சாதாரணமாக துணி தைக்கும் தையல்காரரிடம் கொஞ்சம் கிழிந்து இருந்த ஆடைகளை தைக்கக் கொடுத்தால் சிலர் வாங்கி தைத்து தரமாட்டார்கள். பழைய கிழிந்த துணிகளை சுத்தமாக தொடுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். அதற்குப் பதிலாக புதிய துணிமணிகளான ஒரு ஜாக்கெட்டையோ அல்லது சல்வார் கமீஸ் போன்ற துணிமணிகளையும் கொடுத்து தைத்து தரச்சொன்னால், உடனடியாக வாங்கி வைத்துக் கொண்டு, எந்த தேதியில் வந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் குறித்து கொடுத்து விடுவார்கள்.
காரணம் பழைய துணிமணிகளை தைக்கும்பொழுது நேரம் மிகவும் அதிகமாக செலவாகும். தைப்பதும் அவ்வளவு எளிது கிடையாது. அதற்காக தைத்துக் கொண்டிருக்கும் நூலை மாற்ற வேண்டும். அப்படி மாற்றி தைத்து கொடுத்தாலும் அதற்கான கூலி மிகவும் குறைவாகத்தான் கிடைக்கும். இதனால் முழுமையாக செய்யும் வேலையும் பாதியில் நின்றுவிடும் என்பதால் இது போன்ற கொசுறு வேலைகளை செய்ய அவர்கள் விரும்ப மாட்டார்கள். அதற்காக தைப்பவரிடம் கொடுத்தால் தைத்துக் கொடுப்பார்கள். அவர்கள் அந்த வேலையை மட்டும்தான் செய்வார்கள். இதை கண்கூடாகக் கண்டு வருவது நம் வாடிக்கை.
சூஃபி அறிஞரான சூனூன் என்பவர் கல்வி நிலையம் நடத்தி வந்தார். புதிதாக மாணவனாகச் சேர வருபவரிடம் "இதற்கு முன் நீ எந்த ஆசிரியரிடமாவது கல்வி கற்று இருக்கிறாயா? என்னிடம்தான் முதன்முறையாக கல்வி கற்க வருகிறாயா" என்று கேட்பாராம்.
இங்குதான் நான் முதல் முறையாக கல்வி கற்க வருகிறேன் என்று பதில் வந்தால் உரிய கட்டணம் வாங்குவார். ஏற்கனவே ஒரு ஆசிரியரிடம் கல்வி கற்று இருக்கிறேன் என்றால் இரட்டிப்பு பணம் வாங்குவார். அவரின் விந்தையான இந்த நடவடிக்கையை கண்டு எல்லோரும் வியப்பு அடைந்தனர்.
நண்பர் ஒருவர் அவரிடம் "ஏற்கனவே கல்வி கற்றவர்க்கு நீங்கள் கற்றுத் தர வேண்டியது அதிகம் இருக்காது. அவரிடம் அரை பங்கு கட்டணம் வாங்கினால் போதும். புதிதாக கற்க வருபவரிடம் முழு தொகையையும் வாங்க வேண்டும். இதுதான் உலக வழக்கம். ஆனால் நீங்களோ புதிதாக கற்க வருபவரிடம் வாங்குவதைப்போல ஏற்கனவே கல்வி கற்று வருபவர்களிடம் இரட்டிப்பு கட்டணம் வாங்குகிறீர்களே அது ஏனென்றார்".
அதற்கு அவர்" நண்பரே நான் கற்றுத்தரும் கல்வி மாறுபாடானது. என் வழிமுறைகள் வேறுபாடு ஆனவை. ஏற்கனவே கல்வி கற்றவர் என்னிடம் கற்றால் அவர் கற்று இருப்பதை எல்லாம் மறக்க வைக்க நான் உழைத்தாக வேண்டும். புதிதாக வருபவர் நான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வார். அவருக்காக நான் அதிகம் உழைக்க வேண்டியது இல்லை. அதனால்தான் இப்படிப்பட்ட கட்டணம்" என்று விளக்கினார்.
ஆமாம் புதிதாக பிசைந்த பச்சை களிமண்ணில் பானைகள் செய்வதுதான் எளிது. அந்த களிமண்ணை எப்படி மோல்டு செய்தாலும் நாம் விரும்பியது கிடைக்குமல்லவா?
சாமர்த்தியம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம்.
தைரியம் இருந்தால் எப்படியும் சாதிக்கலாம்.
சாமர்த்தியமும் தைரியமும் கற்பிப்பவர் கையிலே!