

நமது நட்பு வட்டத்திலோ அல்லது குடும்பத்திலோ யாராவது ஒருவரைப் பார்த்திருப்போம். ஒரு சிறிய கேலிப் பேச்சைக் கூடத் தாங்க முடியாமல் கண்கலங்குவார்கள், அல்லது ஒரு சின்ன சத்தத்தைக் கேட்டால் கூடப் பதறிப்போய் எரிச்சல் அடைவார்கள். உளவியல் ரீதியாகப் பார்த்தால், இது ஒரு குறைபாடு அல்ல; இது ஒரு வகையான ஆளுமைத் தன்மை. இவர்களை 'அதிக உணர்திறன் கொண்டவர்கள்' என்று அழைக்கிறார்கள்.
சாதாரண மனிதர்களை விட, உணர்திறன் அதிகம் உள்ளவர்களின் மூளை நரம்பு மண்டலம் சற்று வித்தியாசமாக இயங்குகிறது. இவர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை மேலோட்டமாகப் பார்க்காமல், மிக ஆழமாகச் சிந்திப்பார்கள்.
உதாரணத்திற்கு, அலுவலகத்தில் அதிகாரி ஒரு சிறிய குறையைச் சுட்டிக்காட்டினால், மற்றவர்கள் அதைத் திருத்திக்கொண்டு கடந்து செல்வார்கள். ஆனால், உணர்திறன் மிக்கவர்கள், அந்த வார்த்தையை மட்டும் பார்க்காமல், அது சொல்லப்பட்ட விதம், அந்த அதிகாரியின் முக பாவனை, எதிர்காலத்தில் இதனால் என்ன நடக்குமோ என்ற கற்பனை என அனைத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள். இந்த அதிகப்படியான சிந்தனை தான் அவர்களை விரைவில் சோர்வடையச் செய்கிறது.
இவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய வரம் மற்றும் சாபம் Empathy எனப்படும் பச்சாதாபம் தான். அருகில் இருப்பவர் சோகமாக இருந்தால், இவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எதிரில் இருப்பவரின் மனநிலையை ஒரு 'ஸ்பாஞ்ச்' போல இவர்கள் உறிஞ்சிவிடுவார்கள். ஒரு சோகமான படத்தைப் பார்த்தால் கூட, நாள் முழுவதும் அந்தப் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிப்பார்கள். இப்படிப் பிறருடைய உணர்ச்சிகளையும் சேர்த்துச் சுமப்பதால், இவர்களுக்கு விரைவில் மன அழுத்தம் ஏற்படுகிறது.
இரைச்சல், அதிக வெளிச்சம், நெரிசலான இடங்கள் இவர்களுக்குப் பிடிக்காது. இவர்களின் ஐம்புலன்களும் மிகவும் கூர்மையானவை. எனவே, சத்தம் அதிகமாக இருந்தாலே இவர்கள் நிலைதடுமாறிப் போவார்கள். மற்றவர்களுக்குச் சாதாரணமான விஷயம், இவர்களுக்குப் பெரும் பாரமாகத் தோன்றும். ஒரு சிறு விமர்சனத்தைக் கூடத் தங்கள் சுயமரியாதையின் மீதான தாக்குதலாகவே இவர்கள் கருதுவார்கள்.
அதிக உணர்திறன் கொண்டவர்கள் பலவீனமானவர்கள் அல்ல; அவர்கள் மிகவும் நுட்பமானவர்கள். உலகச் சிறந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிறந்த ஆலோசகர்கள் பலரும் இந்த வகையைச் சார்ந்தவர்களே. ஒரு கண்ணாடிப் பாத்திரம் எப்படி அழகாகவும், அதே சமயம் கவனமாகக் கையாளப்பட வேண்டியதாகவும் இருக்கிறதோ, அப்படித்தான் இவர்களும்.
உங்கள் அருகில் இப்படிப்பட்டவர்கள் இருந்தால், அவர்களைக் கேலி செய்வதை நிறுத்திவிட்டு, அவர்களின் அந்த மென்மையான குணத்தை அங்கீகரியுங்கள். ஏனெனில், இந்த உலகம் இன்னும் மனிதத்தன்மையுடன் இயங்குவதற்குக் காரணமே இவர்களைப் போன்ற இரக்ககுணம் கொண்ட மனிதர்கள் தான்.