நாம் பேசியதையே பேசிக்கொண்டிருக்கிறோம். அரைத்த மாவையே புதுப்புது கிரைண்டர்களில் அரைக்கிறோம். அடுத்தவர்களைப் பற்றியே பேசுகிறோம். நம்மை பற்றிப் பேச நமக்கு ஒன்றும் இல்லை"
"உதாரணமாகத் திரையரங்கில் பார்க்கும் நண்பரிடம் 'திரைப்படத்திற்கா?' என்று கேட்கிறோம்.
கடற்கரையில் காற்று வாங்கவா? மளிகைக்கடையில் பல சரக்குக்கா?"
கோயிலில் சாமி கும்பிடவா என்றெல்லாம் தேவையற்றுப் பேசுகிறோம். நாம் ஒரே நகைச்சுவையை எல்லோரிடமும் சொல்கிறோம். ஒரே சம்பவத்தை எல்லோரிடமும் பேசுகிறோம். நம்முடைய வெறுப்புக்குரியவர்களின் வீழ்ச்சியையும், விருப்பமானவர்களின் எழுச்சியையும் எத்தனையோ முறை பேசி இருக்கிறோம்.
நண்பர் சொன்னது உண்மைதானே! ஏதோ பேசவேண்டும் என்று நம் உதட்டிலிருந்து உதிர்க்கின்ற வார்த்தைகள்தானே அதிகம், உள்ளத்திலிருந்து குதிக்கின்றவை குறைவுதானே, ரமண மகரிஷி கூறிய கதையொன்று உண்டு.
ஒரு சீடர் தன்னுடைய குருவைக் கௌரவப்படுத்தும் பொருட்டு 'பரணி' என்ற பாட்டு வகையை எழுதி அறிவாளிகள் மத்தியில் அதைப் படிக்க முனைந்தார்.
அப்போது அந்தக் கல்வியாளர்கள், பரணி என்பது போரில் ஆயிரக்கணக்கான யானைகளைக் கொன்ற நாயகனைப் புகழ்ந்து பாடும் கவிதைப்பாங்கு என்றும், அது துறவிகளைப் பாட ஏற்றது அல்ல என்றும் மறுப்பும். எதிர்ப்பும் தெரிவித்தார்கள்.
சீடன். "நாம் எல்லோரும் குருவிடமே சென்று இது குறித்துத் தீர்வு காண்போம்" என்று கூறினான்.
எல்லோரும் குருவிடம் சென்றார்கள்.
தாங்கள் வந்த விஷயத்தைக் கூறினார்கள்.
குரு மௌனமாக இருந்தார். சில நாள்கள் கழிந்தன. குரு மட்டுமல்லர், அந்தப் பண்டிதர்கள் அனைவரும் அங்கேயே மௌனமாக இருந்தார்கள்.
சில நாட்களில் 'தாங்கள் ஏன் இங்கே வந்தோம்' என்கிற கேள்வியே அவர்கள் மனத்திலிருந்து மறைந்து போகுமளவு அந்த மௌனம் அடர்த்தியாக இருந்தது.
நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் சற்று அசைந்தார். அவர்களுக்கும் சுற்றுப்புற பிரக்ஞை வந்தது. அவர்கள் அனைவரும் "ஆயிரம் யானைகளை வெல்வது ஒன்றும் பெரிய செயல் அல்ல. நம் தன் முனைப்பு என்னும் காட்டு யானைகளை வென்று காட்டுவதே உண்மையான ஆற்றல். எனவே இவர் மீது பரணி பாடுவது பொருத்தமே" என்று முடிவு செய்தார்கள்.
நம் மௌனத்தைத் தீவிரப்படுத்தும்போதுதான் பேச்சின் ஆற்றலும் கூர்மையும் வெளிப்படும். ஒவ்வொரு சொல்லும் சூத்திரமானால் வாழ்க்கை மொத்தமுமே கவிதையாகும்.