வாழ்க்கையில் சில நேரங்களில் கூச்ச சுபாவத்தினாலோ, தயக்கத்தினாலோ அல்லது பயத்தாலோ நம்முடைய மனதில் தோன்றும் கருத்தை தைரியமாக வெளிப்படுத்தாமல் விட்டுவிடுவோம். மனதில் தோன்றும் கருத்தை தைரியமாக வெளிப்படுத்துவது நம்முடைய வாழ்க்கையை மாற்றியமைக்கும் தருணத்தைக்கூட உருவாக்கலாம். இதை தெளிவாக புரிந்துக்கொள்ள இந்த கதையை முழுமையாக படியுங்கள்.
ஒரு நாட்டின் ராஜா தினமும் காலையில் எழுந்ததும் சூரிய உதயத்தை பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதே குறிக்கோளுடன்தான் தினமும் இரவு தூங்க போவார். அப்படித்தான் அன்றும் வழக்கம்போல, காலையில் எழுந்து சூரியனை பார்க்கலாம் என்று ஜன்னலை திறக்கும்போது, தவறுதலாக அங்கேயிருந்த பிச்சைக்காரனை முதலில் பார்த்துவிடுகிறார். இவன் முகத்திலே விழித்துவிட்டோமே? என்று கோவமாக திரும்பும்போது தலையிலே நன்றாக இடித்துக் கொள்கிறார்.
இதனால், ராஜாவிற்கு தலையிலிருந்து ரத்தம் வர ஆரம்பிக்கிறது. இதற்கெல்லாம் காரணம் அந்த பிச்சைக்காரன் முகத்தில் விழித்ததுதான் என்று நினைக்கிறார் ராஜா. கோபமும், வலியும் பொருக்க முடியாமல் அந்த பிச்சைக்காரனை இழுத்துவர சொல்கிறார். தன்னுடைய காயத்திற்கு காரணம், இன்று இவன் முகத்தில் விழித்ததுதான் என்று கூறி பிச்சைக்காரனுக்கு மரண தண்டனை கொடுத்துவிடுகிறார்.
இதை கேட்ட பிச்சைக்காரன் கொஞ்சம் கூட கலங்காமல் சிரிக்க ஆரம்பிக்கிறான். இதை பார்த்த மக்களுக்கும் சரி, அரசனுக்கும் சரி ஒன்றுமே புரியவில்லை. அதற்கு அந்த பிச்சைக்காரன் சொன்னான், காலையில் என் முகத்தில் விழித்ததற்கு உங்களுக்கு ஒரு சின்ன காயம்தான் ஏற்பட்டது. ஆனால், நான் உங்கள் முகத்தில் விழித்ததற்கு என் உயிரே போகப்போகிறது. அதை நினைத்து சிரித்தேன் என்று கூறினான்.
இதை கேட்டதும்தான் அரசருக்கு தான் செய்த தவறு புரிகிறது. உடனே அந்த பிச்சைக்காரனின் மரண தண்டனையை ரத்து செய்து அவனை விடுதலை செய்து அனுப்பி வைக்கிறார்.
நம்முடைய வாழ்க்கையில் தைரியம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது இந்த கதை மூலம் புரிந்திருக்கும். பேச வேண்டிய இடத்தில் தைரியமாக நம் கருத்தை பேசுவது மிகவும் முக்கியமாகும். அது நம்முடைய வாழ்க்கையை மாற்றும் தருணத்தை கூட உருவாக்கலாம் இந்த கதையில் நடந்தது போலவே! முயற்சித்துப் பாருங்கள்.