"Happiness consists of living each day as if it were the first day of your honeymoon and the last day of your vacation. - Leo Tolstoy.
மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு நாளையும் உங்கள் தேனிலவின் முதல் நாளாகவும், உங்கள் விடுமுறைக் காலத்தின் கடைசி நாளாகவும் உணர்ந்து வாழ்வது."- லியோ டால்ஸ்டாய்.
உலகத்தின் ஆகச்சிறந்த எழுத்தாளராக அறியப்பட்டு என்றும் புகழப்படும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் மகிழ்ச்சி குறித்த கருத்தே இது. ஒரு மனிதனின் வெற்றிக்கு வித்திடுவதே புறச்சூழல் எப்படி இருப்பினும் அவன் அகத்தில் மலரும் மகிழ்ச்சியே. மகிழ்வான ஒருவரால் மட்டுமே நல்ல விழிப்புணர்வுடன் செயல்களில் கவனம் செலுத்த முடியும்.
ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சியில் மனிதன் தனக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் பெற்றுவிட்டாலும் தனக்குள் இருக்கும் அமைதியை இழந்து மகிழ்வற்று வாழ்வதைப் பார்க்கிறோம்.
இயற்கையின் படைப்பில், நம் 125 ஆண்டுகள் வரை நாம் உயிருடன் வாழ ஏதுவாக நமது உடல் உறுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் இத்தனை ஆண்டுகள் வாழ்வது சாத்தியமா? 50 வருடங்களை நிறைவு செய்வதற்குள்ளாகவே அலுத்துப் போய் விடுகின்றனர். காரணம் நமது மகிழ்ச்சியற்ற மனநிலை.
ஒரு இளைஞன் நீண்ட நாட்களாக தெருவாக எதையோ தேடிக் கொண்டே இருந்தான் இதை கவனித்துக் கொண்டே இருந்த ஒரு பெரியவர் அவனிடம் சென்று "மகனே நீ எதைத் தேடிக் கொண்டிருக்கிறாய்? "என்று கேட்கிறார் அவன் சொல்கிறான்" ஐயா நான் என் கனவில் கடவுளை கண்டேன் அவரிடம் நான் நீண்ட நாள் உயிர் வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும் என்று கேட்டேன். அவர் சொன்னார் மகிழ்ச்சி என்னும் புதையலைத் தேடிக் கண்டுபிடி. அதனால் நீ நீண்ட ஆயுளை பெறுவாய் என்று சொன்னார். அதன்படி நான் தினந்தோறும் மகிழ்ச்சி எனும் புதையல் எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டே இருக்கிறேன்" என்று சொன்னான்.
அதைக் கேட்டு "அட முட்டாளே" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அந்த பெரியவர் "தம்பி கடவுள் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். அந்த மகிழ்ச்சி புதையல் வேறு எங்கும் இல்லை உன் மனதிற்குள்தான் இருக்கிறது. நீ அதை விட்டுவிட்டு வெளியில் தேடினால் எப்படி கிடைக்கும். சென்று உன் செயல்களை வெற்றிகரமாக செய்து மகிழ்ச்சியாக வாழு. உனக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்" என்று புத்திமதி சொல்லி அனுப்பினார்.
இதுதான் இப்படித்தான் நிறைய பேர் மகிழ்ச்சியை வெளியில் தேடிக் கொண்டிருக்கின்றனர். நமக்குள்ளே தான் இருக்கிறது நமது மகிழ்ச்சி. அதை கண்டுகொண்டால் நமது செயல்களின் வெற்றியும் நிச்சயம்.
ஆனால் அந்த மகிழ்ச்சியும் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? கடமைக்கு நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று காட்டாமல் புதுத்துணையுடன் தேனிலவு செல்லும் முதல் நாளில் பொங்கி எழும் இடையறாத மகிழ்ச்சிபோல இருக்கவேண்டும். விடுமுறை நாளை முடிகிறது எனும் நிலையில் முதல்நாள் அனுபவிக்கும் அனைத்திலும் ஒருவித மட்டற்ற மகிழ்ச்சியை உணர்வோம். அப்படி இருக்க வேண்டும் வெற்றி நோக்கி செலுத்தும் நமது மகிழ்வும் என்கிறார் டால்ஸ்டாய். இவர் சொன்னது போல் மகிழ்ச்சியுடன் கோதாவில் இறங்கி மகிழ்வான வெற்றிக் கோப்பைகளோடு வாழ்வோம்.