முடிவுக்கு ஆசைப்படுவதை விட்டு செயலாற்றுவதில் ஆசைப்படுங்கள்!
உங்களுக்கு மிகச்சிறந்த சாம்ராஜ்ஜியம் கிடைத்தாலும் முழு திருப்தியில்லாமல் உள்ளுக்குள் ஒரு ஏக்கம் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா?. என்ன கிடைத்தாலும் சரி ஒரு ஆசை உள்ளே எரிந்து கொண்டிருக்கிறதா?. விரிவடைந்து விரிவடைந்து எல்லையில்லாததுடன் கலந்துவிடத் துடிப்பதால் வேறு எதைக் கொடுத்தாலும் திருப்திவராமல் மனம் குறைபட்டுக்கொண்டிருக்கிறது.
ஆசை என்பது வெளியிலிருந்து வரும் வற்புறுத்தலால் இல்லாமல் உள்ளார்ந்த ஆசை உங்களை செலுத்தாது. நீங்கள் ஆசையை செலுத்துவீர்கள். கிரிக்கெட் ஆட ஆசைபட்டால் அதற்காக ஆசையை முழுமையாக பயன்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வெற்றி பெற ஆசையா? அதற்கான ஆசையை பயன்படுத்துவீர்கள். உங்கள் வாழ்க்கையே அதுதான் என்பதுபோல் பூரணமாக இயங்குவீர்கள். அந்த ஆட்டம் முடிந்ததும் ஆசையை சுருட்டி வைத்து விடுவீர்கள்.
வண்டியை குதிரைக்குப் பின்னால் கட்டினால் பிரச்னையில்லாமல் இழுத்துப் போகும். முன்னால் கட்டி குதிரையை இழுக்கச் சொன்னால் வண்டி தடம் புரண்டு போகும். சந்தோஷமும் ஆசையும் கூட குதிரையும் வண்டியும் போலத்தான்.ஆசையினால் சந்தோஷம் கிடைக்கும் என்று நினைக்காமல், உங்கள் சந்தோஷத்தின் வெளிப்பாடாக ஆசையை பயன்படுத்திப் பாருங்கள்.
ஒருவருக்குக் கடுமையான இதயவலி. காலை வரை தாக்குபிடித்தாலே ஆச்சர்யம் என்று சொல்லிவிட்டார். கொஞ்ச நேரம் அழுத அவர் மனைவி தன் கணவருக்கு காரட் அல்வா மிகப் ப்ரியம் என்பது நினைவுக்கு வர இரவே தயார் செய்து அவருக்குப் படைக்க ப்ரிட்ஜ்ஜில் வைத்துவிட்டார். இந்த மனிதருக்கு இரவில் விழிப்பு வந்து ப்ரிட்ஜ்ஜைத் திறந்து காரட் அல்வாவைப் பார்த்ததும் ஒரு ஸ்பூன் எடுத்தார். பொட்டென்று அவர் கையில் ஒரு அடி விழுந்தது. அவர் மனைவி கோபமாய் "உங்களுக்குப் படைப்பதெற்கென்று வைத்ததை இப்போதே சாப்பிட்டால் என்ன அர்த்தம்" என்று உறுமினாள்.
விரும்பியதை நோக்கிச் செயலாற்றும்போதே ஆனந்தத்தை அனுபவிக்காமல் முடிவில்தான் ஆனந்தம் கிடைக்கும் என்று காத்திருப்பது, உயிரோடு இருக்கும் போது சாப்பிட விடாமல் படையலலுக்காக வைத்திருப்பது போலத்தான்.
முடிவுக்கு ஆசைப்படுவதை விடுத்து, செயலாற்றுவதற்கே ஆசைபட்டுப் பாருங்கள் துன்பம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. உங்கள் சந்தோஷம் என்பது அப்புறம் வெற்றியா தோல்வியா என்கிற முடிவுக்காக கூட காத்திருக்காது.