில் நான் ஆர்மோனியம் வாசிப்பதில், என் அப்பாவிற்கு துளியும் விருப்பமில்லை. பள்ளி விடுமுறை நாட்களில் எனது அப்பா வாசலிலேயே அமர்ந்திருப்பார்.
என்னைத் தேடி யாராவது வந்தால், என் மகன் தூங்கி விட்டான்; அவன் வரமாட்டான் என்று சொல்லி அனுப்பி விடுவார். உடனே நான் தூங்கவில்லை என்று வீட்டிற்குள் இருந்து சத்தமாகச் சொல்வேன். அந்த அளவிற்கு ஆர்மோனியம் வாசிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் தான் இன்று நான் இசைத்துறையில் சாதிக்கக் காரணம். வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வர வேண்டுமென்றால் யாராக இருந்தாலும், முதலில் உங்களுக்குப் பிடித்தத் தொழிலை லவ் பண்ணுங்கள். எதையும் விரும்பிச் செய்தால், அனைத்தும் சாத்தியமாகும்” என்று கூறினார் தேவா.
செய்யும் தொழிலை உண்மையாகச் செய்ய வேண்டுமென்றால், அதற்கு முதலில் அந்தத் தொழிலை நேசிக்க வேண்டும். அதை விடுத்து கடமைக்குச் செய்யக் கூடாது. இதைத் தான் இசையமைப்பாளர் தேவா நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார். இன்னும் சிறப்பாகச் சொல்வதென்றால் தன்னையே உதாரணமாகவும் காட்டியுள்ளார்.