‘தவறு’ என்பது எல்லோருமே செய்யக்கூடியதுதான். தவறு செய்யாத மனிதர்கள் இவ்வுலகில் இல்லை. தவறு செய்வதன் மூலமே ஒரு விஷயத்தை சரியாக செய்ய கற்றுக்கொள்ள முடியும். எனினும், ஒருவர் செய்த தவறை மன்னிக்கும் மனபக்குவம் இங்கு எத்தனை பேருக்கு உள்ளது. அத்தகைய மனப்பக்குவத்தை வளர்த்து கொள்வது மேலும் நம்மை மேன்மைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இதை தெளிவாக புரிந்துக் கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் வாழ்ந்து வந்த அரசர் ஒருவர் சிலைகளை சேர்த்து வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார். என்னதான் அவரிடம் அதிகமாக சிலைகள் இருந்தாலும், அவருக்கு மிகவும் பிடித்தது மூன்று சிலைகள் மட்டும் தான்.
இப்படியிருக்கையில், ஒருநாள் அந்த அரண்மனையில் வேலை செய்யும் வேலைக்காரன் ஒருவன் அந்த சிலையை சுத்தம் செய்யும்போது தவறுதலாக அதில் ஒன்றை உடைத்துவிடுகிறான். இதைப் பார்த்த அரசர் கோபத்தில் அந்த வேலைக்காரனுக்கு தூக்கு தண்டனைக் கொடுக்கிறார்.
இதைக் கேட்டதும் அந்த வேலைக்காரன் நல்லாயிருந்த மற்ற இரண்டு சிலையையும் அரசன் முன்பே போட்டு உடைக்கிறான். இப்போது அரசருக்கு கோபத்தை அடக்க முடியவில்லை. ‘ஏன் நல்லாயிருந்த சிலைகளை உடைத்தாய்?’ என்று அரசர் கேட்க அதற்கு அந்த வேலைக்காரன் என்ன பதில் கூறினான் தெரியுமா?
அந்த சிலைகள் எளிதாக உடையக்கூடியது. ஆகவே, இன்றில்லை என்றாலும் என்றைக்காவது ஒருநாள் ஒருவர் அந்த சிலைகளை தெரியாமல் உடைக்கத்தான் போகிறார்கள். எனக்கு ஏற்கனவே தூக்கு தண்டனை கிடைத்துவிட்டது. நான் சாவதற்கு முன்பு இருவரின் உயிரை காப்பாற்றிவிட்டு இறந்துப்போக முடிவு செய்தேன். அதனால்தான் அந்த இரண்டு சிலைகளையும் உடைத்தேன் என்று கூறினான்.
இப்போதுதான் அரசருக்கு தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பது புரிந்தது. சிலைகளை விட மனிதர்களின் உயிர்தான் பெரிது என்றும் தெரியாமல் செய்யும் தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கக்கூடாது என்பதும் அரசருக்கு புரிந்தது.
இந்த கதையில் வந்தது போல தவறு செய்வது மனிதர்களின் இயல்பு. ஆனால், அந்த தவறை மன்னிப்பது என்பது மாபெரும் குணமாகும். அந்த மனப்பக்குவம் நம்மிடமிருந்தால், வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம். முயற்சித்துதான் பாருங்காளேன்.