நம்முடைய வாழ்க்கையில் வெற்றியடைய நமக்கு கவனம் மிகவும் முக்கியம் என்று சொல்வார்கள். ஆனால் நாம் போதிய அளவு நம் இலக்கை நோக்கி கவனம் செலுத்துகிறோமா இல்லை நமக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறதா? என்பதைப் பற்றி புரிந்துக்கொள்ள இந்த கதையை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்க.
ஒரு கிராமத்தில் இருக்கும் கோவிலில் துறவிகள் பலர் வாழ்ந்து வந்தனர். அங்கிருக்கும் ஒரு துறவிக்கு அந்த கோவிலில் இருக்க பிடிக்கவில்லை. ஒருநாள் குருவிடம் சென்று அந்த துறவி அவருடைய மனதில் இருப்பதை கூறுகிறார். இங்கிருக்கும் பலபேர் என்னை பற்றி முதுகுக்கு பின்னாடி பேசி கிண்டல் செய்கிறார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் உங்களால் முடிந்தால், என்னை வேறு இடத்திற்கு மாற்றிவிட முடியுமா? என்று கெஞ்சிக் கேட்கிறார்.
இப்போது குரு ஒரு ஸ்பூன் நிறைய தண்ணீரை நிரப்பி அவரிடம் கொடுக்கிறார். இதை எடுத்துச் சென்று இந்த கோவிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு வரவேண்டும். ஆனால் இதிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட சிந்தக்கூடாது. அவ்வாறு வந்துவிட்டால் இங்கிருந்து உன்னை உடனேயே மாற்றிவிடுகிறேன் என்று கூறினார்.
அதை கேட்ட துறவியும் நாம் இங்கிருந்து கிளம்ப போகிறோம் என்ற சந்தோஷத்தில் அந்த வேலையை மிகவும் பொறுமையாகவும், கவனமாகவும் செய்து முடிக்கிறார். குரு வைத்த பரிட்சையில் வெற்றி அடைந்த துறவி மகிழ்ச்சியாக என்னை எந்த இடத்திற்கு மாற்றப்போகிறீர்கள் என்று குருவிடம் கேட்க, அதற்கு குருவும் இப்போது நீ கோவிலை சுற்றி வரும்போது உன்னை மற்றவர்கள் கிண்டல் செய்வதை நீ கவனித்தாயா? என்று கேட்கிறார்.
அதற்கு துறவியோ என்னுடைய கவனம் முழுவதும் அந்த ஸ்பூனில் இருந்த நீர் சிந்திவிடக்கூடாது என்பதில் இருந்ததால், என் முதுகுக்கு பின்னாடி பேசிய எதையும் நான் கவனிக்கவில்லை. சொல்லப்போனால், எனக்கு எதுவும் கேட்கவில்லை என்று கூறினார்.
இந்த கதையில் வருவது போலத்தான் நம்மை சுற்றியிருப்பவர்கள் நம்மை பற்றி எதிர்மறையாக பேசுவதும், கிண்டல் செய்வதுமாகத்தான் இருப்பார்கள். ஆனால் நம்முடைய கவனம் இலக்கின் மீது மட்டுமிருந்தால், அதையெல்லாம் தவிடுப்பொடியாக்கி நம் இலக்கை நிச்சயமாக அடைய முடியும். முயற்சித்துப் பாருங்களேன்.