நம்முடைய வாழ்க்கையில் நமக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தாலும், சில சமயங்களில் அதிகமான தயக்கத்தாலேயே அதையெல்லாம் முயற்சிக்காமல் விட்டுவிடுவோம். நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தாமல் விடுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்துக்கொள்ள இந்த கதையை முழுமையாக படியுங்கள்.
ஒருநாள் வயதான ஒருவர் தன் தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது வழியில் ஒரு கழுகு முட்டையை பார்க்கிறார். அந்த இடத்தைச் சுற்றி கழுகு எங்காவது இருக்குமா? அந்த முட்டையை கொண்டு சென்று அதனிடம் சேர்த்துவிடலாம் என்று தேடுகிறார். ஆனால், எங்கு தேடியுமே கழுகு கிடைக்கவில்லை. இவரோ மனம் கேட்காமல் தன்னுடைய கோழிப் பண்ணையில் அந்த கழுகு முட்டையை கொண்டு வந்து வைக்கிறார்.
கோழியும் அது தன்னுடைய முட்டைதான் என்று நினைத்து அடைக்காக்க ஆரம்பிக்கிறது. சில நாட்களில் அந்த முட்டையிலிருந்து கழுகு குஞ்சு வெளிவருகிறது. கழுகு தன்னை கோழி என்று நினைத்து அந்த கோழிக்கூட்டத்திலேயே வாழ ஆரம்பிக்கிறது.
எல்லா கோழிகளும் மேயும்போது கழுகு மட்டும் வானத்தை நோக்கிப் பார்க்கிறது. வானத்தில் நிறைய கழுகுகள் பெரிய உயரத்தில் பறப்பதை பார்த்து, 'நாமும் கழுகாக பிறந்திருக்கக்கூடாதா? நாமும் வானத்தில் நிம்மதியாக பறந்திருக்கலாம்' என்று இந்த கழுகு நினைக்கிறது.
இப்படியே நினைத்து அந்த கழுகுக்கு ஒருநாள் வயதாகி இறந்துப் போகிறது. அந்த கழுகு ஒருமுறை தன்னுடைய தயக்கத்தை விடுத்து அதனுடைய சிறகை விரித்துப் பறக்க முயற்சித்திருந்தால், அதுவும் மற்ற கழுகுகளுடன் வானத்தில் பறந்திருக்கும். கடைசிவரை தான் ஒரு கழுகு தான் என்பதை உணராமலேயே இறந்துவிட்டது.
இதுபோலத்தான் நம் வாழ்க்கையிலும் நமக்கு நிறைய திறமையிருந்தும் பயத்தினால் அதை வெளிக்காட்டாமல் நிறைய வாய்ப்புகளை தவறவிட்டிருப்போம். இந்த கதையை கேட்ட நீங்கள் முடிவு பண்ணுங்கள். நாம் வானத்தில் பறக்கும் கழுகாக இருக்கப் போகிறோமா அல்லது தோட்டத்தில் மேயும் கழுகாக இருக்கப் போகிறோமா என்று. நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தயக்கம் காட்டாமல் முழுத்திறமையையும் பயன்படுத்தி முயற்சித்தாலே போதும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.